காணும் பொங்கல் `ஆற்றுக்குள் விளையாடுவதற்கு'த் தயாரான ஸ்ரீவைகுண்டம் மணல் மேடு

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அணையின் கீழ்ப் பகுதி மணல் மேட்டில், சீமைக் கருவேல மரம் அகற்றப்பட்டு சுத்தப்படுத்தப்பட்டுள்ளது. 15 வருடங்களுக்குப் பிறகு, காணும் பொங்கலன்று ‘ஆற்றுக்குள்  விளையாடுதலை’க் கொண்டாடும் உற்சாகத்தில் இப்பகுதி மக்கள் உள்ளனர்.

srivaikundam

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களைச் சேர்ந்த மக்கள், காணும் பொங்கல் அன்று தாமிரபரணி ஆறு, அணைப் பகுதிகளில் குளித்துவிட்டு, அணையின் கீழ்ப் பகுதியில் உள்ள மணல் மேட்டில் உறவினர், நண்பர்களுடன் வட்டமாக அமர்ந்து,  வீட்டிலிருந்து எடுத்துவந்த சாப்பாடு, கரும்பு, பனங்கிழங்கு ஆகியவற்றை உண்டு மகிழ்வர். இதை, 'ஆற்றுக்குள் விளையாடுதல்' என்பார்கள். ஆனால், அணையின் கீழ்ப் பகுதியிலிருந்து புன்னக்காயல் கடற்கரை வரை சீமைக்கருவேல மரங்கள் அடர்ந்து காணப்பட்டு வந்ததால், இந்த ஆற்றுக்குள் விளையாடும் பொழுதுபோக்கு மறைந்தது.

srivaikundam

தாமிரபரணி பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, பாசனக் குளங்கள் தூர் வாரப்பட்டது. இப்பணியால் கடைமடைக் குளங்கள் வரை கூடுதலாக தண்ணீர் சேமிக்கப்படுகிறது. ஆற்றில்  சூழ்ந்து காணப்பட்ட அமலைச் செடிகள் அகற்றப்பட்டதால், ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி, தற்போது கடல் போல காட்சியளிக்கிறது. அத்துடன், அணையின் கீழ்ப் பகுதியில் பழைய பாலத்திலிருந்து புதிய பாலம் வரை அடர்ந்து வளர்ந்த சீமைக் கருவேல மரங்களும் அடியோடு அகற்றப்பட்டு மணல் பரப்பும் சீரமைக்கப்பட்டதால், செம்மண் சூழ்ந்து அழகுறக் காணப்படுகிறது.

இதனால், 15 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த மணல் பரப்பில் காணும் பொங்கலைக் கொண்டாட அப்பகுதி மக்கள் உற்சாகமாக உள்ளனர்.  மணல் மேட்டை சமதளமாக்கும் இறுதிக்கட்ட பணி  நடைபெற்றுவருகிறது. இப்பணியை ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் தாமஸ் பயஸ் அருள் தலைமையிலான அதிகாரிகள் பார்வையிட்டனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!