வெளியிடப்பட்ட நேரம்: 19:20 (10/01/2018)

கடைசி தொடர்பு:19:20 (10/01/2018)

`வீணான 2 லட்சம் லிட்டரைச் சேமித்து குடிநீருக்கு வழங்குகிறோம்' - கலெக்டர் தகவல்

"நிலத்தடி நீர் சேமிப்பு மற்றும் நீர் மேலாண்மைத் திட்டத்துக்காக முக்கியத்துவம் அளித்து அரசு அதிக நிதி ஒதுக்கி பணிகளைச் செய்துவருகிறது " என்று மாவட்ட ஆட்சித் தலைவர் கோவிந்தராஜ் தெரிவித்தார்.

கரூர் மாவட்டம், தோகைமலை ஊராட்சி ஒன்றியம், கள்ளை, புத்தூர், கல்லடை, நாகனூர் ஆகிய ஊராட்சிகளில் நடைபெற்றுவரும் நீர்மேலாண்மைத் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் கோவிந்தராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய கலெக்டர், "மழை குறைவாகப் பெய்துள்ளதாலும் அணைகளில் தண்ணீர் இருப்புக் குறைவாக உள்ளதாலும் எதிர்காலத்தில் ஏற்படும் வறட்சியைக் கருத்தில் கொண்டு தமிழக அரசுப் பல்வேறு நீர்மேலாண்மைத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. அதன்படி, கள்ளை ஊராட்சி, கள்ளை பெரியவாரியில் ரூ.7 லட்சம் மதிப்பில் தடுப்பணை அமைக்கப்பட்டுள்ளது. ரூ.25 லட்சம் மதிப்பில் புத்தூர் ஊராட்சியில் உள்ள வெங்கடாச்சல கவுண்டன்குளத்தை ஆழப்படுத்தியும் கரைகளைப் பலப்படுத்தியும் சீரமைக்கப்பட்டுள்ளது.

இதேபோல், நாகனூர் ஊராட்சி காளிக்கவுண்டன் குளத்தை ரூ.24 லட்சம் மதிப்பிலும், நல்லகுமாரப் பிள்ளை சிறுபாசன குளத்தை ரூ.21.70 லட்சம் மதிப்பிலும் சீரமைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அமைக்கப்பட்டுள்ள இந்தக் குளங்களில் மழைநீர் தேங்கியுள்ளதால் கால்நடைகளுக்கு குடிநீராகவும் சிறுபாசனத்துக்காகவும் பயன்படுகின்றன. மேலும், இக்குளங்களின் மூலம் நிலத்தடி நீர் செறிவூட்டப்பட்டதால் அருகில் உள்ள வேளாண்மைப் பாசனக் கிணறுகளில் நீர் நிரம்பியிருக்கின்றன. மேலும், கல்லடை ஊராட்சி கீழ வெளியூர் வழியாகப் பெரிய அளவிலான குடிநீர் குழாய் ஒன்று செல்கிறது. அக்குழாயில் பொருத்தப்பட்டுள்ள காற்றுப்போக்கி வழியாக நாள் ஒன்றுக்கு 2 லட்சம் லிட்டர் தண்ணீர் வீணாகக் கழிவுநீர் ஓடையில் சென்றுகொண்டு இருந்தது. இத்தண்ணீரைப் பயன்படுத்தும் வகையில் ரூ.10 லட்சம் மதிப்பில் அருகில் உள்ள ஊராட்சிக்குச் சொந்தமான பயனற்ற கிணற்றை இரண்டரை லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர் சேகரிப்புத் தொட்டியாக மாற்றி அமைத்துக் காற்றுப் போக்கி நீரைச் சேகரித்து சேமிப்புத் தொட்டியின்மேல் கூரை அமைத்து மின்மோட்டார் மூலம் கீழ வெளியூர், காமராஜ் நகர், மதுரா நகர் பகுதியில் உள்ள சுமார் 2,800 பொதுமக்களுக்கு நாள்தோறும் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. வீணாகிப்போன நீரையும் பயன்படுத்தும் வகையில் இப்பணி சிறப்பாக நடைபெற்று வருகிறது" என்றார்.