வெளியிடப்பட்ட நேரம்: 15:15 (11/01/2018)

கடைசி தொடர்பு:15:15 (11/01/2018)

முத்தலாக் தடைச்சட்டம்! - தமிழக அரசின் நிலைப்பாடு என்ன தெரியுமா?

தலாக்

இஸ்லாமியர்களிடையே வழக்கத்திலிருந்த மும்முறை தலாக் சொல்லி விவாகரத்து செய்யும் நடைமுறைக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. அவற்றை விசாரித்த உச்ச நீதிமன்றம், முத்தலாக் நடைமுறைக்கு 6 மாதங்கள் தடை விதித்தது. அதோடு, முத்தலாக் நடைமுறைக்குத் தடை விதிக்கும் சட்டம் ஒன்றை இயற்றவும் மத்திய அரசுக்கு ஆணை பிறப்பித்தது. அதை ஏற்று, மத்திய அரசு சட்டம் ஒன்றை இயற்றியுள்ளது. அந்தச் சட்டத்தின்படி முத்தலாக் சொல்லி விவாகரத்துபெறுவது கிரிமினல் குற்றமாகக் கருதப்படும். அதற்கு, ஜாமீன் இல்லாத 3 ஆண்டு சிறைத்தண்டனை வழங்கப்படும்.

இது சம்பந்தமான சட்ட மசோதா நாடாளுமன்ற மக்களவையில் நிறைவேற்றப்பட்டுவிட்டது. மக்களவையில் பா.ஜ.க-வுக்கு பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதால், இதை நிறைவேற்றுவதில் எந்தச் சிக்கலும் ஏற்படவில்லை. ஆனால், மாநிலங்களவையில் பா.ஜ.க-வுக்கு பெரும்பான்மை ஆதரவு இல்லை. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் முரண்டுபிடிப்பதால், சட்ட மசோதாவை அங்கு நிறைவேற்ற முடியவில்லை. முத்தலாக், கிரிமினல் குற்றமாகக் கருதப்பட்டு மூன்றாண்டுகள் தண்டனை வழங்கப்படும் என்ற பிரிவை ரத்துசெய்ய வேண்டுமென்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்திவருகின்றன. மசோதாவை பாராளுமன்ற நிலைக்குழுவின் ஆய்வுக்கு அனுப்ப வேண்டுமென்று, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்தனர். இதனால், குளிர்கால கூட்டத்தொடரில் மசோதாவை நிறைவேற்ற முடியவில்லை.

எனினும், வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் இந்த மசோதாவை நிறைவேற்றுவதில் மத்திய அரசு தீவிரம்காட்டிவருகிறது. அவசரச் சட்டம் பிறப்பிக்கலாமா என்றும் ஆலோசித்துவருகிறது. முத்தலாக் தடை மசோதாவை பா.ஜ.க ஆளும் 10-க்கும் மேற்பட்ட மாநிலங்கள் வரவேற்றுள்ளன. பா.ஜ.க ஆட்சி செய்யாத மாநிலங்களில் தமிழகம் மட்டும் இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ளது. இந்த மசோதாவில் உள்ள கிரிமினல் சட்ட நடவடிக்கைகள் நீக்கப்பட வேண்டுமென்றே தமிழகம் வலியுறுத்தியுள்ளது.