வெளியிடப்பட்ட நேரம்: 17:29 (10/01/2018)

கடைசி தொடர்பு:17:29 (10/01/2018)

சட்டசபையில் தினகரன்... சமாளிக்க ஆளும் கட்சியினருக்கு சில ஐடியாக்கள்!

பொதுவா மாணவர்கள் ஃபர்ஸ்ட் டைம் காலேஜுக்குப் போனால் அவங்களைத்தான் ராகிங் பண்ணி கலாட்டா பண்ணுவாங்க. ஆனால், தினகரன் முதன்முதலா சட்டசபைக்குப் போனதிலிருந்து, `வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்' மாதிரி, இவர்தான் மத்தவங்களை ராகிங் பண்றார்! ``யாரும் பார்க்காதபோது, எடப்பாடி-பன்னீர் அணியைச் சேர்ந்த அமைச்சர் ஒருவர் கையெடுத்துக் கும்பிட்டு வணக்கம் சொன்னார். காலையில் பேரவைக்கு வெளியே என்னைப் பார்த்த இரண்டு அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் பதறியடித்து பேரவைக்குள் சென்றுவிட்டார்கள்!" என்றெல்லாம் ஏகத்துக்குக் கலாய்த்து  வருகிறார்! 

இதையெல்லாம் பார்க்கிறப்ப, அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் சட்டசபையில எப்படியெல்லாம் நெளிஞ்சுக்கிட்டு உட்கார்ந்திருப்பாங்கன்னு புரியுது. என்ன இருந்தாலும் கூவத்தூர் டச் மறந்திடுமா என்ன?! ஏற்கெனவே, ஓ.பி.எஸ்., ஸ்டாலினைப் பார்த்து சிரிச்சார்ங்கிறதுதான் பெரிய பிரச்னையாகி அவரோட பதவிக்கே ஆப்பாக அமைஞ்சுது! இப்போ தினகரனைப் பார்த்து அ.தி.மு.க-வினர் சிரித்தாலும் அதே ஆப்பு பாய்வதற்கு வாய்ப்பிருப்பதால், இதோ, சட்டசபை நாள்களில் தினகரனின் பார்வையிலிருந்து தப்பிக்க அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்களுக்கு நம்மாலான சில ஐடியாக்கள்!

தினகரன்

நவக்கிரகம் மாதிரியே சட்டசபைக்குள்ள இருந்து பழகிடுங்க. எப்பவுமே அவரோட முகமும் உங்க முகமும் நேருக்குநேர் சந்திக்காதபடி உட்காரவும் நடக்கவும் பழகிக்கோங்க! அவர் வேணும்னே உங்களைச் சுற்றிச்சுற்றி வந்தாலும் நீங்களும் அதே வேகத்துல சுத்துங்க. வேற வழியில்ல!

தப்பித்தவறி எதிரில் அவரைப் பார்த்துட்டால். அவரே உங்களைப் பார்த்துக் கும்பிட்டாலும் பதிலுக்குக் கும்பிட்டுடாதீங்க. பிறகு, வெளியில வந்துட்டு நிருபர்களைச் சந்திச்சு உங்களை அவரோட ஸ்லீப்பர் செல்னு சொல்லிடுவார்! அப்புறம் உங்க அலுவலகத்துக்கு அன்னிக்கே ரெய்டு வந்தாலும் வந்திடும் மக்களே... உஷார்!

அவர் சட்டசபையில் எப்பவாவது எழுந்து பேசினால், பழக்கதோஷத்துல மேஜையைத் தட்டிடாதீங்க. ஏன்னா, அவரும் உங்களைச் சோதிக்கிறதுக்காகவே அடிக்கடி `புரட்சித்தலைவி'னு சொல்லி ஜெயலலிதாவைப் பாராட்டுவார்! உங்களுக்கும் அனிச்சையா கை மேஜையைத் தட்டிடும். பல வருஷப் பழக்கமாச்சே! அவர் சொல்ற புரட்சித்தலைவி வேற, நீங்க சொல்ற புரட்சித்தலைவி வேறனு மனசுக்குள்ளயே அடிக்கடி சொல்லிக்கோங்க!

