வெளியிடப்பட்ட நேரம்: 13:10 (11/01/2018)

கடைசி தொடர்பு:16:46 (09/07/2018)

'நிழற்குடையைக் காணோம்; விளம்பரப் பலகைகள்தான் இருக்குது'- புலம்பும் பயணிகள்

 

'இது, பயணியர் நிழற்குடையா, இல்லை தனியார் நிறுவனங்கள், கம்பெனிகள் விளபரம் பண்ணும் இடமான்னு தெரியலை. பயணிகள் நிழலுக்காக கட்டப்பட்ட இந்த நிழற்குடையை இப்போ சில தனியார் கம்பெனிகள் ஆக்கிரமித்து, தங்கள் கம்பெனிகளின் விளம்பரப் பலகைகளை வைத்திருக்கிறது. இதனால், தவிக்கும் பயணிகள் வெடிக்கிறார்கள்.

கரூர் மாவட்டம், குளித்தலை நகராட்சி காந்தி சிலை முன் இருக்கும் இந்தப் பயணியர் நிழற்குடை. பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் மருதராஜாவின் தொகுதி நிதியில் கட்டப்பட்டது. ஆனால், அந்தப் பயணியர் நிழற்குடைதான் தனியார் கம்பெனிகளின் ஆக்கிரமிப்பில் உள்ளதாக மக்கள் புலம்புகின்றனர்.

இதுபற்றி நம்மிடம் பேசிய அவர்கள்,  'இந்த  நிழல்குடை கட்டப்பட்டதால், திருச்சியிலிருந்து கரூர் போகும் பேருந்துகள் இங்கே நின்று பயணிகளை ஏற்றிச் சென்றன. இதனால்,பேருந்துகள் வரும்வரை பயணிகள் இந்த நிழல்குடையில் ஒதுங்கி காத்திருப்பார்கள். ஆனால், இந்த நிழல்குடைக்குப் பின்னே கடைகள் வைத்திருக்கும் சிலர், இந்த நிழல்குடையை ஆக்கிரமித்து, அந்த நிழல்குடையின் முன்புறம் தங்களது கடைகளுக்கான விளம்பரப் பலகையை வைத்துள்ளனர். இதனால்,பேருந்துகள் இப்போது இங்கு நின்றுபோவதில்லை. ஏற்கெனவே, இதே ஒன்றியத்தில் உள்ள அய்யர்மலையிலும்  இப்படித்தான் இரண்டு பயணியர் நிழல்குடை கட்டப்பட்டு, தனியார் ஆக்கிரமிப்பால், மக்கள் பயன்பாட்டில் இல்லாமல் போய்விட்டது. இப்போது, இந்த நிழல்குடையும் இப்படி தனியார்கள் ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ளது. மக்கள் வரிப்பணத்தில் கட்டப்பட்ட இந்த நிழல்குடை, மக்கள் பயன்பாட்டில் இல்லைனா எப்படி? தங்கள் கடைகளுக்கு முன்பு இந்த நிழல்குடை மறைப்பாக இருப்பதால், பயணிகள் வருவதில்லை. அதனால், கடை முதலாளிகள் இந்த நிழல்குடையை ஆக்கிரமித்துவிட்டார்கள். உடனே, இந்தப் பயணியர் நிழல்குடையை மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வரணும். இல்லைனா,போராட்டம்தான்' என்றார்கள்.