உலக அளவில் யோகாவில் கலக்கும் தாய் - மகள் இணை!

உலக அளவில், அபுதாபியில் நடைபெற்ற யோகா போட்டியில், சீர்காழியைச் சேர்ந்த சீதாவும் அவரது மகள் சுபானுவும் பங்கேற்று பதக்கங்களை வென்றிருப்பது, சீர்காழியில் பெரும் பாராட்டைப் பெற்றிருக்கிறது.  

நாகை மாவட்டம், சீர்காழியைச் சேர்ந்த மணிவண்ணன்-சீதா தம்பதியின் இளைய மகள், சுபானு.  9-ம் வகுப்பு படித்துவரும் சுபானுவுக்கு சிறு வயது முதலே யோகாவில் ஆர்வம் அதிகம். இவரது தாயார் சீதாவும் யோகா கலையைக் கற்றுத்தேர்ந்தவர்.  இந்நிலையில், மாவட்ட அளவில் நடைபெற்ற யோகா போட்டியில் முதலிடம் பெற்ற சுபானு, தொடர்ந்து மாநில அளவிலான போட்டியிலும் கலந்துகொண்டு தங்கப்பதக்கம் பெற்றார். அதன்பின் உத்தரகாண்ட்டில் நடைபெற்ற தேசிய அளவிலான 13-15 வயதுக்கு உட்பட்டோருக்கான யோகா போட்டியில் தங்கப்பதக்கத்தை வென்றார்.  

 கடுமையான உழைப்பால் வெற்றிப்பாதையை நோக்கிப் பயணித்த சுபானு, கடந்த டிசம்பர் 30-ம் தேதி, அபுதாபியில் நடைபெற்ற அமெரிக்கா, சிங்கப்பூர், துபாய், இந்தியா உள்ளிட்ட 9 நாடுகள் பங்கேற்ற உலக அளவிலான யோகா போட்டியில் கலந்துகொண்டார்.  அதில் கலந்துகொண்ட சுபானு, குறித்த நேரத்தில் பம்பரம் போல சுழன்று, யோகவில் முதலிடம் பெற்று தங்கப்பதக்கத்தை வென்று சாதனை படைத்தார்.  இதேபோல, சுபானுவுடன் சென்றிருந்த அவரது தாய் சீதாவும் அபுதாபியில் நடைபெற்ற யோகாப் பேட்டியில் 32- 40 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவில் பங்கேற்று, இரண்டாம் இடத்தை வென்று வெள்ளிப்பதக்கத்தைப் பெற்றார். தாயும், மகளும் உலக அளவில் பதக்கங்களைப் பெற்று சொந்த ஊரான சீர்காழிக்கு வந்தபோது, அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.  இருவருக்கும் பாராட்டுகள் குவிந்துவருகின்றன.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!