வெளியிடப்பட்ட நேரம்: 10:23 (11/01/2018)

கடைசி தொடர்பு:10:28 (11/01/2018)

2.0 நியூ என்ட்ரி: பொள்ளாச்சி பலூன் திருவிழா கோலாகலம்

சர்வதேச பலூன் திருவிழா, பொள்ளாச்சியில் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டுவருகிறது.

பலூன் திருவிழா

சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் விதமாக, சுற்றுலாத்துறை மற்றும் தனியார் நிறுவனங்கள் இணைந்து கோவை மாவட்டம் பொள்ளாச்சியில், கடந்த மூன்று ஆண்டுகளாக சர்வதேச பலூன் திருவிழாவை நடத்திவருகின்றனர். இந்நிலையில், 4-வது சர்வதேச பலூன் திருவிழா, பொள்ளாச்சியில் நேற்று மாலை தொடங்கியது. பொள்ளாச்சி சப் கலெக்டர் காயத்திரி கிருஷ்ணன் இதைத் தொடங்கி வைத்தார். இதில், அமெரிக்கா, மெக்ஸிகோ, ஜெர்மனி, நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 12 பலூன்கள் பறக்கவிடப்பட்டுள்ளன. பொள்ளாச்சி, சக்தி மில்ஸ் மைதானத்தில் தொடங்கியுள்ள இந்தத் திருவிழா, வரும் 16-ம் தேதி வரை நடக்கிறது. சுற்றுலாத்துறையின் பிரமாண்ட தேசியக்கொடி வடிவிலான பலூன், எந்திரன் 2.0 பலூன், ஆங்ரி பேர்டு பலூன் ஆகியவை 12 பலூன்களில் முக்கியமானவையாகக் கருதப்படுகிறது. 
பலூன் திருவிழா நேற்று தொடங்கினாலும், மக்கள் இன்று முதலே அனுமதிக்கப்படுகிறார்கள். காலை மாலை என தினசரி இரண்டு வேளை திருவிழா நடைபெற உள்ளது. முதல் நாளான இன்று, அதிகாலை முதலே மக்கள் ஆர்வத்துடன் வரத்தொடங்கியுள்ளனர்.  பொங்கல் விடுமுறை தொடங்க உள்ளதால், மக்கள் கூட்டம் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.