Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ரூ.235 டிக்கெட் இப்போ ரூ.1,200... கிறங்கடிக்கும் ஆம்னி பஸ் கட்டணம்!

 

சென்னை போன்ற பெருநகரங்களில் பகட்டான வாழ்க்கை வாழ்ந்தாலும், பொங்கல் பண்டிகை வந்தவுடன் ஊருக்குச் சென்று விவசாயியாக மாறிவிடுகிறார்கள் இன்றைய இளைஞர்கள். பண்டிகை சீஸன் வந்தாலே இவர்கள்தாம் சில ஆம்னி பேருந்து உரிமையாளர்களுக்குத் தீனி. தீபாவளியைவிட பொங்கலுக்கு தமிழ்நாட்டில் பேருந்து கிடைப்பது கடினமான விஷயம். அதிலும், தமிழ்நாட்டின் தென் பகுதிகளுக்குச் செல்பவர்கள் ஒரு மாதத்துக்கு முன்னரே பேருந்தை முன்பதிவு செய்துவிடுகிறார்கள். தற்போது போக்குவரத்து ஓட்டுநர்களின் வேலைநிறுத்தம் நடைபெறுவதால், `பொங்கல் பண்டிகைக்கு இயக்கப்படும் சிறப்புப் பேருந்துகள் வழக்கம்போல் இயங்குமா?' என்ற சந்தேகம் மக்களிடையே உள்ளது. இந்தச் சந்தேகத்தை, சில ஆம்னி பஸ் நிறுவனங்கள் பயன்படுத்திக்கொள்கின்றன

ஆம்னி பேருந்து

கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்காக தஞ்சை சென்ற ஒருவர், ஆம்னி பஸ்ஸில் 800 ரூபாய் கட்டணமாகச் செலுத்தியதாகவும், இந்த ஆண்டு டிக்கெட் விலை 1,100 ரூபாயாக உள்ளது என்றும் கூறினார். இதுபற்றி சொந்த ஊருக்குச் செல்லும் ஒருசிலரிடம் விசாரித்தபோது அனைவருமே கடந்த இரண்டு நாளில் ஆம்னி பஸ் டிக்கெட் விலை 2 முதல் 3 மடங்கு அதிகரித்திருப்பதாகவே கூறுகிறார்கள். மேலும் அரசுப் பேருந்துகளை தற்காலிக ஓட்டுநர்களை வைத்து இயக்குவதால், அதில் பயணிப்பதற்குப் பதற்றமாக உள்ளது என்றும் கூறுகிறார்கள்.

சென்னையிலிருந்து ஈரோடு செல்ல கடந்த திங்கள்கிழமை 700 ரூபாய்க்கு முன்பதிவு செய்த அதே டிக்கெட், தற்போது 1,200 ரூபாயாக உள்ளது. அரசுப் பேருந்தில் இதே டிக்கெட்டின் விலை 235 ரூபாய். ஆனால், அந்தப் பேருந்துகளின் பராமரிப்பும் சொகுசும் சரியில்லாத காரணத்தினால், ஆம்னி பேருந்துகளை நாடிச் செல்கிறார்கள் மக்கள். வழக்கமாக, பண்டிகை நாள்கள் நெருங்கும்போது டிக்கெட்டின் விலை ஏறுவது சகஜம். ஆனால், தற்போது பேருந்து ஓட்டுநர்களின் வேலைநிறுத்தம் காரணமாக பயணச்சீட்டின் விலை இரண்டு மடங்கு அதிகரித்திருப்பதால், பலரும் சொந்த ஊருக்குச் செல்ல வேண்டுமா என யோசிக்கிறார்கள்.

சென்னையிலிருந்து திருநெல்வேலிக்குச் செல்ல ஏசி ஸ்லீப்பர் பேருந்தில் கடந்த ஆண்டு டிக்கெட்டின் விலை 1,700 முதல் 2,000 ரூபாய் இருந்தது. தற்போது ஸ்லீப்பர் அல்லாத ஏசி சீட்டர் பேருந்திலேயே 1,800 முதல் 2,000 ரூபாயாக உள்ளது. கடந்த 48 மணி நேரத்தில் ஆம்னி பஸ்களின் டிக்கெட் விலை 400 முதல் 1,000 ரூபாய் வரை அதிகரித்துள்ளது. 

