வெளியிடப்பட்ட நேரம்: 00:50 (11/01/2018)

கடைசி தொடர்பு:07:51 (11/01/2018)

வைரமுத்துவின் தாயார், மனைவியையும் இழிவுபடுத்துவதா?- ஹெச்.ராஜாவுக்கு முற்போக்கு எழுத்தாளர்கள் கண்டனம்

வைரமுத்து எச்.ராஜா

ஆண்டாள் குறித்து கவிஞர் வைரமுத்து கூறிய கருத்துக்காக அவரையும் அவரின் தாயாரையும் மனைவியையும் இழிவாகப் பேசியுள்ளது கண்டிக்கத்தக்கது; வன்முறையைத் தூண்டும் ராஜாவின் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று முற்போக்கு எழுத்தாளர்கள் கூறியுள்ளனர்.  

இதுகுறித்து தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கத்தின் தலைவர் ச.தமிழ்ச் செல்வன், பொதுச்செயலாளர் சு.வெங்கடேசன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்:

கவிஞர் வைரமுத்துவுக்கு பா.ஜ.க தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கொலைமிரட்டல் விடுத்துள்ளார். ஆண்டாள்குறித்து வைரமுத்து தெரிவித்த சர்ச்சைக்குரிய சில கருத்துகளுக்கு எதிர்வினை என்ற பெயரில் வாய்கூசும் வார்த்தைகளால் வசைமாரி பொழிந்துள்ளார். அவரது பேச்சு முழுக்கமுழுக்க வன்முறையைத் தூண்டும் விதமாக உள்ளது. 

ஏற்கெனவே இவர் பெரியார் குறித்தும் மற்ற பல தலைவர்கள் பற்றியும் பேசிய பேச்சுக்கள் ஜனநாயகம் விரும்புவோரின் விமர்சனங்களுக்கு ஆளாகின. எப்போது பேசினாலும் வரலாற்றைத் திரித்துக்கூறுவது; எந்தத் தலைவரானாலும் ஏக வசனத்தில் பேசுவது, ஆத்திரமூட்டும் பேச்சால் வலுச்சண்டைக்கு இழுப்பது, எப்படியாவது மோதல் ஏற்படுமா, அதையே ஊதிப் பெரிதாக்கி தன்னைப் பெரிய ஆளாகக் காட்டிக்கொள்ளலாமா என அலைந்துதிரிவதாகவே அவரது பேச்சும் பாணியும் இருக்கின்றன.

அமைதியைக் குலைத்து கலவரத்தைத் தூண்டுவதற்காகவே அவர் பேசி வருகிறார். கவிஞர் வைரமுத்துவின் பேச்சுக்கு மாற்றுக்கருத்தைப் பேசுவது ஜனநாயகம். ஆனால், அவரது தாயையும் மனைவியையும்கூட இழிவாகப் பேசியிருப்பது ஏற்புடையதல்ல. மேலும் வைரமுத்துவை வீதியில் நடமாடவிடலாமா என்று ராஜா எழுப்பியுள்ள கேள்வி, பா.ஜ.க.வின் வன்முறை அரசியல் மூளையிலிருந்தே வெளிப்பட்டிருப்பதைக் காண்கிறோம்.

இஸ்லாமியர்களையும் சேர்த்து வம்புக்கு இழுத்து நபிகளை அவதூறாகப் பேசியிருந்தால் இந்நேரம் வைரமுத்துவின் தலை உருண்டிருக்கும் அல்லவா என்று கேட்டிருப்பது, என்ன நியாயம்? கருத்தைக்கருத்தால் எதிர்கொள்வது என்ற நாகரிகத்தை நிராகரித்துவிட்டு பேசும்போதெல்லாம் வன்முறையைத் தூண்டும் விதமாகவே பேசும் ஹெச்.ராஜாவுக்கு த.மு.எ.க.ச கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறது.

அமைதியைச் சீர்குலைக்கும் அடாவடியான பேச்சுக்களை இனிமேலாவது ஹெச்.ராஜா நிறுத்திக்கொள்வது நல்லது. பொது இடங்களில் வன்முறையைத் தூண்டும் விதமாகப் பேசும் ஹெச்.ராஜா மீது அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இவ்வாறு த.மு.எ.க.ச.வின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.