வெளியிடப்பட்ட நேரம்: 17:00 (11/01/2018)

கடைசி தொடர்பு:15:04 (09/07/2018)

1989-ம் ஆண்டு எப்படி இருந்தது பொங்கல்? - வைரலான கிராமத்து இளைஞரின் புகைப்படம்

89-ம் வருஷம் தனது கிராமத்தில் ஆறு வயதில் கொண்டாடிய பொங்கல் பண்டிகை புகைப்படத்தைப் பதிவிட்டு தன் நண்பர்களுக்கு வாழ்த்து சொல்லியிருக்கிறார் ஒருவர். அது பெரும் வரவேற்பைப் பெற்றிருப்பதோடு அவருக்கு பாராட்டுகளும் குவிந்த வண்ணம் இருக்கின்றன.

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதியில் வசிப்பவர் இளையராஜா. மேலே உள்ள படத்தில் கடைசியாக நிற்கும் குட்டித் தம்பிதான் அவர். இன்று காலையில் தனது வாட்ஸ்அப்பிலும் ஃபேஸ் புக்கிலும் நண்பர்களுக்கு இந்தப் புகைப்படத்தின் மூலம் வாழ்த்துச் சொல்லி இருக்கிறார். கொஞ்சநேரத்திலேயே அவரை போனில் தொடர்புகொண்டு பேசிய நண்பர்கள், அந்தப் புகைப்படத்தைப் பற்றி சிலாகித்திருக்கிறார்கள். நாம், இளையராஜாவைத் தொடர்புகொண்டு பேசினோம்.

"1989-ம் வருஷத்துல என்னோட அப்பா எடுத்த படம் அது. என்னோட கிராமமான பிடாரம்பட்டியில்  எங்க குடிசை வீட்டுக்கு முன்னால செப்புத் தவலைகளில் அம்மா பொங்கல் வைத்தபோது, அப்பா எங்களை வரிசையாக நிற்க வைத்து எடுத்த படம் அது. கடைக்குட்டியாக நான் நிற்கிறேன்" என்று கலகலப்பாக ஆரம்பித்தார் இளையராஜா. "அன்னிக்கெல்லாம் சுற்றுச்சூழலும் சுற்றியுள்ள மனிதர்களும் மனரம்மியத்தை மனசுக்குள் கொடுத்துகிட்டு இருந்தாங்க. அப்படிப்பட்ட காரைக்குடி நகரத்தார் நிறைய பேர் அப்பாவுக்கு நல்ல பழக்கம். அதிலே ஒருத்தர் இன்ஸ்டன்ட் கலர் கேமரா ஒன்றை அப்பாவுக்குப் பொங்கல் பரிசாகக் கொடுத்தார். அந்த கேமராவில் எடுத்த படம்தான் அது. அப்போ எனக்கு 6 வயசு. அக்காக்களோட என்னையும் நிறுத்தி, அந்த உடனடிக் கேமராவால் படம் எடுத்தார். அப்போ கேமரா பற்றியெல்லாம் எனக்குத் தெரியாது. போட்டோ எடுத்த சில நிமிடங்களில், அந்த கேமராவிலிருந்து வந்தப் புகைப்படத்தைப் பார்த்து பிரமித்தேன். எப்படி வந்துச்சு இது என்ற ஆச்சர்யம் எனக்குள்ளே இருந்துச்சு. அப்பா சாதாரணமாக நினைத்து, 30 வருடங்களுக்கு முன்பு எடுத்த அந்தப் போட்டோ இன்னிக்கு ஓர் ஆவணமாக மாறிடுச்சு. அன்றைக்கு வீட்டுக்கு வெளியே  வாசலில் வைத்துப் பொங்கல் படைத்த எங்க அம்மா, இப்போ, வீட்டு முற்றத்தில் பொங்கல் படைக்கிறாங்க. அன்னிக்கெல்லாம் பொங்கல் பண்டிகையைக் கொண்டாடத் தெரியாமல் மக்கள் இருந்தாங்க. ஆனால், மகிழ்ச்சி மனசுக்குள் இருந்துச்சு. இன்னிக்கு படு விமரிசையாக எல்லோருமே கொண்டாடுறோம். ஆனால், மகிழ்ச்சி இல்லாமல் போயிடுச்சு.

பழைய நினைவுகளைக் கிளறிவிட்டு இந்தப் புகைப்படம் தருகிற மகிழ்ச்சி புதிதான ஒன்று'' என்றவர் தொடர்ந்தார். "ஓரளவு விவரம் தெரியும் வயதுக்கு வந்தபோது, நண்பர்களுக்கு பொங்கல் வாழ்த்து அட்டை வாங்கி, அஞ்சலில்  அனுப்புவோம். ரஜினி, கமல், மோகன், விஜயகாந்த், டி.ராஜேந்தர் போட்டோ உள்ள வாழ்த்து அட்டைகள்தான் அப்போ ஃபேமஸ். அதேபோல், நடிகைகளில் அம்பிகா, ராதா படம் போட்ட அட்டைகள் நிறைய இருக்கும். அதே மாதிரி விதவிதமான பாப்பாக்கள் போட்ட அட்டைகளும் குவிஞ்சுக் கிடக்கும். அதையெல்லாம் பொம்பளைப் பிள்ளைகள் வாங்கி, அனுப்புவார்கள். வெறும் பதினைந்து பைசா செலவு செய்து அனுப்பிய அந்த வாழ்த்து அட்டைகள் தந்த பரவசத்தை, இன்றைக்கு வாட்ஸ்அப், ஃபேஸ்புக் வாழ்த்துகள் தருவதில்லை. இப்போகூடப் பாருங்க. நான் ரொம்ப சாதாரணமா வாழ்த்துச் சொல்லி இருந்தா, இவ்வளவு பேர் பாராட்டி இருக்க மாட்டாங்க. அந்த ஒரு பழைய போட்டோ எல்லாருடைய சிறு வயது பொங்கல் கொண்டாட்டங்களை நினைவுக்குக் கொண்டு வந்ததால்தான்  எல்லோரும் போன் போட்டு பேசினாங்க. எனக்கும் மகிழ்ச்சி. அவர்களுக்கும் பரவசம்" என்றார் இளையராஜா. 

வண்ண வண்ண பொங்கல் கோலங்கள் படங்களை காண கிளிக் செய்க