`எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் தலைவர்கள்; நான் ஒரு தொண்டன்!’ - உள்ளாட்சிக்குத் தயாராகும் ‘தீந்தமிழன் தினகரன் பேரவை’ #VikatanExclusive

சட்டசபையில் தினகரன்

ஆர்.கே.நகர் தேர்தல் வெற்றிக்குப் பிறகு, தினகரனின் ஒவ்வொரு நடவடிக்கையையும் உன்னிப்பாகக் கவனித்து வருகிறது ஆளும் அ.தி.மு.க அரசு. ‘அடுத்தடுத்து இந்த அரசு தோல்விகளை எதிர்கொள்ளப்போகிறது. 100 சதவிகித கட்சித் தொண்டர்களும் நம் பக்கம் வர இருக்கிறார்கள்' என ஆதரவாளர்களிடம் பேசியிருக்கிறார் தினகரன். ‘உள்ளாட்சித் தேர்தலுக்காக, 'தீந்தமிழன் தினகரன் பேரவை' என்ற பெயரில் புதிய அமைப்புக்கான உறுப்பினர் சேர்க்கை வேலைகள் தீவிரமடைந்துள்ளன' என்கின்றனர் டி.டி.வி.ஆதரவாளர்கள். 

சட்டசபையில் தன்னந்தனியாக அமர்ந்துகொண்டு ஆளும்கட்சியின் நடவடிக்கைகளை விமர்சித்து வருகிறார் தினகரன். சபைக்கு வெளியே அவர் அளிக்கும் பேட்டிகள் வைரலாகி வருகின்றன. 'என்னைப் பார்த்ததும் யாருக்கும் தெரியாமல் அமைச்சர் ஒருவர் வணக்கம் வைத்தார்' எனக் கொளுத்திப் போடுவதும், 'நான் பேசுவதற்கு சபாநாயகர் வாய்ப்பு அளிக்கவில்லை' எனச் செய்தியாளர்களுக்கு விளக்கமளிப்பதும் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. அதேநேரம், உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்வது குறித்து நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தியிருக்கிறார் தினகரன். சென்னை, டி.டி.கே.சாலையில் உள்ள தனியார் ஹோட்டலில் மாவட்டச் செயலாளர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள், பேச்சாளர்கள் என 80 பேர் கலந்துகொண்ட நிகழ்வில் மனம் திறந்து பேசியிருக்கிறார் தினகரன். சுமார் 40 நிமிடம் நீடித்த அவரது பேச்சில் ஒவ்வொருவரையும் தனிப்பட்ட முறையில் குறிப்பிட்டுப் பாராட்டியிருக்கிறார். உளவியல்ரீதியாக அமைந்த அவரது பேச்சை நாஞ்சில் சம்பத் உள்ளிட்ட நிர்வாகிகள் வெகுவாக ரசித்துள்ளனர். 

வெற்றிவேல்“ஆர்.கே.நகர் வெற்றியைத் தமிழகம் முழுவதும் பரவலாக்குவதுதான் தினகரனின் நோக்கம். 'உள்ளாட்சித் தேர்தல் உட்பட அடுத்து வரக்கூடிய தேர்தல்களில் எடப்பாடி பழனிசாமி அணி தோல்வி அடைந்துவிட்டால், அவரிடம் இருக்கும் இதர நிர்வாகிகள் நம்பக்கம் வந்துவிடுவார்கள். 100 சதவிகிதம் கட்சி நம்முடைய கைக்கு வந்துசேரும்' என உறுதியாகக் கூறிவிட்டார் டி.டி.வி. கூட்டத்தில் அவர் பேசும்போது, ‘ஆர்.கே.நகரில் நான் வெறும் வேட்பாளர்தான். பிரசாரத்துக்காக ஏதோ போய்விட்டு வந்தேன். தொடக்கநாள் முதல் பெருவாரியான வெற்றியை என் கைக்குக் கொண்டுவந்து சேர்த்தது வரையில் வெற்றிவேலுக்குதான் அனைத்துப் பெருமைகளும் போய்ச் சேரும். நான் சிறையில் இருந்தபோது, எனக்காக மாவட்டத் தலைநகரங்களில் கூட்டங்களைத் திரட்டிய நாஞ்சில் சம்பத்தையும் புகழேந்தியையும் எப்படி மறக்க முடியும். எனக்கான ஆதரவு வளையத்தைக் குறையாமல் பார்த்துக்கொண்டவர்கள் இவர்கள். கல்லூர் வேலாயுதம், மேலூர் சாமி, எனக்கு உறுதுணையாக நின்ற 18 எம்.எல்.ஏ-க்கள் (ஒவ்வொருவரையும் பெயர் சொல்லி விவரித்திருக்கிறார்), கழக நிர்வாகிகள் ஆகியோரின் பங்களிப்புகளை வார்த்தைகளால் விவரிக்க முடியாது' என்றவர், 

