போக்குவரத்துத் தொழிலாளார் போராட்டம் முடிவுக்கு வந்தது! கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி தகவல்

ஊதிய உயர்வு பேச்சுவார்த்தைத் தொடர்பாக அரசு மற்றும் தொழிற்சங்கங்கள் இடையே பேச்சுவார்த்தை நடத்த ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி பத்மநாபனை சென்னை உயர் நீதிமன்றம் நியமித்தது. 

ஊதிய உயர்வு மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு நிலுவையில் உள்ள பணபலன்களை உடனடியாக அளிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்துத் தொழிலாளர்கள் கடந்த 8 நாள்களாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாகத் தொடரப்பட்ட வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, வேலைநிறுத்தப் போராட்டத்தைக் கைவிட ஊதிய உயர்வு ஒப்பந்தம் தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்த ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவரை மத்தியஸ்தராக நியமிக்க வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகள் போக்குவரத்துத் தொழிற்சங்கங்கள் சார்பாக வைக்கப்பட்டன.

இதற்குப் பதிலளித்த அரசுத் தரப்பு, ‘விடுப்பு நாள்களில் ஊதியம் வழங்க முடியாது என்றும் தொழிலாளர்கள் மீது போடப்பட்ட குற்றவழக்குகளை வாபஸ் பெறமுடியாது என்றும் தெரிவிக்கப்பட்டன. இதனால், வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக முடிவுக்கு வருவதில் குழப்பம் ஏற்பட்டது. அப்போது குறுக்கிட்ட நீதிபதி, ஊதிய ஒப்பந்தப் பேச்சுவார்த்தையில் மத்தியஸ்தம் செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி பத்மநாபனை நியமித்து உத்தரவிட்டனர். மேலும், போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கான ஊதிய உயர்வு எவ்வளவு என்பதை அவர் முடிவு செய்வார். இதை ஏற்று தொழிலாளர்கள் அனைவரும் பணிக்குத் திரும்ப வேண்டும். இதுவே நீதிமன்றத்தின் விருப்பம் என்று தெரிவித்தார். இதையடுத்து போக்குவரத்துத் தொழிலாளர்கள், தங்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தைக் கைவிட்டுப் பணிக்குத் திரும்ப இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பான வழக்குகளை 4 வாரங்களுக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது. 

இந்தத் தகவலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினரும் மாநிலங்களவை உறுப்பினருமான டி.கே.ரங்கராஜனும் உறுதிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், ‘போக்குவரத்துத் தொழிலாளர்கள் போரா ட்டம் முடிவுக்கு வந்தது. ஊதிய பிரச்சனை மத்தியஸ்துக்கு விட மாநில அரசு ஏற்பு. உறுதியாகப் போராடிய அனைத்துப் பிரிவு தொழிலாளர்களுக்கும் வாழ்த்துகள். ஒத்துழைத்த பொதுமக்களுக்கு நன்றி’ என்றும் குறிப்பிட்டுள்ளார். 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!