`108 ஆம்புலன்ஸ்ல ஸ்பீடு பத்தலை சார்' - கலெக்டரிடம் மனு கொடுத்த டிரைவர்கள்!

 

முக்கிய சாலைகள், குக்கிராமங்களில் உள்ள சாலைகள் என்று எங்கு விபத்துகள் நடந்தாலும், இதர வகையில் மக்களுக்கு உடல் உபாதைகள் ஏற்பட்டால், போன் செய்தால் துரிதகதியில் சம்பந்தப்பட்டவர்களை வந்து அழைத்துப்போய் மருத்துவமனைகளில் சேர்ப்பதில் 108 ஆம்புலன்ஸ் சேவை மக்களுக்குப் பெரும் உதவியாக இருந்துவருகிறது. இந்நிலையில், "கரூர் மாவட்டத்தில் ஓடும் 14 மற்றும் 108 ஆம்புலன்ஸ்களும் ரிப்பேரா இருக்கு. ஸ்பீடாகவும் போகமாட்டேங்குது. அதனால், வேற ஆம்புலன்ஸ்களை வழங்குங்கள் என்று கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் கோவிந்தராஜிடம்  கோரிக்கை மனுவை கொடுத்துள்ளனர்.

போக்குவரத்துத்துறை தொழிலாளர்கள் போராட்டம் நடத்திவரும் நிலையில், கரூர் மாவட்ட ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் இப்படி ஒரு கிடுக்கிப்பிடி கோரிக்கையை வைத்திருப்பது பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது. இதுபற்றி, நம்மிடம் பேசிய தமிழ்நாடு 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் சங்கத்தின் கோவை மண்டல செயலாளர் எம்.செந்தில்குமார், "கரூர் மாவட்டத்துல 14  மற்றும்108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் இருக்கு. இந்த ஆம்புலன்ஸ்களில் 70 ஊழியர்கள் பணிபுரிகிறார்கள். ஆனால், அந்த ஊழியர்களுக்கு எந்த அடிப்படை வசதிகளும் செய்யப்படவில்லை. பெண் ஊழியர்களுக்கு முறையான தங்கும் வசதிகள் இல்லை. அதை எல்லாத்தையும்விட, போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ள இந்த மாவட்டத்தில் 14, 108 ஆம்புலன்ஸ் வாகனங்களும் பராமரிப்பு இல்லாமல் மோசமான நிலையில் உள்ளன. இந்த 14 ஆம்புலன்ஸ்களும் வெளிமாவட்டத்தில் இருந்து பராமரிப்பு இல்லாமல், அப்படியே கரூர் மாவட்டத்துக்கு கொண்டு வந்து பயன்படுத்துகிறார்கள். 14, 108 ஆம்புலன்ஸ்களையும் 60 கிலோமீட்டர் ஸ்பீடுக்கு மேல் ஓட்டமுடிவதில்லை. இதனால், விபத்தில் அடிபடுபவர்களை உடனடியாக மருத்துவமனைகளில் சேர்க்க முடிவதில்லை. எனவே, எங்களுக்கு நல்ல நிலையில் உள்ள 108 ஆம்புலன்ஸ்களை வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறோம்" என்றார். 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!