வெளியிடப்பட்ட நேரம்: 21:15 (11/01/2018)

கடைசி தொடர்பு:16:41 (30/06/2018)

`நிராகரிப்படும் தமிழ்த் தலைவர்களின் சிற்பங்கள்” - கொதிக்கும் தமிழ் உணர்வாளர்கள்

 

 

தமிழகத்தில் உள்ள ரயில் நிலையங்களில்,சம்பந்தப்பட்ட ஊர்களின் பெயர்ப் பலகைகளை இந்தியில் வைக்க, அது பலத்த சர்ச்சையைக் கிளப்பி வருகிறது. குறிப்பாக, கோவை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் அப்படி இந்தியில் பெயர்ப் பலகை வைக்க, அங்குள்ளவர்களைக் கொதிநிலைக்குக் கொண்டுபோனது. இந்நிலையில், கரூர் நகராட்சி நிர்வாகம் தமிழ்த் தலைவர்களைப் புறக்கணித்து, அவமதிப்பதாக இங்குள்ள தமிழ் உணர்வாளர்கள் கொந்தளிக்கத் தொடங்கியுள்ளனர்.

 


 

'இது என்ன புதுக்கரடி விடுகிறார்கள்' என்று, விவகாரத்தை விசாரித்தோம். கரூர் நகராட்சி அலுவலகத்திற்கு எதிரே, நகராட்சி தமிழ் ராஜேந்திரன்கட்டுப்பாட்டில் ஒரு நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி இருக்கிறது. இந்தப் பள்ளியின் முகப்பு சிமென்ட் வளைவின் இருபுறமும், இருபுறம் உள்ள காம்பவுண்ட் சுவர்களிலும் தேசியத் தலைவர்களின் ஓவியச் சிற்பங்களை நகராட்சி நிர்வாகம் அமைத்து வருகிறது. இருபதுக்கும் மேற்பட்ட தலைவர்களின் ஓவியச் சிற்பங்களை அமைத்திருக்கிறது. அதோடு, அந்த ஓவியச் சிற்பங்களுக்கு அருகில் அவர்கள் வாழ்ந்து, மறைந்த ஆண்டுகளும் குறிப்பிடப்பட்டுள்ளன. அதில்தான்,"பதினைந்துக்கும் மேற்பட்ட தேசியத் தலைவர்களின் ஓவியச் சிற்பங்களை அமைத்திருக்கிறார்கள். ஆனால், தமிழ்த் தலைவர்கள் சிற்ப ஓவியங்களை அதிகமாக அமைக்கவில்லை. குறிப்பாக,'பெரியார்,அண்ணாதுரை உள்ளிட்ட தலைவர்களுக்கு ஓவியச் சிற்பம் அமைக்க வேண்டும் என்று' கோரிக்கை வைத்தோம். ஆனால், அதை கரூர் நகராட்சி நிர்வாகம் நிராகரித்துவிட்டது. இங்கே நடப்பது திராவிடக் கட்சி ஆட்சிதானா என்று சந்தேகமாக இருக்கிறது" என்று வெடிக்கிறார்கள் தமிழ் உணர்வாளர்கள்.
 இதுபற்றி, நம்மிடம் பேசிய தமிழ் உணர்வாளர்கள் அமைப்புகள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் 'தமிழ்' ராஜேந்திரன்,
 "இந்தப் பள்ளியின் சிமென்ட் வளைவில்,காம்பவுண்ட் சுவர்களில் தேசியத் தலைவர்களின் ஓவியச் சிற்பங்களை அமைப்பதே மெச்சத்தகுந்த செயல்தான். நகராட்சி நிர்வாகத்தின் இந்த முயற்சியை பாராட்டுகிறோம். இந்தியாவைக் கட்டமைத்த, இந்திய தேச விடுதலைகளில் தங்கள் இன்னுயிர் நீத்த மகாத்மா காந்தி,நேதாஜி, பகத்சிங் என்று தேசியத் தலைவர்களின் ஓவியச் சிற்பங்களை அமைப்பது வருங்கால மாணவச் செல்வங்களுக்கு தேசப்பற்றை ஊட்டி வளர்க்கும் செயலாக அமையும். அதனால், மகாத்மா காந்தி, ரவீந்தர்நாத் தாகூர், மொரார்ஜி தேசாய், லாலா லஜபதிராய், பாலகங்காதர திலகர் என்று தேசியத் தலைவர்களின் ஓவியச் சிற்பங்களை அமைத்ததை நாங்கள் எதிர்க்கவில்லை. 'அவர்களிடம், ஓவியச் சிற்பங்களை ஏன் இங்கே அமைத்தீர்கள்' என்று  நாங்கள் கேள்வியும் எழுப்பவில்லை. அதேநேரம், தமிழகத்தைச் சேர்ந்த எண்ணற்ற தலைவர்கள் தேச விடுதலைக்காகவும், தமிழர் மீட்சிக்காகவும், சமூகத்தைத் துண்டாட நினைக்கும் சாதி, மத பிரிவினைகளை வேரறுக்கவும்,பெண் விடுதலைக்காகப் பாடுபடவும் செய்திருக்கிறார்கள். 'அவர்களின் ஓவியச் சிற்பங்களையும் அமைக்க வேண்டும்’ என்று கரூர் நகராட்சி கமிஷனரிடம் சொன்னோம். அவர் அதை காதிலேயே வாங்கிக் கொள்ளவில்லை. 
 

