'ஏ', 'பி' பிரிவு அதிகாரிகளுக்கும் பொங்கல் போனஸ் வழங்க வேண்டும்..! ராமதாஸ் வலியுறுத்தல்

தமிழக அரசின் ‘ஏ’ மற்றும் ‘பி’ பிரிவு அதிகாரிகளுக்கும் பொங்கல் போனஸ் வழங்கப்பட வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தமிழக அரசுத் துறைகளில் பணியாற்றும் ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவு ஊழியர்களுக்கு பொங்கல் போனசாக  3,000 ரூபாய் வழங்கப்படும் என அறிவித்துள்ள தமிழக அரசு, ‘ஏ’ மற்றும் ‘பி’ பிரிவு அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுவந்த 1,000 ரூபாய் போனஸ், இந்த ஆண்டு முதல் ரத்துசெய்வதாக அறிவித்துள்ளது.

தமிழக அரசின் ‘ஏ’ மற்றும் ‘பி’ பிரிவினர், பல்கலைக்கழக மானியக்குழு, அகில இந்திய தொழில்நுட்பக் குழு, வேளாண்மை ஆராய்ச்சிக் கழக ஊதிய விகிதம் பெறுபவர்கள், அனைத்திந்திய பணி ஊழியர்கள் ஆகியோருக்கு பொங்கல் போனஸ் வழங்கப்படாததற்கு, தமிழக அரசின் சார்பில் காரணங்கள் எதுவும் கூறப்படவில்லை. இந்தப் பிரிவினர், அதிக ஊதியம் பெறக்கூடியவர்கள் என்பதுதான் அரசின் இந்த முடிவுக்குக் காரணமாக இருக்கக்கூடும். இதுதான் காரணம் என்றால், அதை ஏற்க முடியாது. ‘ஏ’ மற்றும் ‘பி’ பிரிவினரும் இப்போதுதான் அதிக ஊதியம் பெறுகிறார்கள் என்று கூற முடியாது. அதிகாரப் படி நிலையின் மேல்மட்டத்தில் இருப்பவர்கள், அதிக ஊதியம் பெறுவது இயல்பானதுதான். அதன்படிதான் இவர்களும் அதிக ஊதியம் பெறுகின்றனர். இதைக் கடந்த கால அரசுகளும் அறிந்து இருந்ததால்தான் இவர்களுக்காக சிறப்பு போனஸ் என்ற தனிப்பிரிவை ஏற்படுத்தி, அடையாளத் தொகையாக 1,000 ரூபாய் வழங்கிவந்தன. 30 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த நடைமுறை தொடர்கிறது.

சிறப்பு போனஸை, ஊதியத்தின் அடிப்படையில் இதுவரை இருந்த அரசுகள் பார்க்கவில்லை; இனியும் பார்க்கத் தேவையில்லை. மதங்களைக் கடந்த தமிழர்களின் திருநாளான பொங்கல் விழாவில் குழந்தைகளுக்கு பெற்றோர் தரும் பரிசைப் போன்று, அரசு ஊழியர்களுக்கு அரசு தரும் பரிசாகவே இதைப் பார்க்க வேண்டும். எனவே, ‘ஏ’ மற்றும் ‘பி’ பிரிவு அதிகாரிகளுக்கு போனஸ் கிடையாது என்ற முடிவை மாற்றிக்கொண்டு 1,000 ரூபாய் போனஸ் வழங்க வேண்டும்' என்று குறிப்பிட்டுள்ளார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!