வெளியிடப்பட்ட நேரம்: 18:00 (11/01/2018)

கடைசி தொடர்பு:18:00 (11/01/2018)

`வருமானம் கிடைக்கிறதுக்காகப் போராட்டம் நீடிக்க கூடாது' - ஆதரவு குரல் கொடுக்கும் ஆட்டோ சங்கம்

''கல்யாண வீட்டில் குழந்தையை வளர்ப்பதுபோல போக்குவரத்துத் தொழிலாளர்கள் போராட்டத்தால் எங்களுக்கு வருமானம் கிடைக்கிறது என்பதற்காக போராட்டம் நீடிக்க வேண்டும் என்று விருப்பம் இல்லை. நியாயமான கோரிக்கைகளை முன்வைத்துப் போராடிக் கொண்டிருக்கிற போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு ஆட்டோ தொழிலாளர்களும் ஆதரவு கொடுப்போம்'' என்றார் ஈரோடு மாவட்ட ஆட்டோ தொழிலாளர் யூனியனின் கெளரவத் தலைவர் சுப்பு.

ஈரோடு மாவட்டம் ஆட்டோ தொழிலாளர்கள் யூனியனைச் சேர்ந்த சுமார் 100-க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் ஈரோடு எஸ்.பி., அலுவலகத்துக்கு வந்து தங்களுடைய கோரிக்கை மனுவை எஸ்.பி சிவக்குமாரை நேரில் சந்தித்துக் கொடுத்தார்கள்.

அப்போது, ஈரோடு மாவட்ட ஆட்டோ தொழிலாளர் யூனியனின் கெளரவத் தலைவர் சுப்பு, ''தமிழக அரசு ஒவ்வோர் ஆட்டோக்களிலும் மீட்டரைப் பொருத்தி 1.8 கி.மீட்டருக்கு 25 ரூபாயும் அதற்கு மேல் ஒரு கி.மீட்டருக்கு 12 ரூபாய் வீதமும் பயணிகள் கொடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. ஆனால், அதை எல்லா நகரங்களும் செயல்படுத்தினால் கட்டுப்படியாகாது. மத்தியில் பி.ஜே.பி ஆட்சிக்கு வந்த பிறகு தினசரி பெட்ரோல், டீசல் ஏறுகிறது. சாலை வரி, வாகன வரி, லைசென்ஸ் ரெனிவல், இன்ஷூரன்ஸ் என எல்லா விதத்திலும் விலை உயர்ந்துவிட்டது. சென்னையை மையமாக வைத்து ஆட்டோ விலையை நிர்ணயிப்பது தவறானது. அந்தந்த மாவட்டத்தைப் பொருத்து விலை நிர்ணயம் செய்ய வேண்டும். 1.5 கி.மீட்டருக்கு 35 ரூபாயும் அதற்கு மேல் ஒரு கி.மீட்டருக்கு 15 ரூபாயும் உயர்த்த வேண்டும். அப்போதுதான் ஆட்டோ தொழிலாளர்கள் ஓரளவுக்கு பிழைக்க முடியும். இல்லையென்றால் ஆட்டோ தொழிலே இருக்காது. ஈரோடு மாவட்டத்தில் மட்டும் 3,000 ஆட்டோக்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன. இந்த ஆட்டோவே அதிக எண்ணிக்கையில் இருப்பதால் புது ஆட்டோக்களுக்கு அனுமதி கொடுக்கக் கூடாது.

தற்போது போக்குவரத்துத் தொழிலாளர்களின் போராட்டத்தால் எங்களுக்கு பயணிகள் அதிக அளவில் ஏறுகிறார்கள். கல்யாண வீட்டில் குழந்தையை வளர்ப்பதுபோல போக்குவரத்துத் தொழிலாளர்கள் போராட்டத்தால் எங்களுக்கு வருமானம் கிடைக்கிறது என்பதற்காகப் போராட்டம் நீடிக்க வேண்டும் என்று விருப்பம் இல்லை. நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து போராடிக்கொண்டிருக்கிற போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஆட்டோ தொழிலாளர்களும் ஆதரவு கொடுப்போம். பண்டிகைக் காலத்தைக் கருத்தில் கொண்டும் மக்கள் படும் துயரங்களை எண்ணியும் அரசுப் போக்குவரத்துத் தொழிலாளர்களை அழைத்துப் பேசி சுமுகத் தேர்வு எட்டப்பட வேண்டும்''