வெளியிடப்பட்ட நேரம்: 21:39 (10/01/2018)

கடைசி தொடர்பு:08:25 (11/01/2018)

'அன்பழகன் என்றாலே...' அச்சப்பட்ட சபாநாயகர்!

அன்பழகன்

மிழக சட்டசபை கூட்டத்தில் ஆளுநர் உரை மீதான விவாதம் தொடங்கியுள்ளது. ஆளுங்கட்சி மற்றும் எதிர்கட்சிகளிடையே நடைபெறும் சூடான விவாதங்களினால் சட்டசபையே உறுப்பினர்களின் சத்தத்தினால் அனல் பறக்கிறது. மேலும், தி.மு.க உறுப்பினர் அன்பழகன் என்றால் ஆளும்கட்சியினரே அச்சப்படும் சுவாரஸ்யமும் நடைபெறுகிறது.

ஆளுநர் உரை மீதான விவாதத்தில் ஆளும் கட்சி உறுப்பினர்கள் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு வாய்ப்பளிக்கபடும். அவை தொடங்கியதும் கேள்விநேரம், அதன்பிறகு பூஜ்ய நேரம் என சட்டசபை நிகழ்வுகள் நடைபெறும். நேற்றைய பூஜ்ய நேரத்தில் போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம் தொடர்பாக, எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த கவனஈர்ப்பு தீர்மானத்தில் சுயேச்சை  வேட்பாளர் தினகரனும் பேசினார். அதேபோல், கவர்னர் உரை மீதான விவாதத்தில் தி.மு.க சார்பில் அன்பழகன், சுரேஷ் ராஜன் உள்ளிட்டோர் பேசினார்கள். 

சட்டசபையின் ஒவ்வொரு கூட்டத்தொடரிலுமே திருவல்லிகேணி சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் பேசினாலே பிரச்னை  ஏற்படுவது வாடிக்கையாகிவிட்டது. குறிப்பாக கடந்த சட்டசபை கூட்டத்தொடரில் அன்பழகன் ஆளும்கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக கடுமையாக வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், அவரை மட்டும் சபையிலிருந்து வெளியேற்ற உத்தரவிட்டார் சபாநாயகர். அதே போல், ஜெயலலிதா இருந்த காலத்திலே சட்டசபையில் அன்பழகன் அ.தி.மு.கவிற்கு நெருக்கடி கொடுக்கும் விதத்திலே பேசுவதால் அன்பழகன் என்றாலே அ.தி.மு,க வினர் மத்தியில் ஒருவித அச்சமும் சேர்ந்தே இருந்தது.

இந்நிலையில் நேற்றைய விவாதத்தில் அன்பழகன் பேசத் தொடங்கும் முன்பே  சபாநாயகர் தனபால்“ அன்பழகன் எந்த சர்ச்சையும் இல்லாமல் பேசி முடியுங்கள்” என்று சொல்லியே அவருக்கு வாய்ப்பு கொடுத்தார். அன்பழகன் பேச ஆரம்பித்தபோதே, ஆளுநர் குறித்து ஒரு தகவலை தெரிவித்தார். இதற்கு ஆளும்கட்சியில் கடும் எதிர்ப்பு எழுந்தது. உடனே அன்பழகன் குறிப்பிட்டதை அவை குறிப்பிலிருந்து நீக்குவதற்கு சபாநாயகர் உத்தரவிட்டார். 

