வெளியிடப்பட்ட நேரம்: 17:40 (11/01/2018)

கடைசி தொடர்பு:17:40 (11/01/2018)

`அப்ப விற்றேன்; நீங்க ஏன் எழுதி வாங்கல' - 30 ஆண்டுகளுக்குப் பிறகு தம்பதிக்கு நடந்த சோகம்

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் படிக்காத தம்பதியினரிடம் வீட்டை விற்றுப் பணத்தை வாங்கிக்கொண்டு அதை முறைப்படி பதிவு செய்துகொடுக்காமல் 30 ஆண்டுகளுக்குப் பிறகு, மீண்டும் அந்த வீட்டை வேறு ஒருவருக்கு விற்றிருக்கிறார் சுப்பிரமணி என்பவர். விவரம் தெரியாத அந்த வயதான தம்பதியினர் ஈரோடு கலெக்டர் அலுவலகப் படியேறியிருக்கிறார்கள்.

இதுபற்றி அந்தத் தம்பதியினரிடம் விவாதித்தபோது, ''என் பேரு தேவி. எங்க வீட்டுக்காரர் பெயர் செல்வராஜ். நாங்க 30 வருஷத்துக்கு முன்பு குமாரபாளையம் கொங்கடையாம்பாளையத்தில் சுப்பிரமணியிடம் ரூ.10,000 கொடுத்து அவருடைய வீட்டையும் 9 சென்ட் நிலத்தையும் வாங்கினோம். எனக்கும் எங்க வீட்டுக்காரருக்கும் எழுதப் படிக்கத் தெரியாது. பணத்தைக் கொடுத்தோம்; வீட்டைக் கொடுத்தார், அவ்வளவு தான். கிரயம், பட்டா என்பதெல்லாம் எங்களுக்குத் தெரியவில்லை. அதைச் சுப்பிரமணியமும் எங்களுக்குச் சொல்லவில்லை.
 
அந்த வீட்டில் 3 குழந்தைகளோடு 30 ஆண்டுகள் வாழ்ந்தோம். கடந்த வாரம் எங்க வீட்டை 4.5 லட்சத்துக்கு எங்க ஊரைச் சேர்ந்த மணி என்பவருக்கு விற்றுவிட்டார். அவர் எங்களைக் காலி செய்யச் சொன்னார். எங்க வீட்டை நாங்க எப்படிக் காலி செய்வோம் என்று கேட்டதுக்கு, சுப்பிரமணி எனக்கு 4.5 லட்சத்துக்கு வீட்டை விற்றுவிட்டார் என்று பட்டாவைக் காட்டுகிறார்கள். அதையடுத்து சுப்பிரமணியிடம் கேட்டதற்கு, 'அப்ப விற்றேன். நீங்க ஏன் என்னிடம் எழுதி வாங்கவில்லை. அது நீங்க எங்க சென்றாலும் செல்லாது. வேண்டுமென்றால் 10,000 கொடுத்ததுக்கு வட்டிபோட்டு 20,000-மாகக் கொடுத்துவிடுகிறேன். வீட்டைக் காலி செய்யுங்கள்'' என்று மனசாட்சியே இல்லாமல் பேசுகிறார்.

அதன் பிறகு, நாங்க குடியிருந்த வீட்டை மணி  இடித்துத் தரை மட்டமாக்கிவிட்டார். எங்களுக்கு 2 பொண்ணுங்க, ஒரு பையன் எல்லோருக்கும் திருமணம் ஆகிவிட்டது. அவரவர் தனித்தனியாக இருக்காங்க. தற்போது அந்தக் கிராமத்தை விட்டே எங்களைக் காலி செய்யச் சொல்கிறார்கள். நாங்க படிக்காதவர்கள். எங்களுக்கு இந்தக் கலெக்டர் ஆபீஸூ, போலீஸ் ஸ்டேஷன்  என எதுவும் தெரியாது. இப்போது இதையெல்லாம் பார்க்கிறோம். நாங்க கஸ்டப்பட்டு உழைத்து வாங்கிய அந்த வீட்டு நிலத்தையாவது எங்களுக்கு வாங்கித் தர வேண்டும்'' என்று அப்பாவியாகப் பேசினார்கள்.