மணலுக்கு மல்லுக்கட்டு... மயிலாடுதுறையில் டிராக்டர் உரிமையாளர்கள் போராட்டம்

மயிலாடுதுறை அருகேயுள்ள மணல் குவாரியில் மணல் எடுக்க டிராக்டர்களை அனுமதிக்காததால் அதன் உரிமையாளர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.  

நாகை மாவட்டம், மயிலாடுதுறை அருகே கடக்கம், கொள்ளிடம் ஆற்றில் அமைந்துள்ள அரசு மணல் குவாரியில் ஆன்லைன் மூலம் பணம் செலுத்தி, மணல் விற்கப்படுகிறது. இங்கு மணல் எடுத்துச்செல்ல லாரிகளை அனுமதிக்கும் பொதுப்பணித்துறையினர், திடீரென டிராக்டர்களுக்கு மட்டும் அனுமதி மறுத்துவிட்டனர். இதனால் மணல் எடுக்க வந்த சுமார் 60 டிராக்டர்களை கடலங்குடியில் போலீஸார் தடுத்து நிறுத்திவிட்டனர்.  இதனால் டிராக்டர்களை ஆங்காங்கே நிறுத்திய டிரைவர்களும், உரிமையாளர்களும் மயிலாடுதுறை சப்-கலெக்டர் பிரியங்காவைச் சந்தித்து, டிராக்டர்களில் மணல் எடுக்க அனுமதி கேட்டு மனு கொடுத்தனர்.  உடனே பரிசீலிப்பதாகக் கூறி மனுவைப் பெற்றுக்கொண்டார் பிரியங்கா.  

இதுபற்றி டிராக்டர் உரிமையாளர் ஒருவரிடம் பேசுகையில், ``மணல் எடுக்க வரும் லாரிகள் அனைத்துக்கும் குவாரி அருகே உள்ள கிராமத்தில் அரசு அதிகாரிகள் துணையுடன் தனியார் கும்பல் ஒன்று தண்டல்வரி வசூலிக்கிறார்கள். இதன் மூலம் தினசரி பல லட்சக் கணக்கான ரூபாய் வசூலாகிறது. டிராக்டர்களில் மணல் அள்ளுவதால் வாகன நெருக்கடி ஏற்படுவதுடன், டிராக்டர் மூலம் குறைந்தளவு பணமே கிடைக்கிறது என்பதால் டிராக்டர்களில் மணல் கொடுக்க மறுக்கிறார்கள்'' என்றார்.  

இறுதியாக சப்-கலெக்டர் முன்னிலையில் பொதுப்பணித்துறையினருக்கும், டிராக்டர் உரிமையாளருக்கும் நடந்த பேச்சுவார்த்தையில் 13-ம் தேதி முதல் டிராக்டர்களுக்கு மணல் அளிக்கப்படும் என்று முடிவு செய்யப்பட்டதால் போராட்டம் கைவிடப்பட்டது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!