வெளியிடப்பட்ட நேரம்: 11:50 (11/01/2018)

கடைசி தொடர்பு:13:07 (11/01/2018)

“என் பெண் தன்மைக்கு மதிப்பளிச்சது கல்லூரித் தோழன்!” சிலிர்க்கும் திருநங்கை இன்பா

“1990 காலகட்டம் அது. என்னோட பள்ளிப்பருவ நாள்கள்லதான் எனக்குள்ள பெண் தன்மை இருக்கிறதை உணர ஆரம்பிச்சேன். ஆனா, அப்போவெல்லாம் சொசைட்டியில அந்த மாதிரி உணர்வுகளை ஏத்துக்குறவங்க ரொம்பக் குறைவு. கேலியும், கிண்டலும் பண்ணியே சாகடிச்சிடுவாங்க. அதுமட்டுமில்லாம என் வீட்டுச் சூழலையும், ஃபியூச்சரையும் மனசுல வெச்சிக்கிட்டு உள்ளுக்குள்ள இருந்த உணர்வுகளுக்கு உயிர் கொடுக்காமலேயே புதைச்சு வெச்சிருந்தேன்” திருநங்கை இன்பா தன் உணர்வுகளைப் பகிர்ந்துகொள்ளும்போது அவர் வார்த்தைகளில் நிதானமும் பக்குவமும் வெளிப்படுகிறது. 

திருநங்கை இன்பா

நிதானம் இருந்தால் வாழ்வில் சோதனைகளைக் கடந்து சாதிக்கலாம் என்பதற்கு இன்பா ஆகப்பெரும் சாட்சியாக நிற்கிறார். தன் கல்லூரித் தோழனுடன் தன் வாழ்க்கையைப் பகிர்ந்துகொண்டு சந்தோஷமாக இருக்கிறார்.

“எனக்கு ஏன் இப்படியான உணர்வு வருதுன்னு பலமுறை என்கிட்டேயே கேள்வி கேட்டுக்கிட்டேன். 11-ம் வகுப்பு படிக்கிறப்ப என் நண்பர்கள் எல்லோரும் எதிர்பாலினத்தின் மீது கவனத்தை செலுத்தும்போதும் அவர்களைப் பற்றி உடல்ரீதியாகப் பேசும்போதும் எனக்குக் கூச்சமா இருக்கும். என்னோட ஆட்டிட்யூட் எல்லாமே கொஞ்சம் கொஞ்சமா மாற ஆரம்பிச்சது. அதை நண்பர்கள் எல்லாரும் சீக்கிரமே கவனிச்சிட்டாங்க. அதுக்கப்பறம் டீஸ் பண்றதும் என்னைப் பத்தி தப்பா பேசுறதும் அடிக்கடி நடக்க ஆரம்பிச்சது. ஆனா, அதையெல்லாம் நான் பெருசா எடுத்துக்கிட்டதில்லை. ஏன்னா, என்னைப் பத்தி தப்பா பேசுற யாருமே என் முன்னாடி பேச மாட்டாங்க. அதுக்குக் காரணம், நான் நல்லா படிப்பேன். க்ளாஸ் ரூம்ல என் உதவி எப்போதுமே அவங்களுக்குத் தேவைப்பட்டது. நாள்கள் போகப்போக என்னுடைய மாற்றங்களை நான் அதிகமா உணர ஆரம்பிச்சேன். ஆனாலும், மற்ற திருநங்கைகள் மாதிரி பிச்சை எடுக்கிறது, பாலியல் தொழிக்குப் போகுறது மாதிரி ஆகிடக்கூடாதுங்கிற பயம் உள்ளுக்குள்ள இருந்துக்கிட்டே இருக்கும். அதனாலதான் என் கவனத்தையெல்லாம் படிப்புல காட்டினேன்” 

