“அவர்கள் உங்கள் பணத்தைக் கேட்கவில்லை அமைச்சரே..!” - போக்குவரத்துத் தொழிலாளர்களுக்காகச் சாமானியரின் குரல் #BusStrikeChaos | Experience of chinniyammal due to busstrike

வெளியிடப்பட்ட நேரம்: 10:40 (11/01/2018)

கடைசி தொடர்பு:18:22 (11/01/2018)

“அவர்கள் உங்கள் பணத்தைக் கேட்கவில்லை அமைச்சரே..!” - போக்குவரத்துத் தொழிலாளர்களுக்காகச் சாமானியரின் குரல் #BusStrikeChaos

பேருந்து போக்குவரத்து

போக்குவரத்து ஊழியர்களின் போராட்டம் எப்போது முடிவுக்கு வரும்? போக்குவரத்து ஊழியர்களின் கதறலுக்கும், நம் அன்றாட வாழ்வுக்கும் என்ன தொடர்பிருக்கிறது எனும் கேள்விகளுக்கெல்லாம் விடை வேண்டுமென்றால் அவர்களின் போராட்டம் நமக்கு புரியவேண்டும்.

அவர்களின் போராட்டம் புரியவேண்டுமென்றால், சின்னியம்மாளை உங்களுக்குத் தெரியவேண்டும். ஏனெனில் சின்னியம்மாள் போன்ற சாமானியர்களின் கேள்விகள்தான் வரலாற்றில் ஆட்சிகளை அசைத்திருக்கின்றன. 

அதுசரி, காணாம போன மீனவங்க உயிருக்காக போராடுனப்பவே, காப்பாத்துறத பத்தியே கவலப்படாம, விழா கொண்டாட்டங்கள்ல மெதந்த அரசு இது, கண்ணுக்கு முன்னாடி உயிரோட போராடுற இவிங்களையா மதிக்கப்போது. நரி தொறத்ததுன்னு ஆடு புலிக்கிட்ட நாட்டாமைக்குப் போன கதையாவுல்ல இருக்கு இவிங்க பொலப்பு! நீ வா, பஸ் வராது. நாம் நடந்து போவோம்”, என்று பேருந்து நிலையத்திலிருந்து 3 கிலோமீட்டர் தொலைவிலிருக்கும் தன் ஊருக்கு நடக்க ஆரம்பித்தார் சின்னியம்மாள்.

சின்னியம்மாள் மட்டுமல்ல, இன்று இந்த போராட்டத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரின் துயரங்களுக்கும் சிரமங்களுக்கும் காரணம் போக்குவரத்து ஊழியர்கள் அல்ல! அவர்கள் இயன்றவரை ஓட்டித்தான் பார்த்தனர், வாழ்க்கையையும் பேருந்தையும். முட்டிமோத முடியவில்லை என்பதால்தான் நிறுத்தியுள்ளனர்- பேருந்தை மட்டும். வாழ்க்கையை இனி வருங்காலத்திடம் கொடுத்துவிட்டு போராடிக்கொண்டிருக்கின்றனர். எனவே, நாம் சந்திக்கும் அனைத்து சிரமங்களுக்கும் காரணம் - அரசியல் அலட்சியம்!

தலைமைச் செயலகம்

மந்தம் எனும் சொல் தேக்கத்தை குறிப்பதற்கும் செயல்படாத நிலையை குறிப்பதற்கும் பயன்படுமானால், இவ்வளவு மந்தமான அரசாங்கத்தை தமிழகம் இதுவரை சந்தித்ததில்லை. ஏழு நாள்களை கடந்துவிட்டது போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தம். சாமானியர்கள், பள்ளி மாணவர்கள் என்று அனைத்துத் தரப்பினரும் சிரமப்பட்டுக்கொண்டிருக்கின்றனர். தொடர்ந்து அறிக்கைகள் மட்டும் வாசிக்கப்படுகிறது! 13-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது என்று.  யார் தோல்வியில் தெறியுமா?
எப்படியும் நியாயம் கிடைத்துவிடும், நம் உழைப்புக்கான பணம் நம் கைக்கு வந்துவிடும் என்ற நம்பிக்கையுடன் பேச்சுவார்த்தை நடத்திய போக்குவரத்து ஊழியர்களின் தோல்வி இது!

