புதுச்சேரி மக்களுக்கு பொங்கல் பரிசு; அனுமதி அளித்தார் கிரண்பேடி

புதுச்சேரி மக்களுக்கு இலவச அரிசி மற்றும் பொங்கல் பரிசுகள் வழங்க, நிபந்தனையுடன்கூடிய அனுமதியை வழங்கியிருக்கிறார், துணைநிலை ஆளுநர் கிரண்பேடி.

கிரண் பேடி

புதுச்சேரியில், இலவச அரிசி மற்றும் சர்க்கரை வழங்குவதிலும், பொங்கலுக்கு இலவச வேட்டி, சேலை வழங்குவதிலும் துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கும் அமைச்சரவைக்கும் இடையே இழுபறி நீடித்து வந்ததது. அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் இலவசங்கள் வழங்க வேண்டும் என்ற அமைச்சரவையின் கருத்தை ஏற்க மறுத்த ஆளுநர் கிரண்பேடி, தகுதியானவர்களுக்கு மட்டுமே மக்களின் வரிப்பணம் செலவு செய்யப்பட வேண்டும் என்று சொல்லி கோப்புகளுக்கு அனுமதி அளிக்க மறுத்துவந்தார். இந்த விவகாரத்தில் மோதல் நீடித்து வந்த நிலையில், இலவச அரிசி மற்றும் பொங்கல் பொருள்களை வழங்க கவர்னர் கிரண்பேடி திடீர் ஒப்புதல் அளித்துள்ளார்.

இதுகுறித்து வாட்ஸ்அப்பில் அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  “கடந்த 8-ம் தேதி, புதுச்சேரி குடிமைப் பொருள்கள் வழங்கல்துறை அனுப்பிய 2 கோப்புகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 2017-ம் ஆண்டு ஜூலை மாதத்துக்கான இலவச அரிசிக்கு ஒப்புதல் அளித்துள்ளேன். வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு தலா 20 கிலோ அரிசியும், வறுமை கோட்டுக்கு மேல் உள்ளவர்களுக்கு தலா 10 கிலோ அரிசியும் வழங்கப்படும். மாநிலத்தின் நிதி நிலையைப் பொறுத்து, இலவச அரிசி திட்டத்தைச் செயல்படுத்தலாம். மேலும், வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளவர்கள், வறுமைக்கோட்டுக்கு மேல் உள்ளவர்களின் பட்டியலை வரும் மார்ச் 31-ம் தேதிக்குள் வெளிப்படைத்தன்மையுடன் முடிக்க வேண்டும். 2018-19-ம்ஆண்டுக்கான பொங்கல் இலவசப் பொருள்கள் வழங்கும் திட்டத்தை (விதி 9) சிறியமாற்றத்துடன் அமல்படுத்தலாம். அதற்கான நிதியை மின்னணு பணப்பரிவர்த்தனைமூலம்தான் வழங்க வேண்டும். இந்தத் திட்டத்தை புதுச்சேரி, காரைக்கால் மற்றும் ஏனாம் ஆகிய பிராந்தியங்களில் சிறப்புத் திட்டத்தின் அடிப்படையில் செயல்படுத்தலாம். குடிமைப் பொருள் வழங்கல் துறை செயலர், இயக்குநர் ஆகியோர் தரத்தை உறுதிசெய்த பின்னரே பொருள்களைக் கொள்முதல்செய்ய வேண்டும். பொருள்களைக் கொள்முதல்செய்வதற்கு முன், ஆலையில் பரீட்சார்த்த முறையில் மாதிரி சோதனைசெய்ய வேண்டும். இத்திட்டத்துக்கு, வேறு திட்டங்களுக்கான நிதியை மாற்றி செயல்படுத்தக் கூடாது” என்று கூறியுள்ளார்.

கவர்னர் ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து, சிவப்பு நிற ரேஷன் அட்டைகளுக்கு 20 கிலோ அரிசியும், மஞ்சள் நிற ரேஷன் அட்டைகளுக்கு 10 கிலோ அரிசியும் மாதந்தோறும் இலவசமாக வழங்கப்படும் என்றும் இன்று (11.01.2018) முதலே பொங்கலுக்கான இலவசப் பொருள்கள் வழங்கப்படும் என்றும் சமூக நலத்துறை அமைச்சர் கந்தசாமி தெரிவித்துள்ளார். மேலும், பொங்கல் இலவச துணிக்காக ஆதிதிராவிட சமுதாய மக்களுக்கு ஆண், பெண் இருவருக்கும் தலா 500 ரூபாய் அவரவர் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்றும், மாற்றுத் திறனாளிகள் மற்றும் இதர சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு ரேஷன் அட்டை ஒன்றுக்கு 750 ரூபாய், அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார். 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!