அதன்பிறகு முதல்வர் பற்றியும் ஒரு வார்த்தையை அன்பழகன் கோபமாகக் கூற அந்த வார்த்தையும் அவை குறிப்பிலிருந்து நீக்கப்பட்டது. உடனே டென்ஷனான சபாநாயகர் “அன்பழகன் நீங்கள் இன்று பேசுவதாக எனக்குக் காலையிலே தெரியாமல் போய்விட்டது. உங்களுக்கு வாய்ப்பு கொடுத்தாலே இப்படித்தான் ஆகிறது” என்று சொல்ல, சபை முழுவதும் சிரிப்பலை எழுந்தது. அதன்பிறகு அன்பழகன் வழக்கமான பாணியில் “ தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு அவ்வளவு சிறப்பாகவா இருக்கிறது. ஆளுநர் உரையில் சட்டம்ஒழுங்கை பற்றி ஒரு வார்த்தைகூட இடம் பெறவில்லை” என்று சொன்னதும். முதல்வர் எடப்பாடி எழுந்து “சட்டம் ஒழுங்கு கட்டிக்காக்கப்படுகிறது. அதனால் தான் இந்தியாவில் சிறந்த காவல்நிலையங்களில் பட்டியலில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது” என்று பதில் சொன்னதும், அன்பழகன் “ஆய்வாளர்ஒருவரே, திருடனை திருடச் சொல்லி பணம் வசூல் செய்துள்ளார்” என்று செய்தி வெளியாகியுள்ளதே என்றார். உடனே, அதற்கும் அவையில் ஆளும்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்ததும் அன்பழகன் அடுத்த பாய்ன்ட்டிற்கு சென்றார். 

சட்டசபை


“இந்த ஆட்சி மைனாரிட்டி ஆட்சி என்று அன்பழகன் குறிப்பிட்டதும்” அதற்கும் அ.தி.மு.க தரப்பில் எதிர்ப்பு எழுந்தது. அதே போல், ஆளுநர் உரையில் குறிப்பிடாத விசயங்களை அன்பழகன் பட்டியலிட்டதும், ஆளும் கட்சியினர் அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதும் என சபையே சலசலப்பானது. ஒரு கட்டத்தில் டென்ஷனான சபாநாயகர் “ அன்பழகன் உங்கள் பேச்சை முடித்துக்கொள்ளுங்கள்.உங்களை பேசவிட்டால், சபையே அல்லோலகல்லோலப்பட்டுவிடுகிறது” என்று சொல்லி எச்சரித்தார். 

இறுதியாக ஐந்து நிமிடங்கள் தாருங்கள் என்று கேட்ட அன்பழகன் “ ஆளுநர் உரையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு நினைவிடம் அமைக்கப்படும் என்று சொல்லியுள்ளீர்கள். சட்டத்தால் தண்டிக்கபட்டவருக்கு” என்று அன்பழகன் சொல்லும் போதே கடும் எதிர்ப்பு அ.தி.மு.க தரப்பிலிருந்து எழுந்ததால், அன்பழகனின் மைக் கட் செய்யப்பட்டது. இனியும் அன்பழகன் பேசக் கூடாது என்று சபாநாயகர் உத்தரவிட்டார். அன்பழகனுக்குப் பேசுவதற்க வாய்ப்பு மறுக்கபட்டபிறகு, தி.மு.க தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இறுதியாக தி.மு.க உறுப்பினர்கள் வெளிநடப்பிலும் ஈடுபட்டனர். அதே போல், இன்றும் ஆளுநர் உரை மீதான விவாதத்தில் அ.தி.மு.க உறுப்பினர் செம்மலை பேசும் போது, மைனாரிட்டி அரசு என்ற வார்த்தை பற்றி பிரச்னை கிளம்பியது. அப்போதும் அன்பழகன் உள்ளிட்ட தி.மு.க உறுப்பினர்கள் தொடர்ந்து குறிக்கீடு செய்தனர். அப்போது சபாநாயகர் “அன்பழகன் நீங்கள் முதலில் அமருங்கள்... பிரச்னை  ஒய்ந்துவிடும்” என்று சொல்லிக்கொண்டே சிரித்துவிட்டார்.

ஒவ்வொரு முறையும் அன்பழகன் விவாத்தில் பங்கேற்றாலே அ.தி.மு.க வினர் அல்லோலகல்லோலப்படுவதும், சபாநாயகர் அச்சபடுவதையும் பார்த்து நக்கலாகச் சிரிக்கின்றனர் தி.மு.க உறுப்பினர்கள். 
 


டிரெண்டிங் @ விகடன்