வெளியிடப்பட்ட நேரம்: 00:30 (11/01/2018)

கடைசி தொடர்பு:07:57 (11/01/2018)

திருப்பூர் மாவட்ட வாக்காளர் பட்டியல் வெளியீடு

திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் 2018-ம் ஆண்டுக்கான மாவட்ட இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

மாவட்ட ஆட்சியர் கே.எஸ் பழனிசாமி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், அங்கீகரிக்கப்பட்ட கட்சிப் பிரமுகர்கள் பலர் கலந்துகொண்டனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு, அதன் நகல்கள் அங்கீரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருக்கு வழங்கப்பட்டது.
 
அதில், திருப்பூர் தெற்கு தொகுதியில் 1,29,401 ஆண் வாக்காளர்களும், 1,24,543 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தவர்கள் 28 பேரும் உள்ளனர். திருப்பூர் வடக்கு தொகுதியில் 1,74,919 ஆண் வாக்காளர்களும், 1,65,393 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலித்தனவர்கள் 84 பேரும் உள்ளனர். பல்லடம் தொகுதியில் 1,74,556 ஆண் வாக்காளர்களும், 1,72,077 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தவர்கள் 40 பேரும் உள்ளனர். உடுமலைப்பேட்டை தொகுதியில் 1,21,564 ஆண் வாக்காளர்களும், 1,28,642 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலின வாக்காளர்கள்  22 பேரும் உள்ளனர். மடத்துக்குளம் தொகுதியில் 1,14,189 ஆண் வாக்காளர்களும், 1,16,709 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலின வாக்காளர்கள் 18 பேரும் உள்ளனர். காங்கேயம் தொகுதியில் 1,17,709 ஆண் வாக்காளர்களும், 1,22,169 பெண் வாக்காளர்களும் மற்றும் மூன்றாம் பாலின வாக்காளர்கள் 21 பேரும் உள்ளனர்.

தனித் தொகுதியான தாராபுரம் தொகுதியில் 1,20,959 ஆண் வாக்காளர்களும், 1,24,694 பெண் வாக்காளர்களும் மற்றும் 8 மூன்றாம் பாலின வாக்காளர்களும் உள்ளனர். மற்றொரு தனித் தொகுதியான அவினாசி தொகுதியில் 1,26,336 ஆண் வாக்காளர்களும், 1,30,496 பெண் வாக்காளர்களும் மற்றும் மூன்றாம் பாலின வாக்காளர்கள் 22 பேரும் உள்ளனர். மொத்தமாக திருப்பூர் மாவட்டம் முழுவதும் 10,79,633 ஆண் வாக்காளர்களும், 10,84,723 பெண் வாக்காளர்களும் உள்ளனர்.

இந்த வாக்காளர் பட்டியல், மாநகராட்சி அலுவலகம், கோட்டாட்சியர் அலுவலகங்கள், வட்டாட்சியர் அலுவலகங்கள் மற்றும் வாக்குச்சாவடி மையங்கள் ஆகியவற்றில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருக்கும். எனவே, இறுதி வாக்காளர் பட்டியலை பொதுமக்கள் சரிபார்த்து தங்களின் பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும் என்றும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்திருக்கிறது.