வெளியிடப்பட்ட நேரம்: 16:05 (10/01/2018)

கடைசி தொடர்பு:16:05 (10/01/2018)

'ஜெயலலிதா சொன்னது இந்த ஆட்சியாளர்களுக்குத் தெரியவில்லை'- வேதனையில் போக்குவரத்துத் தொழிலாளர் சங்கம்

தமிழக போக்குவரத்து ஊழியர்களின் போராட்டம் 7-வது நாளாக நடைபெற்றுவருகிறது. இன்று, சேலம் மண்டலத்துக்கு உட்பட்ட அனைத்து போக்குவரத்துத் தொழிலாளர்களும் சேலம் கோரிமேட்டில் உள்ள தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியம் தொழிலாளர் அலுவலர் அலுவலக வளாகத்தின் எதிரே 1000-த்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் முற்றுகைப் போராட்டத்தை நடத்தினார்கள்.

இப்போராட்டத்தில் கலந்துகொண்ட பணியாளர்கள் சம்மேளனத்தின் மாவட்ட பொதுச்செயலாளர் மனோகரன், 'தமிழக போக்குவரத்துத் தொழிலாளர்களின் நேர்மையான போராட்டத்தை அரசு ஊழியர்கள்,பொதுமக்கள் உட்பட அனைத்து தரப்பு மக்களும் உணர்ந்திருக்கிறார்கள். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, போக்குவரத்துத்துறை சேவைத்துறை. அதில் லாப, நஷ்டம் பார்க்கக் கூடாது. நஷ்டம் ஏற்படும்போது அரசு அதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறினார். அவருடைய வழித்தோன்றலாக ஆட்சிசெய்யும் இந்த ஆட்சியாளர்களுக்கு அது தெரியவில்லை என்பது வருத்தத்தை அளிக்கிறது.

போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு புதிய சம்பள முறையை அமல்படுத்தக் கோரி, 23 கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தியும் உடன்பாடு ஏற்படவில்லை. 7-வது ஊதியக் குழு அடிப்படையில் போக்குவரத்து அதிகாரிகளுக்கு வழங்கப்படுகிறது. ஆனால் தொழிலாளிகளுக்கு மறுக்கப்பட்டு, ஒரே துறையில் இரு வேறுபட்ட ஊதியம் என்றால் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? போக்குவரத்துத் தொழிலாளர்களின் சம்பளத்தில் பிடித்தம்செய்த பி.எஃப், எல்.ஐ.சி-க்கு தொகைகளை சம்பந்தப்பட்ட துறையிடம் ஒப்படைக்காமல், 7000 கோடிக்கு மேற்பட்ட தொகையை அரசு எடுத்திருக்கிறது. மத்திய அரசு ஊழியர்களுக்கு 7-வது ஊதியக் குழு அடிப்படையில், ஒரு தொழிலாளிக்கு குறைந்த பட்சம் 19,500 ரூபாய் வழங்க வேண்டும். தமிழகத்தில், பல துறைகளில் இது நடைமுறையில் இருக்கிறது. ஆனால், ஒரு நாளைக்கு 1000 பயணிகளோடு 22 மணி நேரம் 150-க்கும் மேற்பட்ட கி.மீட்டர் ஓட்டும் தொழிலாளிக்கும் இந்தத் தொகையை அமல்படுத்தவில்லை. இப்படிப் பல குளறுபடிகள் இருக்கின்றன.

அதனால், கடந்த  7 நாள்களாக அமைதியான அறவழியில் போராட்டம் செய்துவருகிறோம். பண்டிகைக் காலம் நெருங்கிவரும் நிலையில், மக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகி இருக்கிறார்கள். பொதுமக்களின் நிலையைக் கருத்தில் கொண்டாவது அரசு பேச்சுவார்த்தைக்கு எங்களை கூப்பிட வேண்டும். ஆனால், தொழிலாளிகள்மீது ஈகோ பார்த்துக்கொண்டு, மக்களின் கஷ்டங்களைக் கண்டுகொள்ளாமல் இருக்கிறது. இந்த அரசுக்கு தொழிலாளர்கள் மீதும் அக்கறை இல்லை. பொதுக்கள் மீதும் அக்கறை இல்லை என்பதையே இது காட்டுகிறது' என்றார்.