ஏதோ திடீரென்று அவர்கள் வேலை நிறுத்தத்தில் இறங்கிவிட்டதாக அமைச்சர்களும் அரசாங்கமும் நாடகம் செய்கிறது. உண்மையை சொல்லவேண்டுமானால், அவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவில்லை. அவர்கள் வேலையில் இருந்து துறத்தியடிக்கப்பட்டுள்ளனர். நிர்பந்திக்கப்பட்டு நிறுத்தப்பட்டுள்ளனர்.

தாங்கள் செய்யும் வேலைக்கான நியாயமான சம்பளம் வழங்கப்படாத போதும், கிட்டதட்ட எட்டு வருடங்களாக அரசாங்கத்தையும் பேச்சுவார்த்தைகளையும் மட்டுமே நம்பி சாமானியர்களுக்காக உழைத்துக்கொண்டிருந்தனர் போக்குவரத்துத் தொழிலாளர்கள். நியாயமான சம்பளம் என்பதெல்லாம் அப்புறம்தான், அவர்களுக்கு வரவேண்டிய சம்பளமே வழங்கப்படாத நிலையில், இந்த பெருவணிக பொருளாதார சுழலில் அவர்கள் எல்லாவற்றையும் சகித்துக்கொண்டு வேலைப்பார்க்க முடியாது. அவர்களுடய பணம் ஊழல் எனும் பெயரில் திருடப்பட்டுள்ளது. இது திட்டமிட்ட துரத்தியடிப்புதான்!

என்ன வேலை செய்கிறார்கள் என்றே மக்களுக்குத் தெறியாத, அழுக்குப்படாத தூய கரங்களை உடைய அமைச்சர்களுக்கும், எம்.எல்.ஏ-களுக்கும் மக்களுடைய வரிப்பணமாகிய சம்பளம் - எந்த காரணமும் தெறிவிக்கப்படாமல் 100 மடங்குகளாக பெருக்கப்படுகிறது. அதுவும் இங்கே ரத்தமும் சதையுமாக ஒரு கூட்டம் கதறிக்கொண்டிருக்கும்போது, அதை சட்டையே செய்யாமல் அதிகாரம் ஆடிய ஆட்டம் இது!  அது ஒரு பிரச்னையாகவே அவர்களுக்குத் தெறியாதபோது,  மக்களின் அன்றாடத்துடனேயே பசியும் பட்டினியுமாக உழைத்துப் பிழைக்கும் போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு வெறும் 2.57 மடங்கு காரண ஊதிய உயர்வு அதிகமாகத்தெறிவது, அதை வழங்காமல் இழுத்தடிப்பது ஆச்சர்யமாக இருக்கிறது.

“இதென்னடா கூத்தா இருக்கு! இங்க இவிங்க சோத்துக்கே வழியில்லாம போராடிட்டு இருக்கும்போது, அமைதியா எம்.எல்.ஏ-க்களுக்கு சம்பள உயர்வ தாக்கல் செய்யுறாங்க! புடுங்குனவன புடுச்சு குடுயான்னு சாமிகிட்ட கேட்டா, புடுங்குனவனுக்கு பரிசு கொடுத்து அவங்கிட்டயே புடிச்சுகுடுக்குற சாமி கதையாவுல்ல இருக்கு!”

அது 2011-ம் ஆண்டின் தேர்தல் முடிவுகள் வெளியான நேரம். “போக்குவரத்துத் துறையே திவாலாகியிருக்கும். பெரிய நெருக்கடியில் இருக்கிறது போக்குவரத்துத் துறை. இந்த ஆட்சியில் யாரும் கண்டுகொள்ளவில்லை. ஆட்சி மாற்றம் வருவது நல்லதுதான்” என்றார் நடத்துநர் நாகராஜன்.

