வெளியிடப்பட்ட நேரம்: 19:00 (10/01/2018)

கடைசி தொடர்பு:19:46 (10/01/2018)

`இயக்கப்படும் காலாவதியான பேருந்துகளின் எண்ணிக்கை எத்தனை தெரியுமா?' போக்குவரத்து சங்கம் அதிர்ச்சித் தகவல்

போக்குவரத்துத் தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் இன்றும் தொடர்கிறது. தஞ்சாவூரில் நூற்றுக்கும் மேற்பட்ட போக்குவரத்துத் தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்தினருடன் பழைய பேருந்து நிலையம் பகுதியிலிருந்து பேரணியாகப் புறப்பட்டு, தஞ்சை நீதிமன்றச் சாலையில் உள்ள தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தை முற்றுகையிடத் திட்டமிட்டிருந்தனர். இவர்களைத் தடுத்து நிறுத்தி கைது செய்த காவல்துறையினர், இவர்களை மேலவீதியில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் அடைத்தனர்.

இவர்களை நேரில் சந்தித்துப் பேசியபோது, ``எங்களோட கோரிக்கைகள் எல்லாமே நியாயமானது. எங்களோட உழைப்புனாலதான் போக்குவரத்துத்துறை இந்தளவுக்கு வளர்ச்சி அடைஞ்சிருக்கு. 1972-ம் ஆண்டு தி.மு.க ஆட்சியில பேருந்துகள் அரசுடைமை ஆக்கப்பட்டபோது வெறும் 100 பேருந்துகள்தாம் இருந்தன. எங்களோட உழைப்புனால, இப்ப 23,000 பேருந்துகள் ஓடிக்கிட்டு இருக்கு. தினமும் 32 கோடி ரூபாய் வருமானம் ஈட்டிக் கொடுத்துக்கிட்டு இருக்கோம். அரசுப் பேருந்துகளை ஓட்டிக்கிட்டு போறதுங்கறது சாதாரண காரியமல்ல. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரும் இந்தப் பேருந்துகளை ஓட்டிப்பார்த்தால்தான் எங்களோட கஷ்டங்களை அவங்க அனுபவபூர்வமாக உணருவாங்க. ஒரு பேருந்தை அதிகபட்சம் 6 ஆண்டுகள்தான் இயக்கணுங்கறது பொது விதி. ஆனால், தமிழ்நாட்டில் 18 ஆயிரம் பேருந்துகள், காலாவதியான பிறகும் பல ஆண்டுகளாக இயக்கப்பட்டுக்கிட்டு இருக்கு. இதனால் நாங்கபடும் கஷ்டம் கொஞ்சநஞ்சமல்ல. இதனால் பொதுமக்களும் ரொம்பவே சிரமப்படுறாங்க” என ஆதங்கப்பட்டார்கள்.