வெளியிடப்பட்ட நேரம்: 19:30 (11/01/2018)

கடைசி தொடர்பு:20:08 (11/01/2018)

`இதைத் தவிர எங்களுக்கு வேற வழி தெரியலை' - கண்ணீர்விடும் போக்குவரத்துத் தொழிலாளர்களின் மனைவிகள்

''நாங்களும் பொங்கல் கொண்டாட வேண்டும். ஆனால் வீதியில் நிற்கிறோம். சென்டிமென்டில் கண்ணீர் சிந்தும் போக்குவரத்து தொழிலாளர்களின் குடும்பங்கள்.

பொங்கல் பண்டிகை என்பது வெறும் கொண்டாட்டம் மட்டுமல்ல. சம்பிரதாய சடங்குகளோடு, சென்டிமென்ட்டையும் உள்ளடக்கியது. தை பிறக்கும் நேரத்தில் குடும்பமே மகிழ்ச்சியாக இருந்தால்தான் அந்த ஆண்டு முழுவதும் சந்தோஷம் தழைக்கும் என்பது தமிழ்நாட்டு மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. ஆனால் போக்குவரத்து தொழிலாளர்களின் குடும்பத்தினர் தற்பொழுது போராட்டம், கைது என அல்லாடிக் கொண்டிருக்கிறார்கள்.

தஞ்சையில் கைது செய்யப்பட்டு திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டிருந்த போக்குவரத்து தொழிலாளர்களின் குடும்பத்தினரை சந்தித்துப் பேசினோம். ‘’நாங்களும் சந்தோஷமா பொங்கல் கொண்டாடணும்னுதான் ஆசைப்படுறோம். எங்கள்ல பெரும்பாலானவங்க, கிராமத்து ஜனங்க. தீபாவளியைவிட பொங்கலைதான் நாங்க பெருசா கொண்டாடுவோம். நாலஞ்சு நாள்களுக்கு முன்னாடியிருந்தே இதுக்கான ஏற்பாடுகள்ல இறங்கிடுவோம். ஆனால் இந்த வருசம் எங்களுக்கு இப்படி ஒரு மோசமான நிலைமை. போராட்டம், கைதுனு அவதிப்பட்டுக்கிட்டு இருக்கோம். பண்டிகை சமயத்துல பஸ்கள் ஓடாததால, பொதுமக்களோட கோபத்துக்கு வேற நாங்க ஆளாகி நிற்கிறோம். உழைப்புக்கேத்த சம்பளம் இல்லைனுதான் எங்க குடும்பத்து ஆண்கள் வேலை நிறுத்ததுல ஈடுபட்டுக்கிட்டு இருக்காங்க.

பஸ் டிரைவர், கண்டக்டர் வேலைங்கறது, சொகுசான வேலையில்லை. எங்கயாவது ஆக்சிடென்ட்னு டி.வி-யில பார்த்தால்கூட எங்களுக்கு நெஞ்சு படபடக்கும். ஒவ்வொரு நாளும் வீட்டுக்குத் திரும்ப வர்ற வரைக்கும் பயந்துதான் கிடப்போம். எப்ப வேணும்னாலும் என்ன வேணும்னாலும் நடக்கலாம். பி.எஃப், எல்.ஐ.சி பணத்தைகூட ஒழுங்கா செலுத்தாமல் அரசாங்கம் எங்களை ஏமாத்தப் பார்க்குது. பொங்கல் நேரத்துல பஸ்கள் ஓடாததால் பொதுமக்கள் கஷ்டப்படுறாங்களேங்கற கவலை கொஞ்சம்கூட ஆட்சியாளர்களுக்கு இல்லை. இப்ப கூட எங்க கோரிக்கையைக் கண்டுக்கலைனா, வேற எப்பதான் கண்டுக்குவாங்க. வேலைநிறுத்தத்தை கைவிட்டால், எங்கள் கோரிக்கை இனிமேல் எப்பவுமே நிறைவேறாதுனு பயப்படுறோம். இதை தவிர எங்களுக்கு வேற வழி தெரியலை” எனக் கண்ணீர் கசிய பேசுகிறார்கள்.