வெளியிடப்பட்ட நேரம்: 22:00 (10/01/2018)

கடைசி தொடர்பு:22:00 (10/01/2018)

பல வண்ணங்களில் பொங்கல் பானைகள்! விற்பனையில் அசத்தும் பட்டதாரிகள்

பொங்கல் பண்டிகைத் தமிழர்களின் முக்கிய திருநாள், பொங்கல் திருநாளில் கிராமங்கள் நகரங்கள் என்ற வேறுபாடு இல்லாமல் புதுப் பானையில் பொங்கல் வைப்பது ஸ்பெஷல்! தருமபுரி மாவட்டம் தண்டுகாரம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பட்டதாரி இளைஞர்கள் பட்டாபி, பொன்மொழி, ராஜா, அருள்குமார் ஆகிய இளைஞர்கள் கூட்டாகச் சேர்ந்து வண்ண வண்ண கலர்களில் பொங்கப் பானைகளை விற்பனை செய்து பொதுமக்களின் கவனத்தை ஈர்த்து அசத்தியுள்ளனர். 

பொங்கல் பானை

தருமபுரி அரசுக் கலைக்கல்லூரி முன்பாகப் புளியமரத்தடியில் வண்ண வண்ண கலர்களில் அடுக்கி வைக்கப்பட்ட பானைகளை ஆண்களும் பெண்களும் சிறுவர்களும் விருப்பமுடன் பொங்கல் பானையை வாங்கிச் செல்கின்றனர். விற்பனையில் பிசியாக இருந்த இளைஞர் பட்டாபியிடம் பேசினோம். ''நான் முதுநிலை சமூகப் பணி பட்ட மேற்படிப்பைப் படித்துள்ளேன். நானும் பொன்மொழி, ராஜா, அருள்குமார் நான்கு பேரும் ஒன்றிணைந்து ரூ.25,000 முதலீடு செய்து பொங்கல் பானைகளைக் கொள்முதல் செய்து பானைகளுக்கு மக்கள் விரும்பும் விதமாக வண்ணங்களைத் தீட்டி விற்பனை செய்தோம். கடந்த ஆண்டு நாங்கள் எதிர்பார்த்தைவிட பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதே திட்டமிடலில் இந்த ஆண்டும் ரூ.50,000 முதலீடு செய்து நல்ல தரமான பானைகளைச் செய்ய நாங்களே நேரடியாகக் கேட்டு கொள்முதல் செய்தோம். கடந்த ஒரு மாதமாக நானும் என் நண்பர்களும் இரவு நேரங்களில் பானைக்கு வண்ணங்களைத் தீட்டிப் பாதுகாத்து வந்தோம். இப்போது விற்பனைக்காகக் கொண்டு வந்துள்ளோம். 

பொங்கல் பானை

எங்களிடம் 7 விதமான பானைகள் உள்ளன. சாதாரண பானையைவிட 25% சதவிகிதம் மட்டுமே கூடுதலாக விற்பனை செய்கிறோம். 20 ரூபாய் பானை 30 ரூபாய்க்கும் 70 ரூபாய் பானை 110 ரூபாய்க்கும் 170 ரூபாய் பானை 250 ரூபாய்க்கும் விற்பனை செய்கிறோம். இது வெளி மார்க்கெட் விலையைவிட மிகக் குறைவுதான். நாங்களே உற்பத்தியாளர்களிடமிருந்து நேரடியாக வாங்கியதால் இந்த ஆண்டு பானைகளை  குறைவான விலைக்கு விற்பனை செய்ய முடிகிறது. மற்ற நண்பர்கள் கல்லூரிக்குப் படிக்கச் சென்றுள்ளதால் விடுமுறை நாள்களில் வந்து விற்பனையைப் பார்த்துக்கொள்வார்கள்'' என்றார் பட்டாபி.

கல்லூரியில் படிக்கும் நாள்களில் பொழுதுபோக்கு, விளையாட்டு போன்ற விஷயங்களில் கவனம் செலுத்தாமல் சுயமாகத் திட்டமிட்டு பொங்கல் பானை விற்பனையில் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ள தருமபுரி இளைஞர்களின் செயல் பாராட்டுக்குரிய விஷம்தான்.