பள்ளிப்பருவம் முடியும்வரை தனக்குள் இருந்த பெண் தன்மையை இயன்ற வரை மூடி மறைத்தவர் இன்பா. ஆனால், கல்லூரிக்காலத்தில் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளாமல் இருக்க முடியவில்லை. பக்குவப்பட்ட வயது அது. எது சரி எது தவறு என்று அவரால் புரிந்துகொள்ள முடிந்திருக்கிறது. அதோடு, வெளியுலக அனுபவமும் கிடைக்க இதற்கு மேல் நம் உணர்வுகளை ஏன் கலங்கப்படுத்த வேண்டும் என்று நினைத்து தன்னை திருநங்கைகள் கம்யூனிட்டியோடு தொடர்புபடுத்திக்கொண்டார். திருநங்கையோடு நெருங்கிப் பழகும்போதுதான் அவர்கள் எப்படியான சவால்களையும் சோதனைகளையும் சந்தித்துக்கொண்டிருக்கிறார்கள் என்பது புரிய ஆரம்பித்திருக்கிறது. இப்போதுள்ள சூழலில் நானும் ஒரு திருநங்கையாக மாறிவிட்டால் நம்முடைய எதிர்காலமும் கேள்விக்குறியாகிவிடுமே என்ற எண்ணம் அவர் மனதைத் துளைக்க மீண்டும் வெளியே நடிக்க ஆரம்பித்திருக்கிறார். 

“திருநங்கைகள்னாலே பாலியல் தொழில் செய்றவங்கதான்னு பொதுமக்கள் மத்தியில ஒரு தவறான புத்தி இருக்கு. அதைப் பல திருநங்கைகள் மாற்றிக் காட்டிட்டு இருக்காங்க. அவங்களை மாதிரி நானும் சாதிச்சுக் காட்டணும்னு முடிவு பண்ணினேன். ப்ளஸ் டூ முடிச்சதும் இன்ஜினீயரிங் சேர்ந்தேன். ஸ்கூல்லயே நிறையச் சவால்களை சந்திச்சிட்டதால கல்லூரி நண்பர்களைச் சமாளிக்கும் கலை ஓரளவுக்குத் தெரிந்துவிட்டது. வகுப்பறையில் மாணவனாக இருக்கும்போது ஒவ்வொரு நொடியும் தப்பு பண்றோமோன்னு நினைச்சு மனசு வலிக்கும். ஆனா, மாலை நேரங்கள்ல திருநங்கைகளோடு சேர்ந்து வெளியில போகும்போது சந்தோஷமா இருப்பேன்.

நாலு வருஷத்தில் அரியரே இல்லாம பி.இ பாஸ் பண்ணினேன். ஒரு ஐ.டி கம்பெனியில நல்ல பேக்கேஜ்ல வேலை கிடைச்சது. அப்போக்கூட முழுமையான பெண்ணா மாற முடியாம தவிச்சிருக்கிறேன். சர்ஜரி பண்ணிக்கலை, பெண்கள் மாதிரி ட்ரெஸ் போட்டுக்கலை. உள்ளே இருக்குற உணர்வை அடக்கிக்கிட்டு வெளியில வேஷம் போட்டேன். வேலையில காட்டின சின்சியாரிட்டி அடுத்தடுத்து எனக்கு ப்ரோமோஷனை கொடுத்துச்சு. ஆனா, பாருங்க அங்கேயும் சில ஆண்களோட ஆதிக்கம் தொடர்ந்துச்சு. என் வளர்ச்சி பிடிக்காத ஓர் ஆண் மீட்டிங்க்ல நான் திருநங்கைன்னு சொல்லி என்ன பத்தின ரகசியத்தை எல்லார் முன்னேயும் போட்டு உடைச்சார். சுக்கு நூறா ஒடைஞ்சிப்போய் அந்தக் கம்பெனிய விட்டு விலகி வந்தேன். அதுக்கப்பறம் தனிமை கொடுத்த விரக்தி எனக்குள்ள ஒரு பெரும் சக்தியா மாறுச்சு. ஆமா, நான் திருநங்கைதான். அதுக்கு இப்ப என்னன்னு சத்தம்போட்டு கத்துனேன். அதுவரை வீட்டுக்குப் பயந்து இந்தச் சமூகத்துக்கு பயந்து வாழ்ந்து ஆண்வேஷம் போட்டுக்கிட்ட நான் முதல்முறையா தயக்கங்களை உடைச்சு என்னை ஒரு பெண்ணா காட்டிக்க ஆரம்பிச்சேன். 

