`தீபாவால் பல லட்சங்களை இழந்துவிட்டேன்!' - கண்ணீர்வடிக்கும் முட்டை வியாபாரி 

தீபா

 தீபாவால் பல லட்சம் ரூபாயை இழந்துவிட்டேன் என்று சென்னையைச் சேர்ந்த முட்டை வியாபாரி ராமச்சந்திரன் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார். 

சென்னை ஈஞ்சம்பாக்கத்தைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவர், சென்னை கமிஷனர் அலுவலகத்தில் இன்று கொடுத்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது, 

சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் முட்டை மொத்த வியாபாரம் மற்றும் மளிகைக் கடை நடத்திவருகிறேன். எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவையில் ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளராகப் பணியாற்றினேன். தீபாவின் கார் டிரைவர் ராஜா என்னை தொடர்புகொண்டு தி.நகர், சிவஞானம் தெருவில் உள்ள தீபா வீட்டைப் பராமரித்து மராமத்து வேலை செய்ய 50 லட்சம் ரூபாய் கடனாக வேண்டும் என்று கேட்டார். 4.3.2017 அன்று சென்னை அடையாறில் வைத்து பணத்தைக் கொடுத்தேன். மேலும், பல கட்டங்களில் ராஜா மூலம் தீபாவுக்குப் பணம் கொடுத்துள்ளேன். நான் கொடுத்த 50 லட்சம் பணத்தை 2017-ம் ஆண்டு மார்ச் மாதம் தீபாவின் கணவர் மாதவன் திருடிவிட்டதாகத் தீபாவும் ராஜாவும் என்னிடம் கூறினர். இதனால், அவசரச் செலவுக்காக 10 லட்சம் ரூபாய் கொடுத்தேன். கட்சி அலுவலகம் திறந்தது, கொடி ஏற்றியது என்ற வகையில் பல லட்சங்களை இழந்துள்ளேன். அந்தப்பணத்தை நான் திரும்பக் கேட்கவில்லை. தீபா, அவரின் கார் டிரைவர் ராஜா ஆகியோர் என்னிடம் கடனாகப் பெற்ற பணத்தை மட்டுமே கேட்கிறேன். என்னிடமிருந்து 1.12 கோடி ரூபாய் வரை தீபாவும் ராஜாவும் மோசடி செய்துள்ளனர். எனவே, பணத்தைத் திரும்பப் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். 

 ராமசந்திரன் கூறுகையில், "என்னுடைய தந்தை நயினார் அ.தி.மு.க-வில் இருக்கிறார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, தீபாவின் தலைமையில் செயல்பட்டேன். என்னிடம் கடனாக வாங்கிய 1.12 கோடி பணத்தை தீபாவிடம் திரும்பக் கேட்டதால் என்னைக் கட்சிப் பதவியிலிருந்து நீக்கிவிட்டார். அதோடு என்மீது தி.நகர் காவல் நிலையத்தில் பொய்ப் புகார் கொடுத்தார். அவர் கொடுத்தது பொய் புகார் என்று சிசிடிவி கேமரா பதிவு மூலம் தெரிந்தது. மேலும், பணத்தைத் திரும்பக் கேட்பதால் எனக்கு மிரட்டல்கள் வருகின்றன. நான் கடன் வாங்கிதான் தீபாவுக்குப் பணம் கொடுத்தேன். வாங்கிய கடனுக்குத் தற்போது மாதம் 3 லட்சம் ரூபாய் வட்டி செலுத்திவருகிறேன். தீபாவிடம் கொடுத்த பணத்துக்கு என்னிடம் ஆதாரம் இருக்கிறது" என்றார். 

 
ராமசந்திரனின் வழக்கறிஞரும் தீபா பேரவையின் முன்னாள் மாநிலத் தலைமை செய்தித் தொடர்பாளருமான பசும்பொன்பாண்டியன் கூறுகையில், ராமசந்திரனிடம் மட்டுமல்ல பலர், தீபாவை நம்பி வந்து ஏமாந்துள்ளனர். பதவிகளைக் கொடுப்பதாக ராஜா பலரிடம் பணம் வாங்கியுள்ளார். ராமசந்திரனிடமிருந்து ஒரு கோடி ரூபாய்க்கு மேல் தீபாவும் ராஜாவும் வாங்கியுள்ளனர். ஏற்கெனவே இதுதொடர்பாகத் தீபாவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளேன். ஆனால், அதற்கு அவர் பதிலளிக்கவில்லை போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நீதிமன்றத்தில் வழக்கு தொடருவோம்" என்றார். 
ராமசந்திரன் புகார் தொடர்பாகத் தீபாவின் செல்போனுக்கு பலமுறை தொடர்புகொண்டோம். ஆனால், அவர் பதிலளிக்கவில்லை. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!