10 ரவுடிகளுடன் சென்று அதிகாரியை மிரளவைத்த எம்.எல்.ஏ! புதுச்சேரி களேபரம்

புதுச்சேரி போக்குவரத்துத்துறை அதிகாரிகளுடன் அ.தி.மு.க எம்.எல்.ஏ ரவுடிகளுடன் சென்று மிரட்டியதாக எழுந்துள்ள புகாரின் மீது விசாரணை நடத்த துணைநிலை ஆளுநர் கிரண்பேடி உத்தரவிட்டுள்ளார்.

கிரண்பேடி

இதுகுறித்து ஆளுநர் கிரண்பேடி வாட்ஸ்அப்பில் அனுப்பிய செய்திக் குறிப்பில், “முதலியார் பேட்டை தொகுதியின் அ.தி.மு.க எம்.எல்.ஏ பாஸ்கர் தனது உயர் ரக சொகுசுக் காரை (BMW) போக்குவரத்துத்துறைக்கு அனுப்பி உயர் பதிவெண் பலகையை பொருத்துமாறு கூறியிருக்கிறார். ஆனால். அந்தக் காரின் ஜன்னல் கண்ணாடிகளில் கறுப்பு நிற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்ததால் அதை அகற்றிவிட்டு வருமாறு கூறிய அதிகாரிகள், உச்ச நீதிமன்ற தீர்ப்பைப் பற்றியும் எடுத்துக் கூறியிருக்கின்றனர். அந்தத் தகவலைக் கேள்விப்பட்டு சுமார் 10 குண்டர்களுடன் போக்குவரத்துத் துறைக்குச் சென்று மிரட்டியிருக்கிறார் எம்.எல்.ஏ பாஸ்கர். அதிகாரிகள் எவ்வளவோ எடுத்துக் கூறியும் கறுப்பு நிற ஸ்டிக்கரை அகற்ற முடியாது என்று சொன்ன எம்.எல்.ஏ, அதை அகற்றாமலேயே அதிகாரிகளையும் ஊழியர்களையும் மிரட்டி பதிவெண் பலகையைப் பொறுத்திக்கொண்டு சென்றுள்ளார். இந்த ரவுடிகளின் அளப்பறைகளும், அட்டூழியங்களும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்தச் சம்பவம்குறித்து எனது உத்தரவின் பேரில் விசாரணை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது” என்று தெரிவித்திருக்கிறார்.

எம்.எல்.ஏ பாஸ்கர்

போக்குவரத்துத்துறையில் பொதுமக்கள் முன்னிலையில் நடைபெற்ற இந்தச் சம்பவம்குறித்து பொதுமக்களே கிரண்பேடிக்கு புகார் அளித்திருக்கின்றனர். அதனடிப்படையில்தான் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார் கிரண்பேடி. சாதாரண மக்களுக்குப் பொருந்தும் சட்டம், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு பொருந்தாதா? என்று கேள்வி எழுப்பும் சமூக ஆர்வலர்கள், மக்கள் பிரதிநிதிகள்தான் முதலில் சட்டத்தை மதிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்” என்றும் கூறுகின்றனர் ஆதங்கத்தோடு.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!