‘பொங்கலுக்கு பஸ்கள் இயக்கப்படுமா?’ - தொழிற்சங்கங்கள் விடுத்த மூன்று கோரிக்கைகள்

பஸ்சை எதிர்பார்த்து காத்திருக்கும் மக்கள்

அரசுப் போக்குவரத்துக் கழக தொழிலாளர்களின் வேலை நிறுத்தப்போராட்டம் இன்று மாலைக்குள் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

 ஊதிய உயர்வு கோரிக்கையை வலியுறுத்தி அரசுப் போக்குவரத்துத் தொழிலாளர்கள், தொழிற்நுட்ப ஊழியர்கள் மற்றும் பல்வகைப்பணியாளர்கள் ஆகியோர் கடந்த 4-ம் தேதி முதல் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். வேலைநிறுத்தம் காரணமாக தமிழகம் முழுவதும் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். குறிப்பாக, வேலைக்குச் செல்பவர்கள், பள்ளி, கல்லூரிக்குச் செல்பவர்கள் சிரமப்பட்டனர். வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவருவது தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டனர். சட்டப்பேரவையில் 110-வது விதியின் கீழ் 750 கோடி ரூபாயை ஒதுக்குவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதன்பிறகுகூட தொழிற்சங்கங்கள் போராட்டத்தைக் கைவிடவில்லை.

வேலைநிறுத்தம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் போராட்டத்துக்கு இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதை எதிர்த்து தொழிற்சங்கங்கள் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து நடந்த விசாரணையில் அரசு அறிவித்த 2.44 மடங்கு ஊதிய உயர்வை தற்காலிகமாக ஏற்றுக்கொள்வதாக தொ.மு.ச உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால் வேலைநிறுத்தப் போராட்டம் முடிவுக்கு வந்துவிடும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில், தொழிற்சங்கங்கள் தரப்பில் மூன்று கோரிக்கைகள் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டன. அதுதொடர்பாக நடந்த விசாரணையில் ஊதிய உயர்வு ஒப்பந்ததத்தை ரத்து செய்ய நீதிமன்றம் மறுத்துவிட்டது. அதுதொடர்பாக ஆலோசிக்க, தொழிற்சங்கங்கள் தரப்பில் நீதிமன்றத்தில் காலஅவகாசம் கேட்கப்பட்டது. அதற்கு நீதிமன்றம் அனுமதியளித்தது.

பஸ் ஸ்டிரைக்

இதையடுத்து, சென்னை எழும்பூரில் உள்ள ம.தி.மு.க. தலைமை அலுவலகமான தாயகத்தில் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டம் நேற்றிரவு நடந்தது. அதில் 13-வது ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பழிவாங்கும் நடவடிக்கை எடுக்கக்கூடாது. வேலைநிறுத்த நாள்களை தகுதியுள்ள விடுமுறையாக எடுக்க அனுமதியளிக்க வேண்டும் என மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த மூன்று கோரிக்கைகள் நீதிமன்றத்தில் தொழிற்சங்கங்கள் சார்பில் முன்வைக்கப்படவுள்ளன. ஏற்கெனவே ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை ரத்து செய்ய முடியாது என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதனால், ஊதிய உயர்வு ஒப்பந்தம் தொடர்பாக நடுவர் மன்றத்தை அமைக்க நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று தொழிற்சங்கங்கள் சார்பில் வலியுறுத்தப்படவுள்ளது.

 இதுகுறித்து போக்குவரத்துக் கழக தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பைச் சேர்ந்த மூத்த நிர்வாகி ஒருவர் கூறுகையில், "தொ.மு.ச., சி.ஐ.டி.யு, ஏ.ஐ.டி.யு.சி ஆகிய தொழிற்சங்கங்கள் சார்பில் தனித்தனியாக நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டன. தற்போது, நீதிமன்றத்தில் தொ.மு.ச. வழக்கறிஞர் வாதிட சி.ஐ.டி.யு மற்றும் ஏ.ஐ.டி.யு.சி தொழிற்சங்கங்கள் சம்மதம் தெரிவித்துள்ளன. எங்களின் மூன்று கோரிக்கைகளை தொ.மு.ச. நீதிமன்றத்தில் முன்வைத்தது. அதற்கு அரசு தரப்பு வழக்கறிஞர், கோரிக்கைகள் தொடர்பாக அரசிடம் ஆலோசித்துவிட்டு இன்று பதிலளிப்பதாக தெரிவித்துள்ளார். இன்று மதியம் நடைபெற உள்ள விசாரணையில் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம்.  எங்களின் மூன்று நியாயமான கோரிக்கைகளுக்கு நீதிமன்றத்தில் நல்ல தீர்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறோம். எங்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டவுடன் பேருந்துகளை இயக்க நாங்களும் தயாராக இருக்கிறோம். ஏனெனில் நாங்களும் மக்கள் சேவகர்கள்தான்" என்றார்.

பொங்கலுக்கு பஸ்கள் இயக்கப்படுமா என்ற போக்குவரத்துக் கழக அதிகாரிகளிடம் கேட்டபோது, “பஸ்களை இயக்குவதற்கான நடவடிக்கைகளை எடுத்துவருகிறோம். ஏனெனில் பொங்கல் சிறப்பு பஸ்கள் மூலம் அரசுப் போக்குவரத்துக் கழகத்துக்கு வழக்கமான வசூலைவிட கூடுதல் வருவாய் கிடைக்கும். சென்னை உயர் நீதிமன்றத்தில் பிறப்பிக்கப்படும் உத்தரவு மூலம் வேலைநிறுத்தம் கண்டிப்பாக இன்று முடிவுக்கு வந்துவிடும் என்று எதிர்பார்க்கிறோம்” என்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!