வெளியிடப்பட்ட நேரம்: 17:33 (10/01/2018)

கடைசி தொடர்பு:17:49 (10/01/2018)

பிரச்னையைப் பேசித் தீர்க்கலாம்; பேருந்துகளை இன்றே இயக்குங்கள்! நீதிமன்றம் வலியுறுத்தல்

''அரசுடனான பிரச்னையைப் பேசித் தீர்க்கலாம், பொதுமக்களின் நலனைக் கருத்தில்கொண்டு பேருந்துகளை இன்றே இயக்குங்களேன்'' என்று போக்குவரத்துத் தொழிலாளர்களை சென்னை உயர் நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசுப் போக்குவரத்துத் தொழிலாளர்கள் ஏழாவது நாளாக வேலைநிறுத்தம் செய்துவருகின்றனர். இதனால் மக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். இதுதொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை அரசு திரும்பப்பெற்று, மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைத்தால் பணிக்குத் திரும்பத் தயார்’ என்று சி.ஐ.டி.யு. தரப்பில் வாதிடப்பட்டது. இதற்கு, ‘ஊதிய உயர்வு ஒப்பந்தப் பேச்சுவார்த்தையில் தொ.மு.ச-வின் சண்முகம், சி.ஐ.டி.யு-வின் சவுந்தரராஜன் ஆகியோர் கலந்துகொண்டதாகவும் அனைத்துத் தரப்பினரிடமும் பேசியே ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது என்றும் அரசுத் தரப்பில் பதிலளிக்கப்பட்டது. 

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், இந்த வழக்கை விரிவாக விசாரித்து தீர்ப்பு அளிக்கலாம். இந்த நேரத்தில் மக்களின் நலனைக் கருத்தில் கொள்ள வேண்டி இருக்கிறது. அரசு 2.44 காரணி ஊதிய உயர்வுக்கு அரசு ஒப்புதல் அளித்துவிட்டது. 0.13 காரணி ஊதிய உயர்வுதான் பிரச்னையாக இருந்து வருகிறது. அரசு உடனடியாக 2.44 காரணி ஊதிய உயர்வை அமல்படுத்தட்டும். இன்றிலிருந்து பேருந்துகளை இயக்குங்கள். பொங்கல் நேரம் என்பதால் பொதுமக்களின் நலனைக் கருத்தில்கொண்டு பேருந்துகள் இயங்க வேண்டும் என்பதே நீதிமன்றத்தின் விருப்பம்’ என்று தெரிவித்தது. உயர் நீதிமன்றம் இவ்வாறு கருத்துத் தெரிவித்துள்ள நிலையில், அதுகுறித்து வழக்கறிஞர்களுடன் போக்குவரத்து தொழிற்சங்க நிர்வாகிகள் ஆலோசித்து வருகின்றனர்.