வெளியிடப்பட்ட நேரம்: 17:41 (11/01/2018)

கடைசி தொடர்பு:23:26 (11/01/2018)

'சர்ச்சைகளால் தமிழ் இருக்கை அமைவது ஓயப்போவதில்லை!'  - வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த மருத்துவர்.ஜானகிராமன்

ஹார்வர்டு பல்கலைக்கழகம்

ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைவதற்கான பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளன. இந்தநேரத்தில், தமிழ் இருக்கை அமைவதற்காகப் பாடுபடும் மருத்துவர்.ஜானகிராமன் கூறியதாகச் சிலர் அவதூறு தகவல்களைப் பரப்பி வருகின்றனர். ' உலகின் ஏழு செம்மொழிகளில் தமிழுக்கு மட்டுமே ஹார்வர்டில் இடம் இல்லை. தமிழ் ஆர்வலர்களின் துணையோடு அதனை விரைவில் சாத்தியப்படுத்துவோம். வதந்திகள் அவசியமற்றவை' என்கிறார் ஜானகிராமன். 

திருவாரூரைப் பூர்வீகமாகக் கொண்டவர் மருத்துவர்.ஜானகிராமன். பாரம்பர்யமான தமிழ் குடும்பத்தில் பிறந்து வளர்ந்து, முப்பது ஆண்டுகளுக்கு முன்பே அமெரிக்காவில் குடியேறிவிட்ட இதயநோய் சிறப்பு மருத்துவர் இவர். ' ஹார்வர்டில் தமிழ் இருக்கை அமைந்தால் உலகுக்கே நமது செம்மொழியின் அருமை புரியும்' என அமெரிக்காவாழ் தமிழர் வைதேகி அம்மையார் கூறியதைக் கேட்டு, அதற்கான முயற்சியில் களம் இறங்கினார். இதற்கு எதிராகச் சிலர் கிளம்பியபோது, ' யோகா சிறந்தது என ஹார்வர்டு அறிவித்த பிறகே, உலகம் அதனை ஏற்றுக் கொண்டது. அதேபோல், நமது தமிழ் மொழியின் சிறப்பை ஹார்வர்டு ஆராய்ந்து சொன்னால் உலகம் அதனை ஏற்றுக் கொள்ளும்' என விளக்கம் கொடுத்தார். இதனையடுத்து, இவரும் திருஞான சம்பந்தமும் இணைந்து தலா 5 லட்சம் டாலர்களைக் கொடுத்து தமிழ் இருக்கை முயற்சியைத் தொடங்கிவைத்தனர். இதற்காக, அறக்கட்டளை ஒன்றையும் நிறுவியுள்ளனர். இதன் தலைவராக மருத்துவர்.ஜானகிராமன் இருக்கிறார். 

தமிழுக்காக நடக்கும் முயற்சிகளை அறிந்த தமிழ் ஆர்வலர்கள் சிலர், இந்த முயற்சிகளை அடுத்தகட்டத்தை நோக்கி நகர்த்திச் சென்றார்கள். சட்டமன்றத் தேர்தல் நேரத்தில், அ.தி.மு.கவின் தேர்தல் அறிக்கையிலும் ஹார்வர்டு தமிழ் இருக்கைக்கு நிதி அளிப்பது குறித்து அறிவித்தார் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா. அடுத்து வந்த நாள்களில் அவர் இறந்ததும், இந்தமுயற்சிகளை தளராமல் முன்னெடுத்தார் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி பாலச்சந்திரன். இதன் பயனாக பத்து கோடி ரூபாயை ஒதுக்கியது தமிழக அரசு. இந்த முயற்சிகளுக்கு உறுதுணையாக இருந்து முடித்துக் கொடுத்ததில் பெரும்பங்கு வகித்தவர் தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் மா.ஃபா.பாண்டியராஜன். 

இந்நிலையில், கடந்த இரண்டு நாள்களாக ஹார்வர்டு தமிழ் இருக்கை குறித்த தகவல் ஒன்று வலம் வருகிறது. அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் குடியிருக்கும் சிவா அய்யாத்துரை என்பவர், ' ஹார்வர்டு தமிழ் இருக்கைக்கான முயற்சிகள் தேவையற்றவை என மருத்துவர்.ஜானகிராமனிடம் தெரிவித்தேன். அவரும் அதை ஏற்றுக் கொண்டார்' எனப் பதிவிட்டிருந்தார். தமிழைப் பூர்வீகமாகக் கொண்ட சிவா அய்யாத்துரையின் கருத்துகள், ஹார்வர்டு தமிழ் இருக்கைக்காக உழைத்துக் கொண்டிருக்கும் ஆர்வலர்கள் மத்தியில் வியப்பினையும் சற்று அதிர்ச்சியையும் அளித்தது. இதுகுறித்து நண்பர்கள் சிலர் அவரைத் தொடர்பு கொண்டபோது, விரிவான விளக்கம் ஒன்றையும் அளித்தார் மருத்துவர்.ஜானகிராமன்.

