வெளியிடப்பட்ட நேரம்: 12:20 (11/01/2018)

கடைசி தொடர்பு:12:20 (11/01/2018)

அதிகரிக்கும் மவுசு! - கேரளாவுக்கு ஏற்றுமதியாகும் தேனி வெல்லம்

தேனி மாவட்டத்தில், நெல்லுக்கு அடுத்தபடியாக அதிகம் சாகுபடிசெய்யப்படுவது கரும்பு. பெரும்பாலான கரும்பு விவசாயிகள், சர்க்கரை ஆலைக்கு கரும்பை அனுப்பினாலும் சிலர் கரும்புத் தோட்டத்திலேயே கொப்பரை அமைத்து வெல்லம் காய்ச்சுகிறார்கள். குறிப்பாக, போடி, முந்தல், கோடாங்கிபட்டி, பெரியகுளம், லெட்சுமிபுரம் ஆகிய பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பரளவில் பரந்து கிடக்கும் கரும்புத் தோட்டங்களில் வெல்லம் காய்ச்சப்படுகிறது.

தேனி மாவட்ட உருண்டை வெல்லம், பெரும்பாலும் கேரளாவுக்கு ஏற்றுமதி செய்யப்படுவது வழக்கம். அதிலும், கார்த்திகை மாதம் தொடங்கி தை மாதம் வரையிலான சபரிமலை சீசனில், கேரளாவிலிருந்து உருண்டை வெல்லத்துக்கு ஆர்டர்கள் குவியும். அதற்கு ஏற்றாற்போல விவசாயிகளும் வெல்லம் தயாரித்துக் கொடுப்பர்.

இதுதொடர்பாக கரும்பு விவசாயிகள் சிலரிடம் பேசினோம், "கடந்த ஆண்டு போதிய மழை இல்லாததால் நஷ்டம் ஏற்பட்டது. ஆனால், இந்த ஆண்டு பரவாயில்லை. தேனி மாவட்டத்தில் தயாராகும் உருண்டை வெல்லத்துக்கு கேரளாவில் மவுசு அதிகம். இதை, 'மலையாள உருண்டை' என்றும் சொல்வார்கள். சபரிமலை சீசனில் அதிக ஆர்டர்கள் வரும். கேரள வியாபாரிகள் நேரடியாக எங்களை அணுகி வெல்லம் வாங்கிச்செல்வார்கள்" என்றார்.

தேனி மாவட்டத்தில் பயிரிடப்படும் கரும்பு, பெரும்பாலும் மலையடிவாரப் பகுதிகளாக இருப்பதால், ஆண்டு முழுவதும் கரும்பு சாகுபடியும், உருண்டை வெல்லம் உற்பத்தியும் நடந்தவண்ணம் இருக்கும். இந்த வருடம் போதிய மழை பெய்ததால், கரும்பு சாகுபடி நல்லபடி இருந்தபோதும், கரும்புக்கான நிலுவைத்தொகை பிரச்னை காரணமாகப் பல விவசாயிகள் இந்த ஆண்டு கரும்பு சாகுபடி செய்யவில்லை என்பதே கள நிலவரம்.