வெளியிடப்பட்ட நேரம்: 16:55 (11/01/2018)

கடைசி தொடர்பு:16:55 (11/01/2018)

சித்த மருத்துவக் கல்லூரியில் சமத்துவ பொங்கல் வைத்து அசத்திய மாணவ - மாணவிகள்!

பொங்கல் கொண்டாட்டம்

நெல்லை அரசு சித்த மருத்துவக் கல்லூரியில் சமத்துவப் பொங்கல் கொண்டாட்டம் ஆட்டம் பாட்டத்துடன் கோலாகலமாக நடைபெற்றது. இதில் மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

தமிழர்களின் பாரம்பர்ய விழாவான பொங்கல் பண்டிகை பாளையங்கோட்டையில் உள்ள அரசு சித்த மருத்துவக் கல்லூரியில் இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, கல்லூரி வளாகம் முழுவதும் தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தன. கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியையொட்டி, மாணவிகள் வண்ணமிகு கோலங்களை வரைந்து அசத்தினார்கள். மாணவ, மாணவிகள் பாரம்பர்ய முறைப்படி வேட்டி, சேலை அணிந்து வந்து அசத்தினார்கள். பின்னர், 11 பானைகளில் கைக்குற்றல் அரிசியைக் கொண்டு பொங்கலிட்டு மகிழ்ந்தனர்.

இந்த நிகழ்ச்சியில் தமிழர்களின் பாரம்பர்ய கலை நிகழ்ச்சிகள் நடந்தன. தப்பாட்டத்துடன் ஆடல் பாடல் நடைபெற்றது. மாணவிகள் கும்மியடித்து தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். மாணவிகள் நடனமாடி விழாவை சிறப்பித்தனர். சித்த மருத்துவக் கல்லூரி முதல்வர் லீலாவதி மற்றும் பேராசியர்கள், மருத்துவமனை ஊழியர்கள் ஆகியோர் இந்தக் கொண்டாட்டத்தில் பங்கேற்றனர். பின்னர் அனைவருக்கும் இனிப்பான பொங்கல் பரிமாறப்பட்டது. இந்தக் கொண்டாட்டம் காரணமாகக் கல்லூரி வளாகமே விழாக்கோலத்துடன் காணப்பட்டது. மாணவர்கள் ஒருவருக்கொருவர் பொங்கல் வாழ்த்துகளைப் பரிமாறிக்கொண்டார்கள்.