வெளியிடப்பட்ட நேரம்: 17:25 (10/01/2018)

கடைசி தொடர்பு:17:25 (10/01/2018)

`1,000 ரூபாய்க்கு வாங்கி 7,000-க்கு விற்பனை! தண்ணீர் பஞ்சத்தால் கல்லாகட்டும் வியாபாரிகள்

புதுக்கோட்டை நகரிலும் அதைச் சுற்றியுள்ள திருவப்பூர், திருக்கோகர்ணம் உள்ளிட்ட பகுதிகளிலும் புதிதாகக் குடிநீர் விற்பனை கனஜோராக நடக்கின்றன. ஒரு குடம் தண்ணீரின் விலை ஆறு ரூபாயாகவும் ஏழு ரூபாயாகவும் விற்கப்படுகின்றன. புதுக்கோட்டை நகருக்கே இந்த நிலைமையா என்று அதிர்ந்துபோய் விசாரித்தோம்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்து ஆடினாலும் நகரில் மட்டும் அந்தப் பிரச்னை எழுவதில்லை. காரணம், இங்குள்ள நிலத்தடி நீரே குடிப்பதற்கு தகுதி கொண்டதாக இருப்பதுதான். ஆனாலும், மக்கள் நிலத்தடி நீரை சமையல் உள்ளிட்ட ஏனைய விஷயங்களுக்கும் குடிப்பதற்கு காவிரி நீரையும் பயன்படுத்தினார்கள். இந்த நிலையில், காவிரி நீர் குழாய்கள் ஆங்காங்கே உடைப்பெடுத்து அதில் சாக்கடை கலந்து வருவதாகப் புகார்கள் எழுந்தன. இவற்றைத் தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் உடைப்புகளைச் சரி செய்தாலும் காவிரி நீர் கலங்கலாகவே வரும் நிலை நீடித்திருக்கிறது. நகர மக்கள் குடிப்பதற்குத் தண்ணீருக்குத் தவிக்கவே, அந்த வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்திக்கொண்டது ஒரு வியாபாரக் கும்பல். மினிவேனை வாடகைக்கு அமர்த்தி, அதில் 1,000 லிட்டர் கொள்ளளவுகொண்ட இரண்டு சின்டெக்ஸ் டேங்குகளைக்கட்டி, 100 லிட்டர் தண்ணீர் வெறும் 50 ரூபாய் வீதம் 2,000 லிட்டர் தண்ணீரை 1,000 ரூபாய்க்கு வாங்கி, அதை 6,000 முதல் 7,000 ரூபாய் வரை விற்று தினமும் கல்லாகட்டுகிறது.

இதுபற்றி தண்ணீர் வியாபாரி ஒருவரிடம் பேசினோம். "நான் இந்தத் தண்ணீர் வியாபாரத்தை மூணு மாதங்களாகச் செய்துகிட்டிருக்கேன். போர்வெல் வெச்சிருக்கிறவங்ககிட்டேருந்து 2,000 லிட்டர் தண்ணீரை 1,000 ரூபாய்க்கு விலைக்கு வாங்குறோம். அதை விற்கும்போது,  ஒரு குடத்துக்கு ஆறு ரூபாய் வாங்குவேன். இன்னும் சிலபேர் ஏழு ரூபாய் வரை வாங்குறாங்க. சில சமயம் வாடிக்கையாளர்களே குடுக்குற காசை குறைச்சும் குடுப்பாங்க. அதையும் வாங்கிப் போட்டுக்கிறதுதான். எங்களுக்கு தண்ணீர் கொள்முதல், வண்டி வாடகை, டீசல், எல்லா செலவும் போக, தினமும் 1,500 ரூபாய் வரை கிடைக்கும்" என்றார்.

தண்ணீரை விலைக்கு வாங்கிக்கொண்டிருந்த மீனாட்சி என்பவரிடம் பேசினோம். "நாங்க ரஸ்க் தயாரிக்கிறோம். இங்க வேலை பார்க்கிறவங்களுக்கும் எங்களுக்கும் குடிக்க தண்ணீர் விலைக்குதான் வாங்குறேன். காவிரி தண்ணீர் இப்பல்லாம் கலங்கலா சுத்தமே இல்லாமத்தான் வருது. அதைப் பிடிக்கிறதையே விட்டாச்சு. தினமும் ஐந்து குடம் தண்ணீரை விலைகொடுத்துதான் வாங்குறேன்" என்றார். அதாவது, எந்த நிலத்தடி நீரை பலவருடங்களாகக் குடிப்பதற்குப் பயன்படுத்தி வந்தார்களோ அதே தண்ணீரை இப்போது,காசு கொடுத்து வாங்கிக் குடிக்கிறார்கள் புதுக்கோட்டை நகர மக்கள்.