அப்போ ஆர்.கே.நகர் வேட்பாளர்... இப்போ அரசுப் பேருந்து ஓட்டுநர்...! கோவையைக் கலக்கும் நூர் முகமது

தேர்தல் மன்னன் நூர் முகமது, கோவையில் அரசுப் பேருந்து ஓட்டி வருகிறார்.

நூர் முகமது

ஆர்.கே.நகராக இருந்தாலும் சரி, தொண்டாமுத்தூராக இருந்தாலும் சரி, தமிழகத்தில் எங்கு இடைத்தேர்தல் நடந்தாலும், போட்டியிடும் தேர்தல் மன்னன்தான் நூர்முகமது. கோவை மாவட்டம், கிணத்துக்கிடவு தொகுதியைச் சேர்ந்தவர் நூர் முகமது. பெரிய அளவிற்கு மக்களிடம் செல்வாக்கு இல்லையென்றாலும், தனி மனிதராக அவரது பகுதிகளில் முடிந்தளவுக்குக் கல்வி மற்றும் சமூகப்பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இதுவரை நடந்த தேர்தல்களில் பல தடவை போட்டியிட்டு தோற்றாலும் , ஒவ்வொரு முறை வேட்பு மனுத்தாக்கல் செய்யும் போது, மாட்டு வண்டி, ராஜா வேஷம் போன்ற பல கெட்டப்புகளில் வந்து மக்களைக் கவர்வதில் வல்லவர். கடந்த மாதம் நடைபெற்ற ஆர்.கே.நகர் தேர்தலில் கூட, குதிரையில் வந்து வேட்பு மனுத்தாக்கல் செய்து, அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

இந்நிலையில், போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டத்தால், மக்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, தற்காலி ஓட்டுநர்கள் மூலம் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனிடையே, தேர்தல் மன்னன் நூர் முகமது, கோவை ரயில் நிலையம் முதல் கணுவாய் வரை, 11-ம் நம்பர் பேருந்தை கடந்த நான்கு நாள்களாக ஓட்டி வருகிறார்.

நூர் முகமது

இது குறித்து நூர் முகமதுவிடம் பேசினோம், "பள்ளி, கல்லூரி மாணவ,  மாணவிகள் பேருந்து இல்லாமல் பாதிக்கப்படாமல் இருக்க தற்காலிக ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறேன். இதை, மக்களுக்கு சேவை செய்யும் ஒரு நேரடி வாய்ப்பாகதான் நான் பார்க்கிறேன். அரசோடு இணைந்து மக்கள் செய்யும் பணியே மக்களாட்சி. மக்களுக்குச் சேவை செய்யவே பேருந்து ஓட்டுகிறேன். இதன்மூலம் கிடைக்கும் சம்பளத்தை, ஆதரவற்றோருக்கு வழங்குவேன் "என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!