"அமைச்சரைக் கைது செய்ய நீதிபதி உத்தரவிடுவாரா?" - அ.சவுந்தரராஜன் கேள்வி

'போக்குவரத்துத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்தை ஒருவாரமாகியும் கண்டுகொள்ளாத தமிழக அரசு, ஓய்வு பெற்ற தொழிலாளர்களின் பிடித்தம்செய்யப்பட்ட வருங்கால வைப்புநிதியை என்ன செய்தது?' என்று சி.ஐ.டி.யூ. மாநிலத் தலைவர் சவுந்தரராஜன் கேள்வியெழுப்பியுள்ளார். ஓர் அமைச்சரின் கார் ஓட்டுநர் சம்பளத்தை விடவும், போக்குவரத்து தொழிலாளியின் சம்பளம் குறைவு என்பது அமைச்சருக்குத் தெரியுமா என்றும் அவர் வினவியுள்ளார்.

சவுந்திரராஜன்ஓய்வூதிய நிலுவைத்தொகை, ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக்கழக தொழிற்சங்கங்கள், ஜனவரி 4-ம் தேதியிலிருந்து வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆளும் கட்சி ஆதரவு சங்கமான அண்ணா தொழிற்சங்கத்தைச் சேர்ந்த தொழிலாளர்களுடன் தற்காலிக ஓட்டுநர்கள், நடத்துநர்களுடன் ஒவ்வொரு பேருந்து டெப்போக்களிலும் மிகக் குறைந்த அளவிலான பேருந்துகளே இயக்கப்படுகின்றன. இதனால், சென்னை உள்பட தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் பயணிகள் போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளது. போக்குவரத்துக்கழகத் தொழிலாளர்களின் கோரிக்கையை அரசு ஏற்காததால் ஏழாவது நாளாக இன்றும் போராட்டம் நீடிக்கிறது. 

சென்னையில் நேற்று குடும்பத்துடன் பல்லவன் இல்லம் அருகே போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் இன்று, தேனாம்பேட்டை தொழிலாளர் ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 11 ஆயிரத்து 983 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் ஏற்கெனவே அறிவித்திருந்தார். பொங்கல் சிறப்புப் பேருந்துகளுக்கான முன்பதிவு ஜனவரி 9-ம் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தால், முன்பதிவு தொடங்கவில்லை. இதனால், பொங்கல் பண்டிகைக்கு வெளியூர் செல்லும் பயணிகள் இப்போதே மிகுந்த கவலையடைந்துள்ளனர். இதற்கிடையே, வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள போக்குவரத்துக் கழக தொழிலாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பட்டு வருகிறது. சில தொழிலாளர்கள் மீது நடவடிக்கைகளும் பாய்ந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

போக்குவரத்துத் தொழிலாளர்கள் போராட்டம் குறித்து சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கத்தின் மாநிலத் தலைவர் அ.சவுந்தரராஜன், ''ஓய்வூதியதாரர்களின் கோரிக்கைகள் மட்டுமல்ல; பணியில் உள்ள தொழிலாளர்களின் கோரிக்கைகளையும் இந்த அரசு நிறைவேற்றவில்லை. அதனால்தான் போராட்டம் நடத்துகிறோம். முடிவு கிடைக்கும்வரை தொழிலாளர்களின் போராட்டம் தொடரும். தொழிலாளர்கள் ஓய்வுபெற்று பல ஆண்டுகளாகியும், அவர்களின் ஓய்வூதியப் பலன்கள் ஏழாயிரம் கோடி ரூபாய் வரை, அவர்களுக்கு வழங்காமல் அரசு இழுத்தடித்து வருகிறது. ஓய்வூதியமும் வழங்குவதில்லை. பணிக்கொடையும் கிடைக்காமல் ஓய்வுபெற்றவர்கள், மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். 

குடும்பத்துடன் போராட்டம்

தொழிலாளர்களிடமிருந்து பிடித்தம் செய்த பணத்தை வருங்கால வைப்பு நிதி ஆணையத்தில் போக்குவரத்துக்கழக நிர்வாகம் செலுத்தவில்லை. தொழிலாளர்களின் எல்.ஐ.சி பணத்தையும் செலுத்தவில்லை. இதனால் தொழிலாளர்களின் காப்பீட்டுப் பத்திரங்கள் எல்லாம் காலாவதியாகி விட்டன. ஓய்வுபெற்ற தொழிலாளர்கள் வறுமையில் வாடுகின்றனர். இந்த நிலையில், தொழிலாளர்களின் பணத்தை அவர்களுக்குக் கொடுக்காமல் கையாடல் செய்த இந்த அரசை என்னவென்று அழைப்பது? தொழிலாளர்களின் பணத்தை அரசே திருடியதாகத்தான் அர்த்தம். இதற்காக, போக்குவரத்துத் துறை அமைச்சரை ஆறு மாதம் சிறையில் அடைக்க கோர்ட் உத்தரவிட முடியுமா? அதற்கு நீதிமன்றம் பதில் சொல்லட்டும். இப்போது போராட்டத்தைத் திரும்பப் பெறமுடியாத நிலையில் இருக்கிறோம். அரசின் பக்கம் நியாயம் இல்லை.

எனவேதான், எங்கள் போராட்டத்துக்கு அரசியல் சாயம் பூசுகின்றனர். எங்களை வன்முறையாளர்களாகச் சித்திரிக்கிறார்கள். 2.44 காரணி ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை தொழிலாளர் ஆணையம் அங்கீகரிக்கக் கூடாது. தொழிலாளர்களைப் பணி நீக்கம் செய்வோம் என்று அரசு எச்சரிக்கிறது. அப்படிச் செய்தால் எங்கள் போராட்டம் வேறு வடிவில் இருக்கும். போக்குவரத்து தொழிலாளர்களுக்கு வரலாறுகாணாத வகையில் ஊதிய உயர்வு கொடுத்துள்ளதாகப் பேசுகிறார் போக்குவரத்துத் துறை அமைச்சர். அமைச்சரின் கார் ஓட்டுநருக்கு வழங்கப்படும் ஊதியப் பட்டியலையும், போக்குவரத்துத் தொழிலாளியின் ஊதியப் பட்டியலையும் முதலில் அவர் வாங்கி ஒப்பிட்டுப் பார்க்கட்டும். யாருக்கு ஊதியம் அதிகம் என்பது அப்போது அமைச்சருக்குத் தெரியும். ஓரவஞ்சனையோடு பேசக் கூடாது. தொழிற்சங்க நிர்வாகிகளை அழைத்து முதல்வர் பேச்சு நடத்த வேண்டும். தொழிலாளர்களின் கோரிக்கைகளை ஏற்க வேண்டும்'' என்றார்.

தமிழக சட்டசபைக் கூட்டத்தொடர் நடந்துகொண்டிருக்கும் நிலையில், தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தை கண்டுகொள்ளாமல் இருப்பது எந்தவகையில் நியாயம்? ஒரு வாரமாகியும், பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமங்களைக் கண்டுகொள்ளாமல் ஒரு மாநில அரசு இயங்குவது சரியா? என பொதுமக்கள் கேள்வியெழுப்பி வருகின்றனர். தொழிலாளர்களின் கோரிக்கைகளை ஏற்று, வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவருவதுடன், சாமான்ய மக்களின் சிரமங்களை உடனடியாகப் போக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பும் ஆகும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!