தினகரன்

சில நேரம் முதலமைச்சரையோ, துணை முதலமைச்சரையோ, சபாநாயகரையோ கேலி, கிண்டலா ஏதாவது பேசினாலும் பேசுவார். அப்பல்லாம் ஆளோட ஆளா நீங்களும் எதிர்ப்புக்குரல் குடுங்க! ஆனால், அவரோட கண்ணுக்குத் தெரியாமல் கூட்டத்துக்குள்ள பதுங்கிக்கோங்க! நாளைக்கே அவரோட டீமுக்குப் போக வேண்டி வரலாம்! அவரை எதிர்த்து குரல்குடுக்கலைன்னா இந்தப் பக்கம் ரெய்டு வந்தாலும் வரலாம். அதனால ஈயம் பூசின மாதிரியும் இருக்கணும்... பூசாத மாதிரியும் இருக்கப் பழகிக்கணும்!

சட்டசபையில அவர் மட்டும் தனியா பின் சீட்டுல இருக்காறேன்னு நினைச்சுட்டு பரிதாபப்பட்டு பேச்சு கொடுக்கலாம்னோ, கம்பெனி கொடுக்கலாம்னோ பழைய பாசத்துல அவர் பக்கத்துல போயிடாதீங்க! திடீர்னு விக்கல் எடுக்கிற மாதிரி சத்தம் கொடுப்பார். நீங்களும் யதார்த்தமா வாட்டர் பாட்டிலை அவர் பக்கமா நீட்டுனீங்கன்னுவைங்க... உங்களுக்கு தண்ணியிலதான் கண்டமே! அதனால அவர் விக்கினாலும் சரி, இருமினாலும் சரி, ஹலோ ஹலோன்னு கூப்பிட்டாலும் சரி, காதுல விழாத மாதிரி இருந்துக்கோங்க! வேணும்னா காதுல பஞ்சை வைச்சுக்கிட்டு சட்டசபைக்குப் போறது உத்தமம். சபை நிகழ்ச்சி எதுவும் காதுல கேட்கலைன்னாலும், குத்துமதிப்பா ஆளோட ஆளா மேஜையைத் தட்டிட்டு வந்திடுங்க!

எதிர்க்கட்சியோடு தினகரன் கடுமையா வாக்குவாதம் பண்ணினார்னா, ஏதோ திகில் படம் பார்க்கிற மாதிரி கையால கண்ணை மூடிக்கிட்டு கைவிரல் ஓட்டை வழியா நைஸா பாருங்க. அந்த நேரம் சிரிக்கவோ முறைக்கவோ கூடாது. சாந்தமா, உங்களுக்குச் சம்பந்தமே இல்லாத மாதிரி பார்க்கணும்!

முடிஞ்சவரைக்கும் சபை நடவடிக்கையில் அதிகமா கலந்துக்காமல் பட்டும்படாமல் இருந்துக்கோங்க! ரொம்ப ஆர்வமா ஏதாவது நீங்க பேசினாலோ, அவர் குறுக்கப் புகுந்து கேள்வியெழுப்பினாலோ பிறகு வண்டு முருகன் வடிவேலு மாதிரி உங்களுக்கு ரோலிங் ஆகிடும்! பிறகு எல்லா சேனல்கள்லயும் உங்க ரோலிங் பேச்சைத் திரும்பத் திரும்பப் போட்டு அசிங்கப்படுத்துவாங்க! இதெல்லாம் தேவையா? அதனால, அடுத்த தேர்தல் வர்ற வரைக்கும் சட்டசபையில எந்தச் சிக்கல்லயும் மாட்டாம தப்பிக்கிற வழியைப் பாருங்க மக்களே... அம்புட்டுதான்!