கண்டக்டரின் உயிரைப் பறித்த அரசு அனுப்பிய சஸ்பெண்ட் நோட்டீஸ்!

போக்குவரத்துத் தொழிலாளர்களின் போராட்டங்கள் தொடரும் நிலையில், போராடும் தொழிலாளர்களை ஒடுக்க அரசு பல வகைகளில் முயல்கிறது. இதன் விளைவாக, போக்குவரத்துத் தொழிலாளர்கள் அடுத்தடுத்து பலியாகும் சம்பவங்கள் தொடர்கின்றன. அந்தவகையில் திருச்சியில் ஒரு நடத்துநர் இன்று மரணமடைந்துள்ளது, போக்குவரத்துத் தொழிலாளர்களை அதிர்ச்சியடையவைத்துள்ளது.

வெங்கடேசன்போக்குவரத்துத் தொழிலாளர்களின் காலவரையற்ற போராட்டத்தால், தமிழகம் ஸ்தம்பித்துள்ளது. 8-வது நாளாகத் தொடரும் இந்தப் போராட்டத்தில், திருச்சி மண்டலத்துக்குட்பட்ட திருச்சி மாநகர் மற்றும் புறநகர் பகுதியில் 60 சதவிகித பேருந்துகளும், புதுக்கோட்டையில் 70 சதவிகித பேருந்துகளும் மற்றும் திருவாரூரில் 83 சதவிகித பேருந்துகளும் இயக்கப்படுவதாகக் காரணங்கள் கூறப்பட்டாலும், நிலமை இன்னும் சரியாகவில்லை. இந்நிலையில், திருச்சி மண்டலத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள போக்குவரத்துத் தொழிலாளர்கள் 4,500 பேருக்கு, போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

திருச்சி மண்டல அரசு போக்குவரத்துக் கழகத்தில் திருச்சி, கரூர், பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்கள் உள்ளன. இந்த மாவட்டங்களில், சுமார் 8,500 ஊழியர்கள் பணிபுரிகின்றனர். இந்நிலையில், போக்குவரத்து ஊழியர்களின் போராட்டம் 8-வது நாளாகத் தொடரும் நிலையில், வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள திருச்சி மண்டலத்தில் பணிபுரியும் சுமார் 4,500 போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. போக்குவரத்து தொழிலாளர்கள்,  உடனடியாக பணிக்குத் திரும்பாவிட்டால் கடும் நடவடிக்கை என்கிற எச்சரிக்கை வாசகங்களுடன் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகக் கூறும் போக்குவரத்துத் தொழிலாளர்கள்,  அதிகாரிகள், இரவு பகல் பாராமல் வீடுவீடாகச் சென்று நோட்டீஸ்களை வழங்கிவருவதாகக் குற்றம் சாட்டிவருகின்றனர். இதில், கரூர் பகுதியில் மட்டும் 643 தொழிலாளர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளதாகவும், ஆறு பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். அதில், திருச்சி மலைக்கோட்டையைச் சேர்ந்த நடத்துநர் முருகேசன், திருச்சி மாவட்டம் முசிறியைச் சேர்ந்த நடத்துநர் கணேசன் மற்றும் துறையூரைச் சேர்ந்த ஓட்டுநர் செல்வம் உள்ளிட்டோரும் அடங்குவர்.

இதுமட்டுமல்லாமல், கும்பகோணம் பகுதியில் வேலை நிறுத்தம் தொடரும்போது, பணிக்கு வந்தவர்களைப் பணிசெய்யவிடாமல் தடுத்ததாக 8 பேரும், நாகப்பட்டினத்தில் 2 பேர், காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சி, கரூர் உள்ளிட்ட பகுதிகள் என மொத்தம் 20 பேர்  சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கிவரும் நிலையில், இதில் அதிர்ச்சியடைந்த திருச்சியைச் சேர்ந்த நடத்துநர் ஒருவர், மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்திருப்பதாகக் கூறப்படுகிறது.

திருச்சி கல்லணைப் பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன். இவர், திருச்சி புறநகர் கிளையில் நடத்துநராகப் பணியாற்றிவந்தார். போராட்டம் நடத்திவரும் போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்படுவதுகுறித்து அதிர்ச்சி அடைந்த நிலையில், இதுகுறித்து   நேற்றிரவு  குடும்பத்தினரிடம், மன உலைச்சலுடன் பேசியதாகக் கூறப்படுகிறது.  இதையடுத்து, இரவு நெஞ்சுவலிப்பதாக வெங்கடேசன் கூற, பதறியடித்துக்கொண்டு அவரை, திருச்சி அப்போலோ மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று சிகிச்சைக்கு அனுமதித்தனர். இந்நிலையில், வெங்கடேசன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவருக்கு இரு பெண் குழந்தைகள் உள்ளனர்.

போக்குவரத்துத் தொழிலாளர்களின் போராட்டம் ஒரு பக்கம் தொடர்கிறது. அரசின் அலட்சியத்தால் , ஈரோட்டில் அரசுப் பேருந்து ஒட்டுநர் தேவராஜ், திருநெல்வேலி மாவட்டம் தேன்பொத்தை கிராமத்தைச் சேர்ந்த கணேசன், வத்தலகுண்டு செந்தில் எனப் பலரும் தங்கள் உயிரை மாய்த்துக்கொண்டனர். இதேபோல இதுவரை 6பேர் மரணமடைந்துள்ளதாகப் போக்குவரத்துத் தொழிலாளர்கள் கூறுகின்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!