தொடர்ந்து ,"அதற்கெல்லாம் இடம் இல்லை" என்று சாதாரணமாகப் பதில் சொன்னார். அதேபோல், பள்ளி முகப்பில் உள்ள சிமென்ட் வளைவில் ஒருபுறம் மகாத்மா காந்தியையும், மறுபுறம் மற்றொரு தேசத்  தலைவர் ஓவியச் சிற்பத்தையும் அமைக்க முயற்சி செய்யுங்கள். அத்துடன், மறைந்த ஜனாதிபதி அப்துல்கலாம் ஓவியச் சிற்பத்தை இடதுபுற காம்பவுண்ட் சுவரில் அமைக்க முயற்சி செய்தார்கள். அதனால், கமிஷனரிடம்,'மகாத்மா காந்தி சிற்பத்தையும், மறுபக்கம் அப்துல்கலாம் சிற்பத்தையும் அமைக்க வேண்டுமென்று’  சொன்னோம். அவர் அதைச் செய்யாததால் போராட்டத்தை அறிவித்தோம்.
 இதனை அடுத்து, அப்துல்கலாம் சிற்பத்தை சிமென்ட் வளைவில் ஒருபக்கம் அமைத்தார்கள். தொடர்ந்து,சிற்பங்களைப் பெரிதாக அமைக்காமல், சின்னதாக அமைத்தால் , தமிழ்த் தலைவர்கள் சிற்பங்களையும் அமைக்க இடம் கிடைக்கும் என்று சொன்னோம். குறைந்தபட்சம் காமராஜர், அண்ணா, பெரியார் சிற்பங்களையாவது அமைக்கவேண்டுமென்று சொன்னோம். காம்பவுண்ட் சுவரில் அப்துல்கலாம் சிற்பத்தை முதலில் அமைக்க இருந்த இடத்தில், காமராஜர் சிற்பத்தை அவசரம் அவசரமாக அமைத்திருக்கிறார்கள். தமிழுக்கும் தமிழ்ச் சமூகத்துக்கும் தொண்டு செய்த பெரியாருக்கும், நம் மாநிலத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்து, தமிழுக்கு எண்ணற்ற நன்மைகளைத் தேடித் தந்த அறிஞர் அண்ணாவுக்கும் சிற்பம் அமைக்கவில்லை. வேறு எந்தத் தமிழ்த் தலைவர்களின் சிற்பங்களையும் அமைக்கவில்லை. தமிழ்நாட்டில் தமிழ்த் தலைவர்களை நாமே மதிக்கவில்லையென்றால்,வருங்காலச் சந்ததியினர் மத்தியில் அவர்களின் வரலாறு இருட்டடிப்பு செய்யப்படும் நிலை வரலாம். 

 தமிழ்த் தலைவர்களின் சிற்பங்கள்

தமிழகத்தில் மாறி மாறி நடப்பது திராவிடக் கட்சிகளின் ஆட்சிதான். ஆனால், திராவிடக் கட்சியை வடிவமைத்து, தமிழகத்தில் காலூன்ற வைத்த அண்ணாவுக்கே இங்கே சிற்பம் அமைக்கத் தயங்கினால், உண்மையில் இங்கே நடப்பது திராவிட ஆட்சிதானா என்ற சந்தேகம் வருகிறது. அதேபோல், பெருந்தலைவர் காமராஜருக்கே நாங்கள் கடுமையாகப் போராடித்தான் சிற்பம் அமைக்க முடிந்தது. 'தேசமெங்கும் தங்கள் பிடி' என்ற கொள்கையோடு இந்தியாவை பா.ஜ.க அரசு கட்டமைக்க நினைத்து, 65-களில் நாம் எதிர்த்த இந்தியின் ஆதிக்கத்தை மறுபடியும் தமிழகத்தில் உள்ள ரயில்வே நிலையங்களில் திணிக்கிறது. இன்னொருபக்கம், தமிழகத் தலைவர்களை வரலாற்றிலிருந்து  அறியாத வகையில் பிரித்தெடுக்கும் காரியத்தில் இறங்கியிருக்கிறது. மத்தியில் ஆள்பவர்கள் தமிழ்த் தலைவர்களின் மாண்புகளைக் கூட வரலாற்றிலிருந்து பிரித்தெடுக்கும் இதுபோன்ற காரியங்களில் ஈடுபடத் தொடங்கி இருக்கிறார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது. தமிழ்த் தலைவர்களின் ஓவியச் சிற்பங்களையும் இங்கே உடனே அமைக்க வேண்டும். தமிழுக்கும்,தமிழ்த் தலைவர்களுக்கும் தொடர்ந்து தீங்கு இழைக்கப்பட்டால்,தமிழ்ப் புரட்சி வெடிக்கும்" என்றார் சூடாக!.
 

இதுசம்பந்தமாக,கரூர் நகராட்சி ஆணையர் அசோக்குமாரிடம் விளக்கம் கேட்க முயன்றோம். பலமுறை முயன்றும் முடியவில்லை. "சார்,பிஸியாக உள்ளார்" என்ற தகவலே சொல்லப்பட்டது.
 

           
 


டிரெண்டிங் @ விகடன்