வெளியிடப்பட்ட நேரம்: 17:00 (10/01/2018)

கடைசி தொடர்பு:17:28 (10/01/2018)

`பணிக்குத் திரும்பத் தயார்!' தொழிற்சங்கங்கள் கூறும் ஒரே கண்டிஷன்

ஏழாவது நாளாக நடந்துவரும் போராட்டத்தைக் கைவிட்டு வேலைக்குத் திரும்பத் தயார் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளனர்.  ஊதிய உயர்வு பேச்சுவார்த்தைத் தோல்வியடைந்ததால், போக்குவரத்து ஊழியர்கள் ஏழாவது நாளாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  

இதனால் தமிழகம் முழுவதும் மக்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர். இதுதொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சி.ஐ.டி.யு தொழிற்சங்கம் சார்பில், ‘அரசு போட்டுள்ள ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை ரத்து செய்தால் போக்குவரத்துத் தொழிலாளர்கள் பணிக்குத் திரும்பத் தயார்’ என்று தெரிவிக்கப்பட்டது. மேலும், ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை ரத்து செய்வதுடன், புதிய ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைக்கு அரசு முன் வர வேண்டும். பேருந்துகளை இயக்க வேண்டும் என்பதுதான் எங்கள் விருப்பம்’ என்றும் வாதிடப்பட்டன. 

போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் நடந்த போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கான 13 வது ஊதிய உயர்வு தொடர்பான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதில், பங்கேற்ற போக்குவரத்துத் தொழிற்சங்கங்கள் தரப்பில் 2.57 காரணி ஊதிய உயர்வு கேட்கப்பட்டது. ஆனால், அரசு தரப்பில் 2.44 காரணி ஊதிய உயர்வு மட்டுமே தரப்படும் என்று கூறப்பட்டது. இதையடுத்து சி.ஐ.டி.யு, தொ.மு.ச உள்பட 10-க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் போராட்டத்தில்  ஈடுபட்டு வருகின்றன.