வெளியிடப்பட்ட நேரம்: 16:45 (10/01/2018)

கடைசி தொடர்பு:16:45 (10/01/2018)

புதுச்சேரியில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு; ஆண்களை முந்தினர் பெண்கள்

புதுச்சேரி மாநிலத்தின் திருத்தப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் சத்தியேந்திரசிங் துர்சாவத் இன்று வெளியிட்டார்.

புதுச்சேரி

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் ஜனவரி 1-ம் தேதியைத் தகுதி நாளாகக் கொண்டு 25 சட்டமன்ற தொகுதிகளின் வாக்காளர் பட்டியலில் புதிய வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தம் செய்யும் பணி கடந்த 2017 செப்டம்பர் 15 முதல் அக்டோபர் 14-ம் தேதி வரை நடைபெற்றன. அவற்றையடுத்து இறுதி வாக்காளர் பட்டியல்களை புதுச்சேரி மாவட்டத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளிடம் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

அப்போது மாவட்டத் தேர்தல் அதிகாரியும் மாவட்ட ஆட்சியருமான சத்யேந்திரசிங் துர்சாவத் அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளிடம் இறுதி செய்யப்பட்ட வாக்காளர் பட்டியலை வழங்கினார். வரைவு வாக்காளர் பட்டியலின்படி புதுச்சேரி மாவட்டத்தில் மாகே, ஏனாம் உள்பட மொத்தம் 7,99,609 வாக்காளர்கள் உள்ளனர். அதில் 3,79,564 ஆண் வாக்காளர்களும் 4,19,976 பெண் வாக்காளர்களும் 69 மூன்றாம் பாலின வாக்காளர்களும் இடம்பெற்றிருக்கின்றனர். இன்று முதல் இந்த இறுதி வாக்காளர் பட்டியல் அந்தந்த தொகுதிகளுக்குட்பட்ட வாக்குச்சாவடிகளில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட இருக்கின்றன.

நீங்க எப்படி பீல் பண்றீங்க