ஆனால், அதே நாகராஜன் தற்போது சொல்கிறார், “ஒருத்தனுக்கு ஒருத்தன் பாழுந்திருடன்களா இருக்காய்ங்க. இந்த ஆட்சி வந்து நிலைமை இன்னும் மோசமாயிருச்சு. எந்த ஆட்சியா இருந்தாலும் எங்களுக்கு விடிவே இல்லப்போல. ஆட்சி மாறுனாலும் பதவிக்கு வர்றது ஆசாமிங்கதான்! அந்த சாமிதான் எங்கள காப்பாத்தனும்” என்று முடித்தார். நடத்துநராக பணியாற்றி உடலில் பல தொல்லைகளைப் பரிசாகப் பெற்று, மருத்துவ செலவுக்காகவும் பிள்ளைகளின் படிப்புக்காகவும் கொடுப்பது போதுமென்று இதுவரை எந்தக் கேள்வியும் கேட்காமல் வருவதை வாங்கிக்கொண்டு வேலை செய்தவர் அவர். இன்று அவர் போராட்டம் செய்வது, ஊதிய உயர்வுக்காக அல்ல. வாழ்வாதாரத்துக்காக.

கிட்டத்தட்ட இன்று போராட்டத்தில் இறங்கியிருக்கும் பெரும்பாலான போக்குவரத்து ஊழியர்களின் நிலையும் இதுதான்.

“ஊதிய உயர்வெல்லாம அடுத்துப்பா. மொதல்ல எங்க ஊதியத்த ஒழுங்கா குடுக்கச் சொல்லுங்க. உயர்வை பத்தி அப்புறம் பேசலாம். ஏதேதோ திட்டங்களை அறிவிச்சு, ஊழல் பண்ணி கொள்ளை அடிச்சாங்க. இப்போ உழைக்கிறவங்க மடியிலையும் கைவைக்க ஆரம்பிச்சுட்டாங்க”, என்பது ஏமாற்றப்பட்ட பணத்தை திரும்பப் பெறுவதற்காக கதறி அலையும் ஒட்டுமொத்த ஊழியர்களின் குரல்.

விஜயபாஸ்கர்

“போக்குவரத்துத் தொழிலாளர்கள் சங்கத்திடம் பேச்சுவார்த்தை முடிந்தது. இனி அவர்களிடம் எந்தப் பேச்சுவார்த்தையும் கிடையாது” என்று முதல் நாள் போராட்டத்தின்போது அறிக்கை கொடுத்த அமைச்சர் விஜயபாஸ்கர், ” இன்றைக்குள் (ஜனவரி 9) பணிக்குத் திரும்பும் போக்குவரத்து பணியாளர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படமாட்டாது" என்று நாசூக்காக தனது அதிகாரத்தைக் காட்டி அறிக்கையை முடித்திருக்கிறார். ஊதிய உயர்வெல்லாம் அடுத்து இருக்கட்டும். அந்தப் பேருந்துப் போக்குவரத்து ஊழியர்களின் சம்பளத்துக்காக, மக்கள் வரிப்பணத்திலிருந்து ஒதுக்கப்பட்ட அந்த 7000 கோடி எங்கே?

அப்படி அது ஊழல் செய்யப்பட்டிருந்தால், அமைச்சர்களின் பைகளுக்கு அது சென்றிருந்தால், அவர்கள் அணிந்திருக்கும் வெண்ணிற ஆடைகளும் வெண்ணிற விபூதியும், அந்த ஊழியர்களின் வேர்வையும் அழுக்கும்தான். தற்போது அவர்களின் போராட்டம் வெற்றிபெற நாம் செய்யவேண்டியதாகிறது.

வீடு சேர்ந்த சின்னியம்மாள் தொலைக்காட்சியைப் பார்த்துவிட்டு இப்படிச் சொன்னார், “அவங்க உங்க பணத்தையா கேக்குறாங்க?  உழைச்ச பணத்த தானயா கேக்குறாங்க! அதக்குடுத்தா அவங்கபாட்டுக்கு வண்டி ஓட்டப்போறாங்க. புல் இருக்குற வயலை சுத்தி வேலி போட்டுட்டு ஆட்டுக்கு மேயத்தெறியலைன்னு சாவ சொன்ன கதையாவுல்ல இருக்கு!” என்று.

தொலைக்காட்சியில் முதல்வரை அடுத்து போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி கொடுத்துக்கொண்டிருந்தார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close