வெளியிடப்பட்ட நேரம்: 14:50 (11/01/2018)

கடைசி தொடர்பு:15:30 (11/01/2018)

டி.எஸ்.பி-யை சிக்கவைத்த 'அந்த' வீடியோ!- நொந்து புலம்பிய லாட்ஜ் உரிமையாளர்

அரசியல் தலைவர்கள் முதல் அதிகாரிகள் வரை தருமபுரி வரும்போது, பிரபலமான அந்தத் தனியார் விடுதியில் தங்குவது வழக்கம். தற்போது,  அந்த விடுதியைக் குறிவைத்து போலீஸார் மத்தியில் விவாதம் கிளம்பியுள்ளது. டி.எஸ்.பியைக் குறிவைத்து வெளியான வீடியோதான் காரணம்.

''தருமபுரி மாவட்டத்தில், இரண்டு வருடங்களுக்கு முன்பு பணியாற்ற வந்த டி.எஸ்.பி முத்துமாணிக்கம், மாவட்டத்தில் உள்ள அந்த விடுதியில் அறை எண் 315-ல் தங்கிவந்தார். டி.எஸ்.பி முத்துமாணிக்கத்துக்கு விடுதி பிடித்துபோகவே, அங்கேயே தங்கிவிட்டார். ஒரு கட்டத்தில் விடுதி மேலாளர், 'சார்.. நீங்க தொடர்ந்து தங்குவதாக இருந்தால் வேற இடம் பாருங்கள்' என்று கூறியுள்ளார். 'வேறு இடம் பார்க்கச் சொல்லியிருக்கிறேன்' என்று கூறியே இரண்டு வருடமாக காலம் கடத்திவந்தார்.  டி.எஸ்.பி முத்துமாணிக்கத்துக்கு விடுதி பிடித்துபோகவே விடுதியிலேயே தங்கிவிட்டார். 

இது கூடப் பிரச்சனை இல்லை, டி.எஸ்.பி-யை தேடி பெண்கள் பலர் வருவதுதான் விடுதிக்கு சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. சார், 'டி.எஸ்.பி நடந்துகொள்வது கொஞ்சம்கூட நல்லா இல்லை. எங்க விடுதிக்கு ஒத்துவராது' என்று உள்ளூர் ஸ்டேஷனில் தகவல் கொடுக்கவும், பிரச்னை தர்மபுரி எஸ்.பி பண்டிட் கங்காதர் கவனத்துக்குச் சென்றுள்ளது. கூடவே டி.எஸ்.பி தங்கியுள்ள அறைக்கு இளம்பெண்கள் சென்றுவரும் வீடியோ ஆதாரத்தையும் கொடுத்துள்ளார் விடுதி மேலாளர். கடுப்பான எஸ்.பி பண்டிட் கங்காதர் டி.எஸ்.பி-யை எச்சரிக்கைசெய்ததுடன், விடுதி அறையை உடனே காலிசெய்யச்சொல்லி மெமோவும் கொடுத்துள்ளார். இருந்தும் இன்றுவரை பிடிவாதமாக விடுதியைக் காலிசெய்யாமல் இருந்துவருகிறார். எஸ்.பி, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்கின்றனர் போலீஸார்.

தருமபுரி போலீஸாரிடம் பேசினோம். ''எங்கள் அலுவலகத்தில் நேர்மையான அதிகாரியாக நடந்துகொள்ளும் டி.எஸ்.பி, பெண் காவலர்களிடம் அது சரியில்ல, இது சரியில்ல தலையில் தொப்பிகூட ஒழுங்கா போட்டுக்கொண்டு சல்யூட் அடிக்கத் தெரியாதா? இதைத்தான் உங்களுக்கு ட்ரெய்னிங்ல சொல்லிக்கொடுத்தார்களா? என்று அதிகாரம் காட்டுவார். அவரது அறைக்குச் செல்லும் பெண்களின் வீடியோவைப் பார்த்த பிறகுதான், அவரின் லட்சணம்புரிகிறது. வேலியே பயிரை மேய்ந்தால் என்ன செய்வது. இதையெல்லாம் உயர் அதிகாரிகள் உடனே கவனித்து நடவடிக்கை எடுக்க மாட்டார்களா?'' என்கின்றனர்.

விடுதி விவகாரம்குறித்து டி.எஸ்.பி முத்துமாணிக்கத்திடம் பேசினோம். ''நான் விடுதியில் தங்கியிருப்பது உண்மைதான். மற்றபடி நீங்கள் சொல்வது தவறான செய்தி'' என்றதோடு முடித்துக்கொண்டார்.