இன்பா

என் குடும்பம் என்னோட உணர்வுகளைப் புரிஞ்சிக்க ஆரம்பிச்சாங்க. அப்பா, அம்மா கஷ்டப்படுத்தல. நீ உன் விருப்பப்படியே இரு. ஆனா, தப்பான எந்தத் தொழில்லேயும் போய்டாதன்னு அண்ணன் ஊக்கம் கொடுத்தான். சர்ஜரி பண்ணிக்கிட்டேன். பெண்ணுக்கான அடையாளங்களை முழுசா ஏத்துக்கிட்டேன். அப்போக்கூட நாம நல்லா படிச்சிருக்கோம். மத்தவங்களுக்கு முன்னுதாரணமாத்தான் இருக்கணும்னு உறுதியா இருந்தேன்” திடமாகப் பேசும் இன்பாவின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அவரை திருமணம் செய்துகொண்டிருக்கிறார் லெனின் என்றொரு ஆண். அவர் இன்பாவின் கல்லூரி நண்பர் என்பதுதான் ஆச்சர்யம். 

என்ன மாதிரி திருநங்கைகளுக்கு தனிமைங்கிறது ஒரு சாபம் தம்பி. குடும்பத்தை விட்டு பிரிஞ்சிருக்குற எங்களுக்கு ஒரு துணை இருந்தா நல்லா இருக்கும்னு நினைப்போம். நான் நிறையப் பேர பார்த்துட்டேன். எங்களை ஏமாத்துறதுக்காகவே இங்க நிறைய குரூப்பு சுத்திக்கிட்டு இருக்காங்க. ஆனா, லெனின் எனக்கு அப்படி இல்ல. என்னோட கல்லூரித் தோழன். என்னைப் பத்தி அவனுக்கு நல்லா தெரியும். அடிக்கடி என்கிட்ட வந்து நீ ஏன் இப்படி நடந்துக்குற, இது நல்லா இல்ல. நீ ஆண் தன்மையோட நடந்துக்கோ. இந்த கேரக்டர் உன்னோட ஃபியூச்சர பாதிக்கும்னு சொல்லி என்ன மாத்துறதுக்காக எவ்வளவோ ட்ரை பண்ணுனான்.

அப்பா, அம்மாவுக்கு அடுத்தபடியா என்மேல அக்கறை எடுத்துக்கிட்ட ஒரு நல்ல நண்பன். ரெண்டு பேருக்கும் இடையில எவ்வளவோ சண்டை வந்திருக்கு.  ஆனாலும், அதைத்தாண்டி எனக்கு அவன் மேல காதல் இருந்துச்சு. அவனும் என்னை கேர் பண்ணிக்க ஆரம்பிச்சான். நான் முழுசா பெண்ணா மாறினதும் அவன்கிட்ட என்ன கல்யாணம் பண்ணிக்கிறியான்னு கேட்டேன். எந்த ஒரு ஆணும் யோசிக்கக்கூடிய விஷயம் இது. ஆனா, லெனின் எனக்கு உடனே சம்மதம் சொன்னான். கல்யாணம் பண்ணிக்கிட்டோம்” முகம் சிவக்கிறது இன்பாவுக்கு. 

திருமணத்துக்குப் பிறகு தன் கணவரின் உதவியோடு, பல ஏழைக்குழந்தைகளுக்கு மாலை நேரங்களில் பாடம் நடத்திக்கொண்டிருக்கிறார். டீன் ஏஜ் பருவத்தில் வீட்டை விட்டு வெளியேறும் திருநங்கைகள் தவறான வழியில் சென்றுவிடாமல் இருக்க வழி காட்டுகிறார். போதைப் பொருள்களுக்கு அடிமையானவர்களுக்கு தன்னம்பிக்கை கொடுப்பதும் விழிப்பு உணர்வு வகுப்புகள் எடுப்பதுமாக தமிழ்நாடு, மும்பை என சுற்றிக்கொண்டே இருப்பவருக்கு ஆதரவற்ற குழந்தைகளுக்காக ப்ளே ஸ்கூலும் திருநங்கைகளுக்காக ஈவ்னிங் ஸ்கூல் ஆரம்பிப்பதுமே எதிர்காலக் கனவு. 

இன்பாவும் அவர் கனவுகளுக்கு உயிர் கொடுக்கும் கணவர் லெனினும் இந்தச் சமூகத்தில் பேரன்பின் ஊற்று.


டிரெண்டிங் @ விகடன்