`லாரி வைத்திருந்தவருக்கு பேருந்து ஊழியர்களைப் பற்றி என்ன தெரியும்?' - எடப்பாடியைச் சீண்டும் ராதாரவி

2 ஜி வழக்கின் வெற்றி விளக்கப் பொதுக்கூட்டம், இன்று மாலை திருப்பூரில் நடைபெற்றது. நடிகர் ராதாரவி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசினார்.

நிகழ்ச்சியில் பேசிய அவர், `பிச்சைக்காரர்கள்கூட செல்போன் பயன்படுத்தும் வாய்ப்பை தி.மு.க-வின் ராஜா வழங்கியிருக்கிறார். ஆனால், 2ஜி பற்றி தவறான சிந்தனைகளை மக்களிடத்தில் பலர் பரப்பிவிட்டார்கள். தமிழக மக்கள் அ.தி.மு.க-வுக்கு ஓட்டுப்போட்டதன் விளைவாகத்தான் இன்று தாயை இழந்த அனாதையாக தமிழகம் இருக்கிறது. கவுன்சிலர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் பார்க்க வேண்டிய வேலையை மாநிலத்தின் ஆளுநர் வந்து செய்துகொண்டிருக்கிறார். அவரை, `மக்கள் கவர்னர்' என்று மாஃபா பாண்டியராஜன் அழைக்கும் கொடுமை நிகழ்ந்துகொண்டிருக்கிறது. இன்றைக்கு சிறுபான்மையினரை கேவலப்படுத்தும் அரசு மத்தியில் ஆட்சி செய்துகொண்டிருக்கிறது. மாநிலத்தில் அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்களின்மீது அக்கறையற்ற அரசு இயங்கிக்கொண்டிருக்கிறது. லாரி வைத்திருந்த எடப்பாடி பழனிசாமிக்கும், டீக்கடை வைத்திருந்த பன்னீர்செல்வத்துக்கும் பேருந்து ஊழியர்களைப் பற்றி என்ன தெரியும். பொதுமக்கள், நடிகர்களை நம்பிக்கொண்டு இருக்கக்கூடாது. ஆர்.கே நகர் மக்களை பிச்சைக்காரர்கள் என்று சொல்கிறார் கமல்ஹாசன். ஆனால், இன்றைக்கு நான் நின்றுகொண்டிருக்கும் திருப்பூர் மாநகரத்தைச் சேர்ந்த மக்கள், ஓட்டுக்கு பணம் வாங்காதவர்கள், உழைப்பால் உயர்ந்தவர்கள். எனவே, தமிழகத்தில் தி.மு.க-வின் ஆட்சி அமைவதற்கு திருப்பூர் மக்களும், கோயம்புத்தூர் மக்களும் இனி வரும் தேர்தலில் தி.மு.க-வுக்கு வாக்களிக்க வேண்டும்' என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!