வெளியிடப்பட்ட நேரம்: 23:30 (10/01/2018)

கடைசி தொடர்பு:08:09 (11/01/2018)

இவரை முதல்வராக்கத்தான் ஆளுநரிடம் கடிதம் கொடுத்தோம்! தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ-க்கள் பதில்

எடப்பாடி பழனிசாமியை நீக்கிவிட்டு யாரை முதலமைச்சராக்க ஆளுநரிடம் கடிதம் கொடுத்தீர்கள் என்று தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ-க்களிடம் சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. 


தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, யாரை முதல்வராக்க வேண்டும் என்று ஆளுநரிடம் கடிதம் கொடுத்தீர்கள் என்று தினகரன் தரப்பினரிடம் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. அந்த கேள்விக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிமீது பல்வேறு முறைகேடுகள் புகார் எழுந்ததால், அவருக்குப் பதில், கட்சி உறுப்பினர் செங்கோட்டையனை முதல்வராக்க வேண்டும் என்று ஆளுநரிடம் கடிதம் கொடுத்ததாகப் பதிலளிக்கப்பட்டது. மேலும், ஆளுநரிடம் கடிதம் கொடுத்ததைக் காரணம் காட்டி தகுதிநீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தினகரன் ஆதரவாளர்கள் தரப்பு வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் வாதாடினார். இதற்கு, ‘ஆளுநரிடம் கடிதம் அளித்தது கட்சியைவிட்டு வெளியேறியதாகவே கருதப்படும். கட்சித் தாவல் தடை சட்டத்தில் நடவடிக்கை எடுக்க பேரவைத் தலைவருக்கு அதிகாரம் உள்ளது. சபாநாயகர் உத்தரவை எதிர்த்த வழக்கை விசாரிக்க உயர் நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை ’ என்று வாதிடப்பட்டது.