வெளியிடப்பட்ட நேரம்: 17:10 (11/01/2018)

கடைசி தொடர்பு:17:10 (11/01/2018)

`அடிக்கடி பற்றி எரியும் கிராமம்!' - தீர்வு காண அரசுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கோரிக்கை

மக்களின் கோரிக்கைகளை இந்த அரசுகள் அலட்சியப் படுத்துகின்றன. இந்தக் கோரிக்கைகளை உடனே நிறைவேற்ற வேண்டும் இல்லையேல் மக்களைத் திரட்டி போராடுவோம் என்று எச்சரித்திருக்கிறார்கள். 

                                  
அரியலூர், மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள தா.பழூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தா.பழூர் ஒன்றியக் குழுவின் 8 வது மாநாடு நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்டச் செயலாளர் உலகநாதன் தலைமை வகித்தார். மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் மணிவாசகம் மாநாட்டைத் தொடங்கிவைத்து சிறப்புரையாற்றினார். மாவட்டத் துணைச் செயலாளர் ஜெயராஜ், ஜெயங்கொண்டம் ஒன்றிய செயலாளர் ராமநாதன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் தெய்வசிகாமணி ஆகியோர் பேசினர்.

கூட்டத்தில், தா.பழூரில் தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் நீண்டநாளைய கோரிக்கையாக உள்ளது. ஒவ்வொரு கூட்டத்திலும் இந்தக் கோரிக்கை தீர்மானமாக வைக்கப்பட்ட போதிலும் இதுவரை நிறைவேற்ற அரசு முன்வரவில்லை, தா.பழூர் ஒன்றியத்தில் குடிசை வாழ்மக்கள் அதிகளவில் உள்ளதால் உயிர் சேதமும் பொருள் சேதமும் ஏற்படுகின்றன. எனவே, தா.பழூரில் தீயணைப்பு நிலையம் அமைக்கத் தமிழக அரசு முன்வர வேண்டும். கொள்ளிடத்தில் தடுப்பணை அமைக்க வேண்டும். ஏரி, குளங்களைக் கணக்கெடுத்துத் தூர்வாரும் பணிகளை முடுக்கிவிட வேண்டும். வரத்து வாய்க்கால்களையும் ஆழப்படுத்த வேண்டும், நெசவாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த மருத்துவ உதவி திட்டத்தை மீன்டும் வழங்கிட அரசு முன்வர வேண்டும், முதியோர்களுக்கு வழங்கிவந்த ஓய்வூதிய தொகையை வழங்கிட வேண்டும்.

 

100 நாள் வேலை திட்டத்தை 150 நாள்களாக உயர்த்தி 100 நாள்களுக்கு குறையாமல் வேலை தர வேண்டும் என்பன பல்வேறு கோரிக்கை குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தக் கோரிக்கைகளைத் தமிழக அரசு உடனே நிறைவேற்ற வேண்டும். இல்லையேல் மக்களைத் திரட்டிப் போராட்டம் நடத்துவோம் என்று எச்சரித்தனர். இக்கூட்டத்தில் துணைச் செயலாளர் சக்கரவர்த்தி மற்றும் உறுப்பினர்கள் பாலகிருஷ்ணன், அறிவாளி, ஆனைமுத்து, ரெங்கநாதன், கரிகாலன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். முன்னதாக ஒன்றியச் செயலாளர் அபிமன்னன் வரவேற்றார்.