மருத்துவர்.ஜானகிராமன்

அவர் பேசும்போது, 'சிவா அய்யாத்துரை என்பவர் என்னுடன் பேசுவதற்கு முயற்சி எடுத்துக் கொண்டிருந்தார். அவர் பேச விரும்புவதாக நண்பர்களும் என்னிடம் தெரிவித்தனர். நானும், ' ஹார்வர்டு தமிழ் இருக்கைக்கு நன்கொடை அளிப்பதாக இருந்தால், பேசுவது மட்டுமல்ல நேரில் சென்று அவரைக் காணவும் தயாராக இருக்கிறேன். காரணம், ஹார்வர்டுக்கு அளிக்கும் தொகை சிறியதாக இருந்தாலும் பெரியதாக இருந்தாலும் அந்தத் தொகை அளிப்பவரின் உள்ளத்தை மட்டும்தான் நான் எண்ணிப் பார்ப்பேன். அதேநேரம், 'எனக்கு அறிவுரை கூற வேண்டும்' என அவர் விரும்பினால், அவரிடம் ஒன்றை மட்டும் சொல்வேன். பல அறிவுரைகளைக் கேட்டுத்தான் இந்த முயற்சியை நாங்கள் தொடங்கியிருக்கிறோம். தமிழ் இருக்கைக்கான 90 சதவிகித வேலைகள் முடிந்துவிட்டன. எங்களுக்குத் தேவையான 60 லட்சம் டாலரில் 54 லட்சம் டாலர்களைப் பெற்றுவிட்டோம். இன்னும் 6 லட்சம் டாலர்கள்தாம் பாக்கியிருக்கின்றன. எனவே, இந்த நிலையில் இதனைப் பற்றி விவாதிப்பதற்கு எதுவும் இல்லை' என்றேன். 

இதன்பின்னர் என்னைத் தொடர்பு கொண்டார் சிவ அய்யாத்துரை. தொலைபேசியில் ஒருவர் இணைப்பில் வந்த பிறகு, பேச முடியாது எனச் சொல்வதில் நியாயம் இல்லை. 'நீங்கள் தமிழ் இருக்கைக்குச் செலவழிப்பது வீண்' என்றார். ' ஏற்கெனவே நாங்கள் எடுத்த முடிவுகளின்படி செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். கருத்துகளை ஏற்றுக் கொள்ளும் மனப்பான்மை வேண்டும் என்பதால் நீங்கள் கூறும் தகவலைக் கேட்டுக் கொண்டிருக்கிறேன்' என பதிலளித்தேன். இந்தத் தகவலை அவர் வேறு வடிவில் வெளிப்படுத்திவிட்டார்.

பாலச்சந்திரன் ஐ.ஏ.எஸ்.ஒரு முக்கியமான விஷயம், ஹார்வர்டு தமிழ் இருக்கை என்பது எனக்கோ திருஞான சம்பந்தத்துக்கோ சொந்தமானது கிடையாது. அது லட்சோப லட்சம் தமிழர்களுக்குச் சொந்தமானது. இதற்காக நன்கொடை அளித்தவர்கள் உலகம் முழுவதும் இருக்கிறார்கள். சிறந்த காரியம் என்று உளமாற நானே உணர்ந்திருக்கிறேன். உலகம் முழுவதும் உள்ள தமிழர்களின் நன்கொடை மூலம் தொடங்கவிருக்கும் தமிழ் இருக்கை குறித்து நான் ஒருவன் மட்டும் வேறு எந்த முடிவையும் எடுக்க முடியாது. எடுக்கவும் மாட்டேன். இதுதெரிந்த பின்பும், இப்படிப்பட்ட தவறான பதிவினை அவர் வெளியிட்டது வருந்தத்தக்கது. இதைப் பற்றி வேறு எந்த விவாதத்திலும் ஈடுபடுவது பயனற்றது' என ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். 

ஹார்வர்டு தமிழ் இருக்கைக்கான ஆலோசனைக் குழுவின் உறுப்பினர் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி பாலச்சந்திரனிடம் பேசினோம். " தமிழ் இருக்கைக்கான முயற்சிகள் நிறைவடையும் நேரத்தில் இதுபோன்ற அவசியமற்ற கருத்துகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. 'ஹார்வர்டு தமிழ் இருக்கைக்கு நன்கொடை அளிக்க வேண்டும்' என சில வாரங்களுக்கு முன்பாக, சிவா அய்யாத்துரையிடம் ஒருவர் கேட்டிருக்கிறார். அப்போதுதான் இப்படியொரு முயற்சிகள் நடப்பதே அவருக்குத் தெரியும். தற்போது பாஸ்டன் நகர செனட் தேர்தலில் நிற்பதற்காக, நன்கொடைகளைத் திரட்டிக் கொண்டிருக்கிறார் சிவா அய்யாத்துரை. இதுகுறித்த அறிவிப்பையும் அவர் வெளியிட்டிருக்கிறார். தமிழ் இருக்கைக்கு மாறாக அவர் ஏன் இந்தக் கருத்துகளைத் தெரிவித்தார் என்பது அவருக்கே வெளிச்சம். இதுபோன்ற கருத்துகளால் எங்களது முயற்சி ஒருபோதும் தடைபடாது" என்றார் உறுதியாக. 


டிரெண்டிங் @ விகடன்