வெளியிடப்பட்ட நேரம்: 11:15 (11/01/2018)

கடைசி தொடர்பு:11:25 (11/01/2018)

`ஒகி புயல் நிவாரண நிதியிலிருந்து ஹெலிகாப்டருக்கு வாடகை!’ - குற்றச்சாட்டை மறுக்கும் பினராயி விஜயன்

ஒகி புயல் நிவாரண நிதியிலிருந்து, கட்சி மாநாட்டுக்குச் சென்றதற்கு ஹெலிகாப்டர் வாடகை செலுத்தியதாக, கேரள முதல்வர் பினராயி விஜயன் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

pinarayi vijayan

டிசம்பர் 26-ம் தேதி, திருச்சூர் மாவட்ட மார்க்சிஸ்ட் கட்சி மாநாடு நடைபெற்றது.  மாநாட்டில் பங்கேற்க கேரள முதல்வர் பினராயி விஜயன் திருவனந்தபுரத்திலிருந்து திருச்சூருக்கு தனி ஹெலிகாப்டரில் சென்றார். ஜனவரி 6-ம் தேதி, திருவனந்தபுரம் மாவட்ட ஆட்சியருக்கு ஹெலிகாப்டர் வாடகை செலுத்துமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஒகி புயல் விவகாரம் தொடர்பாக மத்திய அமைச்சர்களுடன் விவாதிப்பதற்காக திருச்சூர் சென்றதாகக் காரணம் காட்டி, ஒகி புயல் நிவாரண நிதியிலிருந்து ஹெலிகாப்டர் வாடகைப் பணம் ரூ.8 லட்சம் செலுத்தப்பட்டுள்ளது.

இந்த விஷயம் தெரியவந்ததும், எதிர்க்கட்சியான காங்கிரஸ் கடுமையாக விமர்சித்தது. கேரள மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதாலா, 'பிச்சைக்காரர்களிடமிருந்து திருடுவதற்குச் சமம்' என்று கடுமையாக விமர்சித்தார். இதைத் தொடர்ந்து,  ஒகி புயல் நிவாரண நிதியிலிருந்து வழங்கப்பட்ட தொகை ரத்துசெய்யப்பட்டுள்ளது. முதல்வருக்குத் தெரியாமல் தொகை செலுத்தப்பட்டதாகக் காரணம் கூறப்பட்டுள்ளது. 

இதுகுறித்து பினராயி விஜயன் கூறுகையில், ''அரசு அதிகாரிகள்தான் முதல்வர், அமைச்சர்களுக்கான கார், ஹெலிகாப்டருக்கான செலவினங்களைச் செலுத்துகின்றனர். எந்தக் கருவூலத்திலிருந்து செலுத்துகின்றனர் என்று ஒவ்வொன்றையும் நான் நேரடியாக கண்காணித்துக்கொண்டிருக்க முடியாது. எனினும், என் கவனத்துக்கு வந்ததும், ஒகி நிவாரண நிதியிலிருந்து செலவழிக்கப்பட்ட தொகைக்கு ஈடு செய்யப்பட்டுவிட்டது. இதற்கு முன், கேரள முதல்வராக இருந்தவர்கூட இடுக்கிக்கு ஹெலிகாப்டர் பயணம் மேற்கொண்ட போது, பேரிடர் நிவாரண நிதியிலிருந்துதான் பணம் செலவழிக்கப்பட்டுள்ளது '' என்று பதிலளித்துள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க