இஸ்ரோ தலைவராக தமிழக விஞ்ஞானி சிவன் நியமனம்! மத்திய அரசு உத்தரவு

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோவின் தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த கே. சிவனை நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. 


இஸ்ரோ அமைப்பின் தலைவராக உள்ள ஏ.எஸ்.கிரண்குமாரின் மூன்றாண்டுகள் பதவிக்காலம் வரும் 12-ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து புதிய தலைவராக திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் இயக்குநராக உள்ள கே. சிவன் நியமிக்கப்பட்டிருக்கிறார். இஸ்ரோவின் பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டின் திட்டமிடுதல் மற்றும் வடிவமைப்புக் குழுவில் கடந்த 1982 இணைந்த சிவன், அந்த ராக்கெட் உருவாக்கத்தில் முக்கியப் பங்காற்றினார். இஸ்ரோவின் மிகப்பெரிய விண்வெளி நிலையமாகக் கருதப்படும் திருவனந்தபுரம் விக்ரம் சாராபாய் விண்வெளி நிலைய இயக்குநராகப் பணியாற்றுவதற்கு முன்பாக, நெல்லை மாவட்டம் மகேந்திரகிரியில் உள்ள திரவ இயக்கத் திட்ட மையத்தின் இயக்குநராக சிவன் பணியாற்றினார். சென்னை எம்.ஐ.டி. கல்விநிறுவனத்தில் ஏரோநாட்டிக்கல் பாடப்பிரிவில் கடந்த 1980-ல் பட்டம்பெற்ற சிவன், கடந்த 2006-ம் ஆண்டில் மும்பை ஐ.ஐ.டி-யில் முனைவர் பட்டத்தைப் பெற்றார். இஸ்ரோ தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் நியமிக்கப்பட்டிருப்பது இதுவே முதல்முறையாகும். இஸ்ரோ தலைவராக விஞ்ஞானி சிவன் மூன்றாண்டுகள் பதவி வகிப்பார். 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!