தொடர்ந்து பேசும்போது, 'என்னிடம் சாதிரீதியாகச் சிலர் வந்து பேசுகிறார்கள். அவர்களிடம், ‘நான் சாதிக்கு அப்பாற்பட்டவன். சாதி அடையாளத்தோடு என்னிடம் வர வேண்டாம்' என உறுதியாகக் கூறிவிட்டேன். அதேபோல், மற்றவர்களைக் குறை சொல்லிக்கொண்டும் சிலர் வருகிறார்கள். அடுத்தவர்களைப் பற்றிப் போட்டுக்கொடுத்து வாழ்வதைவிட, அமைப்பின் வளர்ச்சிக்காக உழைத்து வாழ்வது மேல். யாருடைய நடிப்பும் என்னிடம் எடுபடாது. உழைப்பவர்களுக்கு உரிய மரியாதையைக் கொடுப்பேன். தவிர, நான் காரில் போகும்போதெல்லாம் என்னுடன் வரும் நான்கு பேரைப் பற்றியும் சொல்கிறார்கள். காரில் நான்கு பேர்தான் ஏற முடியும். என்னுடன் வருவதாலேயே அவர்களை நான் வளர்த்துவிடுகிறேன் என்பது பொருள் அல்ல. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் மாபெரும் தலைவர்கள். நான் தொண்டர்களில் ஒருவனாகவே இருந்து உங்களை வழிநடத்த விரும்புகிறேன். 'ஓர் ஊரில் 10,000 வாக்குகளை வைத்திருக்கும் நிர்வாகி ஒருவர் இருக்கிறார்; நம்மிடம் வருவார்' என யாரும் எதிர்பார்த்துக் காத்திருக்க வேண்டாம். நம்முடைய வேலையை நாம் சிறப்பாகச் செய்தால், அனைவரும் நம்மை நோக்கி வருவார்கள்' எனப் பேசி முடித்தார். அவருடைய 40 நிமிட பேச்சின் மூலம் கூட்டத்தில் பங்கேற்ற ஒவ்வொருவரின் மனதிலும் நிறைந்துவிட்டார். இப்படியொரு தேர்ந்த பேச்சை நிர்வாகிகள் யாரும் எதிர்பார்க்கவில்லை" என்றார் விரிவாக. 

“உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்ள ஏதேனும் ஒரு கட்சி அவசியம். சுயேச்சை என்ற அடையாளத்தோடு தனி சின்னம் இல்லாமல் போட்டியிட்டால் மக்கள் மத்தியில் எடுபட முடியுமா என்ற சந்தேகம் நிர்வாகிகள் மத்தியில் உள்ளது. மாநிலத் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட கட்சியாக இருந்தால், ஏதேனும் ஒரு சின்னம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. எடப்பாடி பழனிசாமியும் பன்னீர்செல்வமும் இதற்கு ஏதேனும் தடைகளை உருவாக்கினால், நீதிமன்றத்தின் மூலம் சின்னத்தைக் கோர இருக்கிறோம். இன்னும் இரண்டு மாதங்களில் உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட இருப்பதால், 'தீந்தமிழன் தினகரன் பேரவை' என்ற பெயரில் அமைப்பைத் தொடங்க இருக்கிறோம். மக்கள் மத்தியில் தினகரன் பெயரைக் கொண்டு செல்வதற்கும் இந்தப் பேரவை பயன்படும்" என்கிறார் தினகரன் ஆதரவு நிர்வாகி ஒருவர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!