வெளியிடப்பட்ட நேரம்: 21:24 (10/01/2018)

கடைசி தொடர்பு:21:24 (10/01/2018)

பேருந்தில் பயணம் செய்தவர் உயிரிழப்பு: சடலத்துடன், நண்பரையும் நடுவழியில் இறக்கிவிட்ட நடத்துநர்! 

பேருந்தில் பயணம் செய்தவர் திடீர் மாரடைப்பால் உயிரிழக்கவே, இறந்தவரையும் அவருடன் வந்தவரையும் அரசுப் பேருந்து நடத்துநர் நடுவழியில் இறக்கிவிட்ட சம்பவம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் திருக்கோவிலூரைச் சேர்ந்தவர்களான வீரன், ராதாகிருஷ்ணன் ஆகியோர் பெங்களூரில் கூலி வேலை செய்து வருகின்றனர். தமிழகம் முழுவதும் அரசுப் போக்குவரத்துத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், பொங்கல் பண்டிகைக்கு இரண்டு நாள்களுக்கு முன்னதாகவே, ஊருக்குத் திரும்ப எண்ணி வீரனும், ராதாகிருஷ்ணனும் திருக்கோவிலூரிலிருக்குப் பேருந்தில் புறப்பட்டனர். அவர்கள் பயணம் செய்த பேருந்து பெங்களூருரைத் தாண்டி ஓசூர் கடந்து வந்தபோது வீரனுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதாகத் தெரிகிறது. நெஞ்சு வலியால் துடித்த அவர், இரவுக்குள் சொந்த ஊருக்குப் போய்விடுவோம் என்று வலியையும் பொருட்படுத்தாமல் பயணம் செய்துள்ளார். ஆனால், கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியைக் கடக்கும் முன்பாகவே, வீரன் பேருந்திலேயே உயிரிழந்துள்ளார். இதைக் கவனித்த பேருந்து நடத்துநர் சூளகிரி பேருந்து நிறுத்தத்தில் இறந்த வீரனையும், அவருடன் வந்த ராதாகிருஷ்ணனையும் இறக்கிவிட்டு சென்றுள்ளார். மேலும், அவர்களிடமிருந்த பேருந்து பயணச் சீட்டையும் பறித்துக்கொண்டே நடத்துநர் இறக்கிவிட்டுள்ளார்.

பேருத்தில் இறக்கிவிடப்பட்ட நிலையில்

சூளகிரி தேசிய நெடுஞ்சாலையில் வீரனின் இறந்த உடலோடு அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் தடுமாறி நின்ற ராதாகிருஷ்ணனுக்கு உள்ளூர் செய்தியாளர்கள் உதவி செய்தனர். காவல்துறைக்குத் தகவல் கொடுத்த அவர்கள், தனியார் ஆம்புலென்ஸ் மூலம் இறந்தவரின் உடல் திருக்கோயிலூர் அனுப்பி வைத்துள்ளனர். போதுமான படிப்பறிவு இல்லாத காரணத்தால் ராதாகிருஷ்ணனுக்குப் பயணம் செய்த பேருந்தின் எண் கூட தெரியவில்லை. பேருந்தில் பயணம் செய்த நபர் இறந்ததும், பாதி வழியில் இறக்கிவிட்டுச் சென்ற சம்பவம் பயணிகளின் உரிமையை மீறிய செயல். அவர்கள் மீது குறைந்தபட்ச கருணை கூட காட்டாதது கொடுமை என்று சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.