பேருந்து வேலைநிறுத்தம்

இதுகுறித்து ஆம்னி பஸ் ஓனர்ஸ் மற்றும் ஆபரேட்டர்ஸ் அசோசியேஷன் செயலாளர் அன்பழகன் கூறுகையில், ``பண்டிகை தினங்கள் வரும்போது ரயிலுக்குப் பிறகு அதிக முன்பதிவு நடைபெறுவது ஆம்னி பேருந்துகளில்தான். தற்போது போக்குவரத்து ஓட்டுநர்களின் வேலைநிறுத்தத்தால் ஆம்னி பேருந்துகளில் கூடுதல் முன்பதிவுகள் நடைபெறுகின்றன. பண்டிகை தினங்களில் விலை ஏற்றம் வழக்கமான ஒன்று. அரசு ஆம்னி பஸ்களுக்கு டிக்கெட் கட்டணம் ஏதும் நிர்ணயிக்காததால் இந்தத் தொழிலாளர்களையும் மக்களையும் மனதில்வைத்து ஆம்னி பஸ் சங்கங்கள் ஒருங்கிணைந்து நாங்களே அனைத்து இடங்களுக்கும் டிக்கெட் கட்டணத்தை நிர்ணயிக்கிறோம்.

ஒவ்வொரு வட்டத்துக்கும் ஒரு மேற்பார்வையாளரை வைத்து இதைச் செயல்படுத்தியும் வருகிறோம். தற்போது நிலவும் போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தத்தைப் பயன்படுத்திக்கொண்டு சில ஆம்னி பஸ் நிறுவனங்கள், சங்கம் நிர்ணயித்த கட்டணத்தைவிட இரண்டு மடங்கு அதிகக் கட்டணம் நிர்ணயித்துள்ளனர். சமீபத்தில் அதிகக் கட்டணம் வசூலித்ததாக எங்களுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், 12 ஆம்னி பஸ் நிறுவனங்களின் மீது அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளோம். பல சிறிய நிறுவனங்கள், சங்க விதிமுறைகளுக்குக் கட்டுப்பட்டு நடந்துகொள்கிறார்கள். ஆனால், ஒருசில பெரிய ஆம்னி பஸ் நிறுவனங்கள், சங்கம் நிர்ணயித்த விலையைவிட அதிக விலையிலேயே டிக்கெட் விற்பனை செய்கிறார்கள். இந்நிலையில், எங்களால் அதிகாரிகளிடம் புகார் மட்டுமே செய்ய முடியும். இந்தப் பிரச்னைகள் வராமல் தடுக்க, அரசு அனைத்துத் தரப்பினரிடமும் ஆலோசித்து ஆம்னி பஸ்களுக்குக் கட்டணம் நிர்ணயிக்க வேண்டும்" என்று கூறினார்.

மேலும் சிறப்புப் பேருந்துகளை இயக்குவதற்காக, 1,000 ஆம்னி பேருந்துகளையும் 200 ஓட்டுநர்களையும் தமிழக அரசு கேட்டுள்ளதாகக் கூறினார். 

ஆம்னி பஸ்

வழக்கமான வார விடுமுறைக்குச் செல்லும் சிலரிடம் கேட்டபோது, ``ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் இருந்தாலும் பயணம் சிரமம் இல்லாமல் இருக்கும் என்பதால் முன்பதிவு செய்துவிடுகிறோம். ஆட்டோக்களுக்கு அரசுக் கட்டணம் நிர்ணயிப்பதுபோல ஆம்னி பஸ்களுக்கும் கட்டணம் நிர்ணயித்தால் அவ்வப்போது நடைபெறும் கட்டண உயர்வைத் தடுக்கலாம்'' என்றும் கூறுகிறார்கள். 

இரண்டு நாள்களுக்கே இரண்டு மடங்குக் கட்டணம் என்றால், இன்னும் ஒரு மாதம் இந்த வேலைநிறுத்தம் தொடர்ந்தால், விமான டிக்கெட்டுக்கு இணையாக ஆம்னி பஸ் டிக்கெட்டை விலை ஏற்றிவிடுவார்கள்போல!

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

இது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா?

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement