`வெட்டவெளியில்தான் தூக்கம்; புழுதி மண்ணில்தான் வாழ்க்கை' - போக்குவரத்துத் தொழிலாளர்களின் சோகக்கதை

''எங்களை சுகவாசியாகவும் பொதுமக்களின் எதிரியாகவும் சித்தரிக்க தமிழக அரசு முயல்கிறது. சமூக வலைதளங்களில் எங்களுக்கு எதிராகத் திட்டமிட்டு பொய் பிரசாரம் செய்யப்படுகிறது. நாங்களும் சாமானிய பொதுமக்கள்தான். பஸ் டிப்போக்களுக்கு வந்து பாருங்கள். எங்களின் அவலநிலை புரியும்'' எனப் போக்குவரத்துத் தொழிலாளர்கள் கொந்தளிக்கிறார்கள்.

பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்துப் போக்குவரத்துத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். தமிழ்நாட்டின் மிகவும் முதன்மையான பண்டிகையான பொங்கல் திருநாள் நெருங்கிவரும் நிலையில் போக்குவரத்துத் தொழிலாளர்களின் போராட்டம் சமூக வலைதளங்களில் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகிவருகிறது. இதனால் போக்குவரத்துத் தொழிலாளர்களின் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் மன உளைச்சல் அடைந்துவருகிறார்கள்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய தஞ்சையைச் சேர்ந்த போக்குவரத்துத் தொழிலாளர்கள், ‘எல்லாத் துறைகளிலும் இருப்பதுபோல் எங்கள் துறையிலும் ஒரு சிலர் தவறு செய்பவர்களாகவும் பொதுமக்களிடம் உதாசீனமாக நடந்துகொள்பவர்களாகவும் இருக்கலாம். ஆனால், எங்களில் பெரும்பாலானோர் மனிதநேயம் மிக்கவர்கள். இதற்கு ஏராளமான உதாரணங்களை எங்களால் சொல்ல முடியும். நாங்களும் சாமானியர்கள்தாம். மிகவும் மோசமான சூழலில்தான் பணியாற்றி வருகிறோம்.

அரசு பஸ் டிப்போக்களை வந்து பாருங்கள். நீண்டதூரம் பேருந்துகளை இயக்கிவிட்டு, களைப்போடு திரும்பி வரும் எங்களுக்கு பணிமனையில் ஓய்வெடுப்பதற்குகூட நல்ல இடம் கிடையாது. 50 பேர் மட்டுமே ஓய்வெடுக்கக்கூடிய அறையில் 100 - 150 பேர் ஓய்வெடுக்க வேண்டிய நிலையில் உள்ளோம். சாப்பிடுவதற்கும் போதிய அளவு இடவசதி கிடையாது. பஸ் டிப்போக்களின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெட்டவெளியில்தான் எங்கள் சாப்பாடு, தூக்கம் எல்லாம். புழுதி மண்ணில்தான் எங்களின் வாழ்க்கை நகர்கிறது. நீண்ட நேரம் பேருந்தை இயக்குவதால் உஷ்ண நோய்கள், முதுகுத்தண்டுவடம் பாதிப்பு, அல்சர், ரத்தக்கொதிப்பு உள்ளிட்ட நோய்களுக்கும் ஆளாகிவருகிறோம். ஆனால், எங்களுடைய பணிச்சுமை மற்றும் பணிச்சூழலுக்கு ஏற்ற ஊதியமோ சலுகைகளோ இல்லை” என வேதனையோடு பேசினார்கள்.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!