வெளியிடப்பட்ட நேரம்: 13:25 (11/01/2018)

கடைசி தொடர்பு:16:02 (28/06/2018)

'கால்நடைக் கழிவுகளால் வளரும் கொசுக்கள்!'- டெங்கு பீதியில் மக்கள்

"எங்க பகுதியில், மக்கள் புழங்கும் பொதுப்பாதையில் கால்நடைகளைச் சிலர், இரவும் பகலும் கட்டிவைத்து வளர்க்கிறார்கள். அதோடு, கால்நடைகளுக்குக் கொடுக்கும் தீவணத்தை சாக்கடைக் கழிவுநீர்க் கால்வாயில் போட்டு மறைக்கிறார்கள். கால்நடைகளின் கழிவுகள் மற்றும் கழிவுநீர்க் கால்வாயில் தேங்கும் சாக்கடையால், லட்சக்கணக்கான கொசுக்கள் உற்பத்தியாகி, சுகாதாரக்கேட்டை ஏற்படுத்துகிறது" என்று புலம்புகிறார்கள் மக்கள்! 


 

இதுபற்றி பாதிக்கப்பட்ட மக்களிடம் பேசினோம். 'கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் ஒன்றியம் கள்ளப்பள்ளி ஊராட்சியில், பொதுமக்கள் செல்லும் வழியில் ஆடு மாடுகளை வளர்த்துவருகிறார்கள் சிலர். இதேபோல, சாக்கடை ஓரத்திலும் ஆடு மாடுகளைக் கட்டிவைத்து சாக்கடை வடிகாலில் தீவணங்களைப் போட்டு, மீதியை சாக்கடைகளில் போடுகிறார்கள். இதனால், கழிவுநீர் செல்வதற்கு வழி இல்லாமல் போகிறது.

சில ஆண்டுகளுக்கு முன்பு, அருகில் உள்ள பிள்ளப்பாளையம் மெயின் ரோட்டில், மாடுகள் கட்டப்பட்டதால், பள்ளி மாணவர்கள் அந்த இடத்தில் பேருந்து ஏற வந்தபோது, மாடு முட்டவந்ததால் பயந்து ஓடிய மாணவி, பேருந்தில் சிக்கி உயிரிழந்தார். அதே நிலைமை தற்போது கள்ளப்பள்ளியின் சிலதெருக்களில் மாடுகளைகட்டி சேதப்படுத்திவருகிறார்கள். இதனால், பொதுமக்களுக்கு இடையூறாக இருப்பதால், பொதுமக்கள் நடந்து செல்லமுடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அதோடு, கால்நடைகளின் கழிவுகள் அகற்றப்படாததால், சுகாதாரக் கேடும், கொசுக்கள் உற்பத்தியும் ஏற்படுகிறது. இதனால், டெங்கு உள்ளிட்ட பிரச்னை மக்களை வாட்டுது. அதனால், இதை ஊராட்சி நிர்வாகத்தின் மூலம் நடவடிக்கை எடுக்கவைக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிடணும்' என்றார்கள்.