சிவப்புக் கொடியுடன் ஓடி ரயிலை நிறுத்திய ஊழியர்! விபத்திலிருந்து தப்பியது ராமேஸ்வரம் ரயில்

பரமக்குடி அருகே கடும் பனிப்பொழிவு காரணமாகத் தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல் தக்க நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டதால் பெரும் ரயில் விபத்து தவிர்க்கப்பட்டது.

பரமக்குடி அருகே ரயில் விபத்து தவிர்ப்பு

போக்குவரத்து ஊழியர்களின் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தால் பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பேருந்து கிடைக்காத பயணிகள் ரயில் போக்குவரத்தைப் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் இன்று காலை மதுரையிலிருந்து ராமேஸ்வரத்துக்குச் சென்ற ரயில் ஒன்று தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல் உரிய நேரத்தில் கண்டு பிடிக்கப்பட்டதால் விபத்திலிருந்து தப்பியது.

பரமக்குடி பகுதியில் கடும் பனிப்பொழிவு இருந்து வருகிறது. இந்நிலையில் பரமக்குடியை அடுத்துள்ள சூடியூர் ரயில் நிலையத்துக்கு அருகில் உள்ள தண்டவாளத்தில் பனிப்பொழிவின் காரணமாக விரிசல் ஏற்பட்டது. ரயில் பாதை ஆய்வு ஊழியர் ஒருவர் இதைக் கண்டுபிடித்த நிலையில் மதுரையிலிருந்து ராமேஸ்வரத்துக்கு வரும் பயணிகள் ரயில் சூடியூர் ரயில் நிலையத்திலிருந்து வந்துள்ளது.

ரயில் வருவதைக் கண்ட அந்த ஊழியர் சமயோசிதமாக சிவப்புக் கொடியுடன் ரயில் முன் ஓடிச் சென்று ரயிலை நிறுத்தியுள்ளார். இதைத் தொடர்ந்து கூடுதல் ஊழியர்கள் அப்பகுதிக்கு வரவழைக்கப்பட்டு விரிசல் ஏற்பட்டிருந்த தண்டவாளத்தைச் சரிசெய்தனர். இதன் பின்னர், சுமார் 30 நிமிட தாமதத்துக்குப் பின் ரயில் ராமேஸ்வரத்துக்குப் புறப்பட்டுச் சென்றது. ரயில் பாதைப் பராமரிப்பு ஊழியரின் கவனத்தாலும் சமயோசிதத்தாலும் நடக்க இருந்த ரயில் விபத்து தவிர்க்கப்பட்டது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!